Tuesday, August 9, 2016

பட்டறிவுப் பாவலன் By கவிஞர் வைரமுத்து



கவியரசு கண்ணதாசனை முற்றும் புரிதல் என்பது சற்றே கடிது. ஏனெனில், தன் மடித்த உள்ளங்கையில் அவரைப் பூட்டி வைத்திருக்கிறது காலம். அதன் அத்தனை விரல்களையும் விலக்கினால்தான் மொத்தம் விளங்கும். இந்தக் கட்டுரை அதன் ஒரு விரலையேனும் பிரிக்குமா பார்ப்போம்.
கண்ணதாசன் ஓர் ஆச்சரியம்!


அவர் நிலைத்த அரசியல் நிலைப்பாடு கொண்டிருந்தவர் அல்லர். ஆனால், அத்தனை அரசியல் கட்சிகளும் அவரை வழிய வழிய வாசித்தன.
தனிமனித வாழ்வில் அறம் சார்ந்த சட்டங்களுக்குள் தன்னை அவர் ஆணியடித்துக்கொண்டவர் அல்லர். ஆனால், அவரது சமகாலச் சமூகம் விழுமியம் கடந்தும் அவரை விரும்பியது.
எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர் இட்டார் என்ற கவிதை வாக்குமூலப்படி அவர் பள்ளி இறுதியைத் தாண்டாதவரே. ஆனால், கல்லூரிகளெல்லாம் அவரை ஓடிஓடி உரையாற்ற அழைத்தன.
இந்தியாவின் சராசரி ஆயுளைவிடக் குறைவாக வாழ்ந்து ஐம்பத்து நான்கு வயதில் உடல் மரணம் உற்றவர்தான். ஆனால், ஐம்பது ஆண்டுகள் எழுத்துலகை ஆண்டவர் போன்ற பெரும்பிம்பம் அவருக்கு வாய்த்தது.
எப்படி இது இயன்றது... ஏது செய்த மாயமிது?
தன் எழுத்துக்கு அவர் படைத்துக்கொண்ட மொழியே முதற்காரணம்.
ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடந்த தமிழின் தொல்லழகையும் வாய்மொழி வந்த நாட்டுப்புறப் பாடல்களின் சொல்லழகையும் குழைத்துக் கூட்டிச் செய்த தனிமொழி கண்ணதாசனின் மொழி.
முன்னோர் செய்த முதுமொழி மரபு அவரது கவிதைக்கு வலிமை சேர்த்தது, பாட்டுக்கு எளிமை சேர்த்தது.
காலம் தூரம் இரண்டையும் சொற்களால் கடப்பது கவிஞனுக்குரிய கலைச்சலுகை. தமிழின் இடையறாத மரபெங்கிலும் அது இழையோடிக் கிடக்கிறது. மலையிலே பிறக்கும் காவிரி கடல் சென்று கலக்க 800 கி.மீ. கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பட்டினப் பாலையில் மலைத்தலைய கடற்காவிரி என்றெழுதி 800 கி.மீட்டரைக் கடியலூர் உருத்திரங் கண்ணன் நான்கு சொற்களில் கடக்கிறான்.
இதே உத்தியைக் கண்ணதாசன் தன் பாசமலர் பாடலுக்குள் கையாள்கிறார். தன் தங்கை திருமணம் கொண்டு, இல்லறம் கண்டு, இன்பம் துய்த்து, கருவுற்று, திருவுற்று, உருவுற்று, வளைகாப்புற்று, பிள்ளைபெற்று நிற்கும் காலத்தை, பூ மணம் கொண்டவள் பால் மணம் கண்டாள் என்றெழுதிப் பத்துமாதங்களை ஆறு சொற்களில் கடக்கிறார்.
சூரியனின் முதற்கீற்று விண்வெளியைக் கடந்து பூமியைத் தொடுவதற்கு 8 நிமிடங்களும் 20 நொடிகளும் பயணப்படுகின்றது. ஒளியினும் விரைந்து பயணிப்பது சொல். அந்தச் சொல்லின் சகல சாத்தியங்களையும் பாடல்களில் கையாண்டு வென்றவர் கண்ணதாசன்.
இந்தப் பாடல் வெளிவந்த 1960களில் தமிழ்நாட்டுக் கல்வியறிவு 21 விழுக்காடு மட்டுமே. அதனால் இந்த வரி பண்டித உயரத்தில் இருக்கிறதே பாமரர்க்குப் புரியுமோ என்று அய்யமுற்ற பாவலன் அடுத்த வரியில் பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் என்று உரையெழுதி விடுகிறான்.
