வீழ்த்தியது... கனிமவள கணக்கு! விசுவாசத்தால் பலிகடா ஆன ஐ.ஏ.எஸ்.!
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் ‘டிட்கோ’ தலைவர் - நிர்வாக இயக்குநருமான ஞானதேசிகன் மற்றும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சுரங்கம் - கனிமவளத் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் ஆகியோரின் திடீர் சஸ்பெண்ட் ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக இருந்த இவர்களின் சஸ்பெண்ட் குறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, பிரமிப்பாக அடுக்குகிறார்கள். “இரண்டு ஐ.ஏ.எஸ்-கள் சஸ்பெண்ட் என்பதோடு நின்றுபோகிற விஷயமாக இது தெரியவில்லை. அடுத்தடுத்து சில அதிரடி நடவடிக்கைகளும் இனி இருக்கலாம்” என்றனர்.
“அரசியல் சிக்கலில் இருக்கும் ஒரு தொழிலதிபரின் கனிமவளங்கள் குறித்த ‘முக்கிய’ ஆவணங்களை அரசின் விஜிலென்ஸ் விங் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியது. சுரங்கம் மற்றும் கனிமவளங்கள் துறை ஆணையரான அதுல் ஆனந்திடம், அதே விவரங்கள், ஆவணங்கள் குறித்து கடந்த ஒரு மாதகாலமாக விவரம் கேட்டு அரசு நெருக்கியும் அவரிடமிருந்து இதுபற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதுல் ஆனந்த், அரசுக்கு அளித்த ரிப்ளையைவைத்து அந்தத் தொழிலதிபரின் மீது, சிறு சண்டை வழக்கைக்கூடப் பதிய முடியாது. அவ்வளவு ‘வீக்’கான விவரங்கள்தான் அதுல் ஆனந்திடமிருந்து வந்திருந்தது.
அவரிடம் இதுகுறித்து இறுதியாக, (திங்கட்கிழமை 29.8.2016 - மாலை ) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், நேரில் அழைத்து விவரம் கேட்டிருக்கிறார். அப்போதும், போதிய விவரங்கள் அதுல் ஆனந்திடம் இல்லை. இதுகுறித்து முதல்வருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். அதுல் ஆனந்த் கொடுக்காத தகவல்களைவிடக் கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் ஆளும் கட்சியின் சமீபத்திய எதிரியான சசிகலா புஷ்பா எம்.பி-யிடம் இருப்பதாக ஒரு தகவல் வரவே, அதிகார மையம் சூடாகிவிட்டது. பல ஆண்டுகளாகவே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும், சுரங்கம் - கனிமவளத் துறை ஆணையாளர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தவரிடம் இருக்க வேண்டிய விரல்நுனி விவரங்கள், இப்படி இடம் மாறி இருந்தது.
பிரபல கனிம தொழிலதிபரிடம் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலர் தஞ்சம் புகுந்துள்ளதாக வெளியான தகவல்களும் இதனுடன் சேர்ந்துகொள்ள, அது ஆட்சி மையத்தின் கோபத்தை பன்மடங்கு எகிறவைத்தது.
இன்னொரு புறம், தென்மாவட்ட நாடார் இன மக்களைத் தன் பக்கம் இழுப்பதுபோல் சசிகலா புஷ்பா காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பது, அவர் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்பது என்று துணிச்சலாக வலம் வந்ததும் இந்தக் காரணத்தால்தான் என்றும் தகவல்கள் தீயாய்ப் பரவியது.
அ.தி.மு.க-வைவிட்டு சசிகலா புஷ்பா நீக்கத்தின் பின்னர், நாடார் சமூக மக்கள் அ.தி.மு.க மீது மாற்றுக் கருத்தைக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதால்தான் அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் ஆன கையோடு, அதே தென் மாவட்ட நாடார் இனத்தைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனை மந்திரி பதவிக்குக் கொண்டு வரவைத்ததும்” என்கின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் இருந்த ஞானதேசிகன், கூடுதல் தலைமைச் செயலாளராகி, அதன்பின் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்தவர். தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் பணி ஓய்வுபெற்று, அரசு ஆலோசகரானதும் தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர் மோகன்வர்கீஸ் சுங்கத். அவர் பொறுப்புக்கு வந்து சரியாக 9 மாதங்கள்கூட ஆகாத நிலையில், மின்வாரியத் தலைவராக பொறுப்பில் இருந்த பி.எஸ்.ஞானதேசிகனை அ.தி.மு.க அரசு தலைமைச் செயலாளர் பதவியில் அமரவைத்தது.
கடந்த ஜூன் 8-ம் தேதி திடீரென ஞானதேசிகன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக சேர்மனாக போஸ்டிங் செய்யப்பட்டார். முதல்வரின் செயலாளராக அப்போது இருந்த ராம் மோகன ராவ், தலைமைச் செயலாளராகக் கொண்டு வரப்பட்டார். அதே ராம் மோகன ராவ் ஆணைப்படி பி.எஸ்.ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ‘அதுல் ஆனந்த், ஞானதேசிகன் ஒன்றேபோல் சஸ்பெண்ட் ஆனதற்கு என்ன காரணம்?’
அரசு வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஞானதேசிகன், தலைமைச் செயலாளர் என்ற உச்சத்தில் இருந்தபோது அவர் சொல்வதைத் தட்டாமல் செய்யும் அன்புக்குரியவராக இருந்தவர் அதுல் ஆனந்த். அதனால்தான் அவரிடம் சில, பல விஷயங்கள் அரசு சார்பில் கேட்கப்பட்டன. குறிப்பாக கனிமவளம் சார்ந்த விஷயங்கள்... கனிம தொழில் சார்ந்த பிரபலம் குறித்தும் அப்போது அவரிடம் கேட்கப்பட்டது. எதற்கும் அதுல் ஆனந்த் அசைந்து கொடுக்கவில்லை. முன்னதாக ஞானதேசிகனிடம், சில விஷயங்களை முக்கியமான நபர்கள் மூலம், அதிகாரமையம் கேட்டு வாங்கிவிட்ட நிலையில், அதுல் ஆனந்த், அதில் கால்பங்கு அளவுக்குக்கூடச் சொல்லாமல் அநியாயத்துக்கு விசுவாசத்தைக் காட்டிவிட்டார். அவர் தரப்பில் இருந்து சிறிதளவுகூட விஷயம் வரவில்லை. அதன் விளைவே இந்த சஸ்பெண்ட்... இது முடிவல்ல, தொடக்கம்தான்” என்று அதிரவைக்கின்றனர்.
அரசின் தரப்பில் இதுவரையில் சஸ்பெண்டுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஓர் ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்தவர் மீது, அடுத்த ஆட்சியாளர்கள்தான் வழக்குப் பதிவர். சஸ்பெண்ட் செய்யும் அளவுக்குப் போவர்... ஆனால், முதல் முறையாக அதே ஆட்சியாளர்களால், அதே தலைமைச் செயலாளர் (மாஜி) காலி செய்யப்பட்டிருக்கிறார்
No comments:
Post a Comment