புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 26 ஆண்டுகளாக பணிபுரியும் மருத்துவர் இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.
கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிவோரின் உயர் கல்விக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுமென மத்திய சுகாதாரத் துறை அறிவித் திருந்தும்கூட பலர் கிராமப் புறங் களில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதில்லை. இதனால் கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்து வர்களின் காலிப் பணியிடங்கள் அதிகமாகவே உள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டி.நவரத்தினசாமி கூறியது:
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் தஞ்சாவூர் அரசு மருத் துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு கடந்த 1990-ல் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தது முதல் அங்கேயே பணிபுரிந்து வருகிறேன். வேறெந்த மருத்துவமனைக்கும் செல்வில்லை.
பள்ளியில் படிக்கும்போதே மருத்துவராக வேண்டும். ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்பதால் நகர் பகுதிக்கு செல்லவில்லை.
இந்தப் பகுதியில் தொடர்ந்து சேவை செய்துவருவதால் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
தொடக்கத்தில் இங்கு, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் 2 மட்டுமே இருந்தன. அதேபோல, பரிசோதனை கருவிகள் அவ்வளவாக இல்லை. ஆனால், தற்போது 250-க்கும் மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் கிடைக்கின்றன.
அதே போல, ஏராளமான பரிசோதனை கருவிகளும் வந்து விட்டன. மருத்துவத் துறையில் வசதிகள் குறைந்த காலத்தி லும், வசதிகள் பெருகிய காலத்திலும் பணியாற்றியதால் ஏராளமான மாற்றங்களை உணர முடிந்துள்ளது.
தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றியதால் தொடர் சிகிச்சையின் மூலம் பலர் குணமடைந்துள்ளனர். மருத்துவருக்கும், மக்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.
நோயாளிகள் மருத்துவர் களையும், மருத்துவர்கள் நோயா ளிகளையும் அனுசரித்துச் சென்றால் மட்டுமே மருத்துவ சேவை திருப்திகரமாக இருக்கும். இளம் மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்காகச் சேவையாற்ற வேண்டும் என்றார்.
இம்மாத இறுதியில் இம் மருத்துவர் ஓய்வு பெற்றுச் செல்வது இப்பகுதியினருக்கு இழப்புதான் என்கின்றனர் காரையூர் பகுதி மக்கள்.
No comments:
Post a Comment