இரண்டாம் வரியில் விளக்கம் தந்தது கல்வியறிவில்லா சமூகத்தின் மீது கவிஞன் கொண்ட கருணையாகும்.
தமிழ்த் திரைப்பாட்டுத் துறையின் நெடுங்கணக்கில் ஒரு பெருங்கவிஞனே பாடலாசிரியனாய்த் திகழ்ந்தது பாரதிதாசனுக்குப் பிறகு கண்ணதாசன்தான். பாட்டெழுதும் பணியில் கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு என்பதை அறிவு ஜீவிகள் மட்டுமே அறிவார்கள்.
கவிதையின் செம்பொருள் அறிந்தவனும் சொல்லாட்சியின் சூத்திரம் புரிந்தவனும் யாப்பின் ஒலி விஞ்ஞானம் தெரிந்தவனுமாகிய கவிஞன் மொழியை வேலை வாங்குகிறான். கேள்வி ஞானத்தால் வந்த பாடலாசிரியனோ மொழியின் வேலைக்காரனாய் மட்டுமே விளங்குகிறான்.
தான் கவிதையில் செய்த பெரும் பொருளைப் பாடலுக்கு மடைமாற்றம் செய்தவர் கண்ணதாசன்.
வானம் அழுவது மழையெனும்போது
வையம் அழுவது பனியெனும்போது
கானம் அழுவது கலை யெனும்போது
கவிஞன் அழுவது கவிதையாகாதோ
-என்ற கவிதையின் சாறுபிழிந்த சாரத்தை -
இரவின் கண்ணீர் பனித்துளி யென்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச்
சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
-என்று கவலையில்லாத மனிதன் என்ற தன் சொந்தப் படத்தில் சந்தப்படுத்தியவர் கண்ணதாசன்.
இப்படி... கவிதைச் சத்துக்கள் பாட்டுக்குள் பரிமாறப்பட்டதால்தான் கண்ணதாசனின் அய்யாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களிலும் இலக்கியத்தின் தங்க ரேகைகள் ஊடும் பாவுமாய் ஓடிக்கிடக்கின்றன.
பாடல்களில் ஒரு புனைவுக்கலாசாரம் கண்ணதாசனில்தான் பூரணமாகிறது.
முற்றாத இரவு (குங்குமம்), பரம்பரை நாணம் (பாலும் பழமும்), வளர்கின்ற தங்கம் (மாலையிட்ட மங்கை), உயிரெலாம் பாசம் (புதிய பறவை), செந்தமிழர் நிலவு(பணத்தோட்டம்), மோக வண்ணம் (நிச்சயதாம்பூலம்), கடவுளில் பாதி (திருவருட்செல்வர்), விழித்திருக்கும் இரவு (ஆயிரத்தில் ஒருவன்), பேசத் தெரிந்த மிருகம் (ஆண்டவன் கட்டளை), புலம்பும் சிலம்பு (கைராசி) போன்ற படிமங்கள் பாட்டுக்குள் ஒரு கவிஞன் இட்டுச்சென்ற கையொப்பங்களாகும்.
தான் வாழும் காலத்திலேயே அதிகம் அறியப்பட்டவரும் எப்போதும் ஒரு சமூகச் சலசலப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தவருமான கவிஞர் அவர்.
அதன் காரணங்கள் இரண்டு. கவிஞன் தன் அக வாழ்க்கையைத் தானே காட்டிக்கொடுத்த கலாசார அதிர்ச்சி. மற்றும் அவரது அரசியல் பிறழ்ச்சி. அவரை மயங்க வைத்த காரணங்களும் இவையே, இயங்க வைத்த சக்திகளும் இவையே.
கட்சி அரசியல் பெரும்பாலும் வெற்றி தருவதில்லை கவிஞர்களுக்கு. காரணம் கலையின் தேவைகள் வேறு அரசியலின் தேவைகள் வேறு. கலை என்பது புலப்படுத்துவது; அரசியல் என்பது மறைப்பது. வட்ட நிலாவையும் வானத்தையும் கடக்க முடிந்த ஒரு கவிஞன், வட்டச் செயலாளரைக் கடப்பது கடிது.
கலையென்பது மர்மங்களின் விஸ்வரூபம்; அரசியலென்பது விஸ்வரூபங்களின் மர்மம்.
