Saturday, August 27, 2016

விபத்துகள்

இங்கு விபத்துகள் விற்கப்படுகின்றன...!


சாலையோரக் கடைகளுக்கும் சாலை விபத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்விக்கு சாலையோரக் கடைகளே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று பதில் கிடைக்கிறது.

நீங்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவரா?... அப்படியென்றால், நீங்கள் ஒருநாளில் ஏதாவது ஓர் இடத்தில் திடீரென்று கண்களில் தாக்கும் நொடிப்பொழுது எரிச்சலை அனுபவித்திருக்கக் கூடும். கிராமப்புறங்களில் ஏதேனும் பூச்சி கண்களில் விழுந்துவிடுவதும், நாமும் சற்றுத் திணறி மோட்டார் சைக்கிளை ஓரம்கட்டிவிட்டுக் கண்களைக் கசக்கி, முகத்தைக் கழுவிவிட்டுப் பயணத்தைத் தொடர்வோம். நகர்ப்புறங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் அப்படி நடக்கிறது என்றால், அதற்கான காரணம் பூச்சிகள் அல்ல... சாலையோர புரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் (விரைவு உணவகங்கள்) இருந்து பறந்துவரும் மிளகாய்த்தூள் கலந்த மசாலாவே காரணம்.

குறிப்பிட்ட சில பாதைகள் வழியாகச் செல்லும்போது வாகனத்தை இயக்க முடியாமல் நாம் திணறுகிற அளவுக்கு கண்களில் வந்து காரமான அந்தத் துகள்கள் விழுவதை பலர் அனுபவித்திருப்பார்கள். அந்தவேளையில், வாகனத்தை இயக்குகிறவர், மதுபோதையில் இருந்தார் என்றால் அவரால் வாகனத்தைத் தன்னுடைய வசத்துக்குக் கொண்டுவர முடியாது. வாகனத்துக்கு அவர் வசப்பட்டு விடுவார். எங்காவது மோதி விபத்தையும் ஏற்படுத்திவிடுவார்.

தொடர்ந்து பலநாட்கள், இப்படியான ‘காரமான துகள்கள்’ கண்களில் மோதுவது எப்படி என்று விடாமல் சேசிங்கில் இருந்து கவனித்தபோதுதான் இந்த உண்மை தெரியவந்தது. மேலும் இதுபோன்ற கடைகளில் இருபுறமும் வைக்கப்பட்டிருக்கும், ‘எக்ஸார்சிஸ்ட் ஃபேன்’கள், உள்ளிருந்து காரத்துகள்களை அப்படியே இழுத்துச் சாலைக்கு அனுப்பிவைக்கின்றன. ஒன்றல்ல... இரண்டு ஃபேன்கள்!

‘‘இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்காரர்களிடம் எச்சரிக்கை செய்யவேண்டும். எக்ஸார்சிஸ்ட் ஃபேன்வைத்து உள்ளிருந்து, ‘காரப்பொடி துகள்கள்’ வெளியே வராத அளவுக்கு ஃபேனுக்கு மறைப்பாக ஓர் அட்டையைவைக்க வேண்டும். அப்படி வைத்திருக்கிறார்களா என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனையிட வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டுத் துறை, ஹெல்த் டிபார்ட்மென்ட் முதலிய துறையினரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஃபாஸ்ட் ஃபுட் கடைகளால்தான் பைக்கில் போகிறவர்கள் அதிகமான சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால், ஒரு ஏரியாவிலேயே வாரத்தில் 10 விபத்துகள் நடந்துவிடுகின்றன. சாலை விபத்துகளைத் தடுக்கவும், மனித உயிர்களைக் காக்கவும் அரசும், அதிகாரிகளும் இதன்மீது அதிக சிரத்தை எடுத்து கவனம் செலுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 67,250 சாலை விபத்துகளில் 77,725 பேர் காயமடைந்து உள்ளனர். 15,190 பேர் இறந்துள்ளனர். நாட்டிலேயே, தமிழகத்தில்தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. நாட்டின் மொத்த சாலை விபத்துகளில் 14.9 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெற்று உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற விபத்துகளோடு ஒப்பிடும்போது 2014-ல் தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.

சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 26.4 சதவிகிதமும், லாரி மற்றும் கனரக ஓட்டுநர்கள் 20.1 சதவிகிதமும், காரில் செல்பவர்கள் 12.1 சதவிகிதமும், பேருந்து ஓட்டுநர்கள் - பயணிகள் 8.8 சதவிகிதமும் பாதிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் கூறுகிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர், 26.4 சதவிகிதம் சாலை விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம், அதாவது, நடக்கிற விபத்துகளில் கால்பங்கைவிட 1.4 சதவிகித கூடுதல் சாலை விபத்துகள், இரு சக்கர வாகன ஓட்டிகளால் நிகழ்கிறது.

எல்லாமே அவசரம், அவசரம் என்றாகிவிட்டதில் நாடு முழுவதும் சிறு, சிறு ஹோட்டல்களாக முளைத்திருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் சேவை அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அவசியமாகிவிட்டது. சைவப் பிரியர்கள்தான் இந்த வகை உணவகங்களில் இருந்து தங்களின் வயிறைக் காப்பாற்றி, வாழ்க்கையின் எஞ்சிய காலத்தைப் பாதுகாப்பாக ஆக்கிக் கொண்டுள்ளனர். முந்தைய சில தினங்களுக்கு முன்னர் வாங்கிவைத்த சிக்கனையும், மட்டனையும் வினிகரில் கழுவி, ‘அவசர உணவு’ தயாரிப்புக்கான வாணலியில் மசாலாவுடன் போட்டு உருட்டி, புரட்டி கம்பியில் விட்டுத் தூக்கும்போது சொட்டுகிற எண்ணெய்யின் வழியாக ஒருபோதும்
கறிச்சுவை கெட்டுப்போனதை அறிய முடிவதில்லை.

முகர்ந்து பார்த்தால் மனசே நாற்றமடித்துப் போகும் சில்லி சாஸ், தக்காளி சாஸ்களை சிக்கனின் லெக்-பீஸை சுற்றிலும் ஊற்றி அதில் ஒரு தனிச்சுவையை தேடிடும் ஆராய்ச்சியும் அதிக அளவில் தமிழகத்தில்தான் நடக்கிறது. இது போதாதென்று உயிரைப் பறிக்கும் விபத்துகளும் நடக்கிறது.


உஷார் மக்களே!

- ந.பா.சேதுராமன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024