அபூர்வ வகை 'பாம்பே ஓ' ரத்தம் உடையவருக்கு அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மருத்துவமனை சாதனை
ஒய். ஆண்டனி செல்வராஜ்
தென் தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அபூர்வ `பாம்பே ஓ’ ரத்த வகையை சேர்ந்தவருக்கு, அதே வகை ரத்தம் செலுத்தி இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ உள்ளிட்டவற்றின் பாசிட்டிவ், நெகட்டிவ் சார்ந்த 8 வகைகள் இருக்கின்றன. ரத்தப் பரிசோதனையில் பெரும்பாலும் எல்லோருக்கும் இந்த ரத்த வகைகளே கண்டறியப்படுகின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் இதய அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சக்திவேல் (52) என்பவருக்கு அபூர்வ `பாம்பே ஓ’ வகை ரத்தம் கண்டறியப்பட்டது. அவருக்கு தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அதே வகை ரத்தம் செலுத்தி மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்த வகை ரத்தம் கிடைப்பது அபூர்வம் என்பதால் இவருக்கு ரத்தம் வழங்க சென்னை, சேலம் பகுதிகளில் இருந்து பாம்பே ஓ வகை ரத்தக் கொடையாளர்களை மருத்துவர்கள் தேடிக் கண்டுபிடித்து வரவழைத்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கித் துறை தலைவர் பேராசிரியர் எம்.சிந்தா கூறியது: உலகளவில் 1952-ம் ஆண்டு பாம்பேயில் முதன்முதலில் இந்த `பாம்பே ஓ’ வகை ரத்தம் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பேயில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த ரத்த வகைக்கு `பாம்பே ஓ’ வகை ரத்தம் எனப் பெயரிடப்பட்டது.
இந்த ரத்த வகை இந்தியாவில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கும், ஐரோப்பிய நாடுகளில் 1 லட்சம் பேரில் ஒருவருக்கும் இருக்கலாம். ஏ, பி, ஏபி, ஓ வகை பாசிட்டிவ், நெகட்டிவ் ரத்த வகையை சார்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், இந்த பாம்பே ஓ ரத்தவகையை சார்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடை யாளப்படுத்தப்படாமல் இருப்பதால் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் மருத்துவ உலகில் அபூர்வமானவர்களாகக் கருதப் படுகின்றனர்.
இந்த ரத்தக் கொடையாளர்கள் தமிழ கத்தில் வெறும் 30 பேர் மட்டுமே உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரத்த வகையை சார்ந்த ஒருவர் கண்டறியப்பட்டு தென்னி ந்தியாவிலே முதல்முறையாக அவருக்கு அதே வகை ரத்தம் செலுத்தி இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்றார்.
`பாம்பே ஓ’ ரத்த வகையை கண்டறிவது அவசியம்
பேராசிரியர் எம்.சிந்தா மேலும் கூறியது: சாதாரணமாக ஓ குருப் ரத்த வகையில் மட்டுமில்லால் அனைத்து வகையிலும் ஹெச் ஆன்டிஜென் இருக்கும். இந்த ஹெச் ஆன்டிஜென் இல்லாததையே பாம்பே ஓ ரத்த வகை எனச் சொல்கிறோம். இந்த வகை ரத்தத்தை சாதாரண ரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியாது. ஆன்டி ஹெச் சீரா என்ற ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இதில்தான், பாம்பே ஓ வகை ரத்தமுடையவர்களை கண்டறிய முடியும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வகை பரிசோதனை செய்யப்படாததால் பாம்பே ஓ வகை ரத்தம் உடையவர்கள், ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் என்றே நினைத்துக் கொண்டிருப்பர். இவர்கள் மற்றவர்களுக்கு ரத்தம் தரும்போதும், மற்றவர்களிடம் இருந்து ரத்தம் பெறும்போதும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போதே இவர்களுக்கு பாம்பே ஓ வகை ரத்தம் இருப்பது கண்டறியப்படும். இவர்களுக்கு மாற்றுவகை ரத்தம் செலுத்தினால் இறந்துவிடுவர். அதனால், ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் உடையவர்கள் தன்னுடைய ரத்த வகை பாம்பே ஓ வகை ரத்தம்தானா என்பதை பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றார்.
No comments:
Post a Comment