""நெஞ்சத்தால் ஒரு மனிதன் - சொல்லால் ஒரு மனிதன் - செயலால் ஒரு மனிதன் என்று ஒவ்வொரு மனிதனும் மூன்று வடிவெடுக்கும் உலகத்தில் அவன் மட்டும் ஒரே மனிதனாக வாழ்ந்துவிட்டான்'' என்று வனவாசத்தில் எழுதிக் காட்டும் அவரது சுயவிமர்சனம், அரசியல் லாயத்திற்கு லாயக்கில்லாத குதிரை என்று அவரைக் கோடிகாட்டுகிறது.
அவர் கட்சிமாறினார் கட்சிமாறினார் என்று கறைச்சேறு பூசுகிற சமூகம், ஏற்றுக்கொண்ட எந்தத் தலைவனுக்கும் அவர் கற்போடிருந்தார் என்பதை மறந்து பேசுகிறது. கற்பு என்ற சொல்லாட்சியை நான் அறிந்தே பிரயோகிக்கிறேன். காலங்காலமாய்க் கல்முடிச்சுப் பட்டு இறுகிக் கிடந்த கற்புக் கோட்பாடு மெல்லத் தளர்ந்து தளர்ந்து இன்று உருவாஞ்சுருக்கு நிலைக்கு நெகிழ்ந்திருக்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்த கற்புநிலை, ஒருவனோ ஒருத்தியோ யாரோடு வாழ நேர்கிறதோ அவரோடு வாழும் காலம்வரை தன் இணைக்கு உண்மையாயிருத்தல் என்று நெகிழ்ந்திருக்கிறது. கண்ணதாசனின் அரசியலுக்கும் இது பொருந்தும். எந்தக் கட்சியிலிருந்தாலும் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவே இயங்கியிருக்கிறார். காமராசர், நேரு இருவரையும் கண்ணதாசனைப்போல் நேசித்த தொண்டனில்லை. ஆனால், கட்சியிலிருக்கும்போது ஒரு தலைவனை மலையளவு தூக்குவதும் வெளியேறிய பிறகு வலிக்கும்வரை தாக்குவதும் என் வாடிக்கையான பதிகம் என்று சொல்லிக்கொள்வதில் அவர் சுகம் கண்டார்.
ஆண்டுக்கொரு புதுமை தரும்
அறிவுத்திரு மாறன்
ஆட்சிக்கொரு வழி கூறிடும்
அரசுக்கலை வாணன்
மீண்டும் தமிழ் முடிசூடிட
விரையும்படை வீரன்
மீட்சிக்கென வேல் தாங்கிய
வெற்றித்தமிழ் வேந்தன்
-என்று அண்ணாவைப் புகழ்ந்து பூமாலை சூடியவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டுப் புழுக்கத்தோடு வெளியேறினார். தீராத காயங்களுக்காக வெளியேறுகிறேன் என்று சொல்ல முடியாதவர் திராவிடநாடு உடன்பாடில்லை அதனால் போய்வருகிறேன் என்று 1961-இல் அவர் கட்சியைத் துறக்கிறார். 1964-இல் திராவிட நாடு கொள்கை அதிகாரபூர்வமாகக் கைவிடப்படுகிறது. திராவிட நாட்டுக்கு இரங்கல் கவியரங்கம் ஏற்பாடு செய்து பாடுகிறார் கண்ணதாசன்.
ஈரோட்டிலே பிறந்து
இருவீட்டிலே வளர்ந்து
காஞ்சியிலே நோயாகிக்
கன்னியிலே தாயாகிச்
சென்னையிலே மாண்டாயே
செல்வத் திருவிடமே
என்னருமைத் தோழர்களே
எழுந்து சில நிமிடம்
தன்னமைதி கொண்டு
தலைதாழ்ந்து நின்றிருப்பீர்
பாவிமகள் போனாள்
பச்சையிளம் பூங்கொடியாள்
ஆவி அமைதி கொள்க
அநியாயம் வாழியவே
-என்று அழுது எழுகிறார்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது என்றெழுதியவரும் அவரே. எங்கள் திராவிடப் பொன்னோடே கலை வாழும் தென்னாடே - என்று எழுதியவரும் அவரே.
திராவிட நாடு என்ற கருதுகோளுக்கு எழுச்சிப்பாடலும் இரங்கற்பாடலும் எழுதிய ஒரே திராவிட இயக்கக் கவிஞன் கண்ணதாசன் மட்டும்தான். இது கண்ணதாசனின் காட்சிப்பிழையா காலத்தின் தோற்றப்பிழையா என்பதை அவரது சமகாலத்தவரெல்லாம் முடிந்த பிறகுதான் முடிவுசெய்ய முடியும்.
திரையுலகில் கண்ணதாசனின் நிலைபேறு ஓர் ஆச்சரியத்துக்குரிய வரலாறு. கலைஞரும் (மு.கருணாநிதி), எம்.ஜி.ஆரும் தி.மு.கவின் பெரும்பிம்பங்களாய் உருவெடுத்து உச்சத்தில் நின்றபோது, திரையுலகத்தின் பெரும்பகுதி தி.மு.க.வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவர் தி.மு.க.வை விட்டு வெளியேறுகிறார். தெனாலிராமன் படத்தில் வந்த சண்டையால் சீறிச் சினமுற்று சிவாஜியும் கண்ணதாசனை வெறுத்து விலகி நிற்கிறார். இப்படித் தோழமைகளையெல்லாம் துண்டித்துக்கொண்ட பிறகு ஒரு சராசரிக் கவிஞனென்றால் காணாமல்தான் போயிருப்பான். ஆனால், கட்சியைவிட்டு விலகிய 1961க்குப் பிறகுதான் கண்ணதாசனின் கலை உச்சம் தொடுகிறது. பாசமலர் முதல் உரிமைக் குரல் வரை அவர் சிகரம் நோக்கியே சிறகடிக்கிறார்.
அரசியல் எதிர்ப்புகளோ ஏகடியங்களோ கண்ணதாசனின் கலையுலகப் பயணத்தைக் கடுகளவும் தடுக்கவில்லை. முன்னே முட்டவரும் பசுவைப் பின்னே நின்று பால் கறந்துகொள்வதுபோல், அவரது அரசியலை நேசிக்க முடியாதவர்களும் அவர் தமிழை வாங்கி வைத்துக்கொள்ள வரிசையிலே நின்றார்கள். விரக்தியினால் சில புதிய பாடலாசிரியர்களை அறிமுகம் செய்தார்கள் சிலர். வியர்வையிலே உற்பத்தியாகும் பேன்கள் மாதிரி அப்படி வந்தவர்கள் காண்பதற்குள் காணாமற் போனார்கள்.
மாறாதிருக்க நான் மரமா கல்லா
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
-என்று தன் மாறுதல்களுக்குக் கவிதை நியாயம் கண்ட கண்ணதாசன் கடவுள் மறுப்பிலும் இரண்டு நிலை கண்டிருந்தார். அவரது அவசரமான கடவுள் மறுப்பு காட்டோடை வெள்ளம்போல் வந்த வேகத்தில் வற்றிவிட்டது. ஆன்மிகம் போல் நாத்திகமும் ஒரு சந்தையாகும் என்று நம்பியதன் விளவு அது.
""நான் ஒரு சுயமரியாதைக்காரன் என்று பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டான். கறுப்பு புஷ் கோட்டுகள் ஆறு தைத்துக்கொண்டான். எந்த ஆண்டவனிடம் இடையறாது பக்தி கொண்டிருந்தானோ அந்த ஆண்டவனையே கேலிசெய்ய ஆரம்பித்தான்'' என்று வனவாசத்தில் எழுதியிருக்கிறார். நம்பாத நாத்திகத்தை ஒரு கள்ளக் காதலைப்போல் காப்பாற்றியும் வந்திருக்கிறார்.
உல்லாசம் தேடும்
எல்லோரும் ஓர்நாள்
சொல்லாமல் போவார்
அல்லாவிடம்
-என்று தெனாலிராமனில் பாட்டெழுதிவிட்டு எங்கே இது சக நாத்திகர்களால் சர்ச்சைக்குள்ளாகுமோ என்றஞ்சி இந்தப் பாடலுக்கு மட்டும் தன் பெயரை மறைத்துத் தமிழ் மன்னன் என்று எழுத்தில் இடம்பெறச் செய்தார்.
எளிமையாக நுழைகிற எதுவும் எளிமையாக வெளியேறிவிடும். ஆண்டவன் மீது நம்பிக்கை மிகுந்தபோதோ, நாத்திகர்கள்மீது நம்பிக்கை தளர்ந்தபோதோ அவர் கடவுள் மறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.
பக்தியும் பாலுணர்வும் மனிதகுலத்தின் மூளைச் சாராயங்கள். சாராய வகைப்பட்ட எதையும் உலகம் இதுவரை முற்றிலும் ஒழித்ததில்லை. திராவிட இயக்கம் கட்டியெழுப்பிய கடவுள் மறுப்பு வென்றது எவ்விடம், தோற்றது எவ்விடம் என்று ஒரு மீள்பார்வை செய்வது நல்லது.
கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அது அறிவியல் என்ற ஆழத்திலிருந்து கட்டியெழுப்பப்படாமல் பிராமண எதிர்ப்பு என்ற பீடத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு விட்டதாகக் கருதப்பட்டு விட்டதோ என்று கவலையோடு நினைக்கத் தோன்றுகிறது.
புதிதாகப் பிறந்ததுதான் பூமியை ஆட்சி செய்யும். 450 கோடி வயதுகொண்ட பூமியில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மனிதன்தான் புதிய உயிர். ஆகவே, அவனே ஆட்சி செய்தான்.
மனிதனுக்குப் பிறகு பிறந்தது கடவுள். 5,000 முதல் 7,000 ஆண்டுகள்தாம் கடவுளின் வயது. புதிதாகப் பிறந்த கடவுள் மனிதனையே ஆட்சி செய்யுமாறு அவதரிக்கப்பட்டார்.
வழிவழியாக உடம்பிலும் மனதிலும் ஊறிப்போன கடவுள் என்ற கருத்தியலைவிட்டுக் கண்ணதாசன் போன்றவர்களால் நிரந்தரமாக வெளியேற முடியவில்லை. அந்த வகையில் மதங்களுக்கும் கடவுள்களுக்கும் வேண்டிய பெருங்கூட்டத்தின் பேராசைக்குரிய கவிஞராகக் கண்ணதாசன் கருதப்படுகிறார். ஆகவே, கண்ணதாசனை பாரதிதாசனின் நீட்சி என்று கொள்ளாமல் சமய வகையில் பாரதியின் எச்சம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு கவிஞனாக பாடலாசிரியனாக அறியப்பட்ட அளவுக்குக் கண்ணதாசன் ஒரு தேர்ந்த வசனகர்த்தா என்பது போதுமான அளவுக்குப் புலப்படாமலே போய்விட்டது. பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைப் பாடல்களால் கட்டியெழுப்பிய கண்ணதாசன் 1950-களில் தன் வலிமையான வசன வரிகளால் நாற்காலியிலிருந்து எம்.ஜி.ஆரை சிம்மாசனத்திற்கு இடம் மாற்றினார்.
மதுரை வீரன் (1956), மகாதேவி (1957), நாடோடி மன்னன் (1958) என்று கண்ணதாசன் வசனமெழுதி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்த இந்த மூன்று பெரும் படங்களும் மூட்டை தூக்கி விறகு சுமக்கும் உழைக்கும் மக்களிடத்தில் எம்.ஜி.ஆரை ஒரு தேவதூதனாய்க் கொண்டு சேர்த்தன.
வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயகமே ஆராய்ச்சி மணிகட்டி ஆண்டிருந்த தென்னகமே - இது மதுரை வீரன்.
அத்தான்... அந்தச் சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்- இது மகாதேவி.
சொன்னாலும் புரியாது - மண்ணாளும் வித்தைகள் - இது நாடோடி மன்னன்.
எதுகை மோனைகளின் இயல்பான ஆட்சியும் தாளத்தில் வந்து விழுகிற சொல்லமைதிகளும் வசனமெழுதியவன் கவிஞன் என்பதைக் கண்ணடித்துக் கண்ணடித்துக் காட்டிக்கொடுக்கின்றன. அப்படி ஒரு தமிழுக்கு அப்போது இடமிருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறியவர்களில் வென்று நின்று காட்டியவர்கள் மூவர் மட்டுமே. கலை, அரசியல் இரண்டிலும் வென்றவர் எம்.ஜி.ஆர். கலையில் மட்டும் வென்று நின்று நிலைத்தவர்கள் சிவாஜியும், கண்ணதாசனும்.
என்னதான் கலைச்சிகரம் தொட்டிருந்தாலும் அரசியல் என்ற அடர்காடு அவர் கண்களைவிட்டு அகலவேயில்லை. தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் அவர் பக்கபலமாய் இருந்திருக்கிறார். அல்லது பக்கத்தில் இருந்திருக்கிறார்.
1972-இல் ஒரு முன்னிரவில் வீட்டுத் தொலைபேசி அடிக்கிறது கண்ணதாசன் எடுக்கிறார். அதன் பிறகான உரையாடலின் சாரத்தை நான் பதிவு செய்கிறேன்.
"கண்ணதாசன் பேசறேன்'. "யாரு?'
"நான் கருணாநிதி பேசறேன்யா'
"என்னய்யா இந்த நேரத்துல?'
"வேறொண்ணுமில்லய்யா...எம்.ஜி.ஆரைக் கட்சியவிட்டு எடுத்துடலாம்னு எல்லாரும் சொல்றா?' "நீ என்ன சொல்ற? '
"வேணாய்யா'. "எம்.ஜி.ஆரை வெளியே விடாத. உள்ள வச்சே அடி,' "பாப்போம்' - இது கண்ணதாசன் மேடையில் சொன்னது. கேட்டவன் நான். ஆனால், காலத்தின் கணக்கு வேறாக இருந்தது. எம்.ஜி.ஆரை உள்ளே வைத்து அடிக்கச் சொன்னவர் கண்ணதாசன். ஆனால், அரசவைக் கவிஞராக்கிக் கண்ணதாசனையே உள்ளே வைத்து அடித்தவர் எம்.ஜி.ஆர். காலத்தின் நகர்வுகள் எதிர்பாராதவை.
தமிழ்ப் புலவர் நெடுங்கணக்கில் கண்ணதாசனையொத்த அனுபவச் செழுமை முன்னெவருக்கும் வாய்த்ததில்லை அல்லது கண்ணதாசனைப் போல் முன்னவர் யாரும் பதிவு செய்ததில்லை.
வாழ்வு கல்வியால் அறியப்படுகிறது அனுபவத்தால்தான் உணரப்படுகிறது. சில அனுபவங்கள் அவரைத் தேடி வந்தவை. பல அவர் தேடிச் சென்றவை. எதையாவது தின்னத் துடிக்கும் தீயின் நாவுகளைப்போல அனுபவங்களை அவர் குடைந்து குடைந்து அடைந்திருக்கிறார்.
அந்த அனுபவங்களையெல்லாம் கண்ணதாசன் இலக்கியம் செய்தது தமிழ் செய்த தவம்.
கண்ணதாசனின் அனுபவங்கள் இரு துருவப்பட்டவை.
காமமில்லாத காதல் காதலில்லாத காமம்
கண்ணீரின் சாராயம் சாராயத்தின்
கண்ணீர்
அரசியலின் துரோகம் துரோகத்தின்
அரசியல்
கவியரசு பட்டம் கடன்கார வட்டம்
சாகித்ய அகாடமி - ஜப்தி
ஒதுக்க முடியாத வறுமை
பதுக்க முடியாத பணம்
தோளில் தூக்கிய ரசிகர்கள்
தோற்கடித்த வாக்காளர்கள்
புகழ்ச்சியின் சிகரம் இகழ்ச்சியின் பள்ளம்
-என்று ஒரே உடம்பில் பல்வேறு வாழ்க்கையை வாழ்ந்து களித்த - வாழ்ந்து கழித்த ஒரு கவிஞன் எந்தச் சித்தாந்தத்துக்கும் சிக்காமல் தன்னை வேதாந்தியாக்கிக் கொள்ளத் துடித்த கதைதான் கண்ணதாசன் கதை. அது திராவிடத்தில் தொடங்கி தேசியத்தில் அடங்கி தெய்வீகத்தில் முடிந்தது.
தமிழ்க் கவிதைச் சமூகத்தில் யாரோடும் ஒப்பிட முடியாத தனியொரு தமிழ்க் கவிஞன் கண்ணதாசன். இலக்கிய வரலாற்றில் வேறெப்போதும் காணாத வித்தியாசம் அவர். அந்த வித்தியாசம்தான் அழகு.
என்னைப் பொறுத்த வரையில் திரையுலகின் என் வீரிய விளைச்சலுக்குப் பலர் பொறுப்பு. என் விதைநெல்லுக்குக் கண்ணதாசனே பொறுப்பு.

இன்று கவியரசு கண்ணதாசனின்
90-ஆவது பிறந்தநாள்.
கவிஞர் வைரமுத்து

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024