Thursday, August 11, 2016

ஆங்கிலம் அறிவோமே - 122: சிகரத்துக்கு நேரெதிர்...

Return to frontpage

ஒரு திரைப்பட விமர்சனத்தில் Nadir of mediocrity என்று கூறப்பட்டிருந்ததாகக் கூறி இதை விளக்குங்களேன் என்கிறார் ஒரு நண்பர்.

சிகரம் நமக்குத் தெரியும். Peak, zenith. அதற்கு நேரெதிர் nadir. ஒரு சூழலைக் குறித்துக்கூட இப்படிப் பயன்படுத்துவார்கள். “Asking that question was the nadir of my career” என்றால் “அந்தக் கேள்வியால் எனது வேலை அம்பேல்” என்று அர்த்தம்.

அரபு மொழியில் nasir என்றால் நேரெதிர் என்று அர்த்தம். அதாவது உச்சத்துக்கு நேரெதிர். அதிலிருந்து வந்தது nadir.

அடுத்ததாக mediocrity-க்கு வருவோம். (இதை மிடியாக்ரிட்டி என்று உச்சரிப்போம்).

Mediocre ஆக இருக்கும் நிலைதான் mediocrity என்று சொன்னால் உங்களுக்கு வரக்கூடிய கோபம் நியாயம்தான். பின் என்ன, mediocre என்பதை விளக்க வேண்டாமா? சராசரியாக இருப்பது. அதாவது சிறப்பாக இல்லாதது என்று இதற்கு அர்த்தம்.

படம் சுமார் என்பதை இரண்டு அர்த்தத்தில் கொள்ளலாம். பரவாயில்லை என்பது ஒரு ரகம். மோசம் என்பதைவிடக் கொஞ்சூண்டு அதிகம் என்பது இன்னொரு ரகம். இந்த இரண்டாவது ரகம்தான் Nadir of mediocrity.

Dynamic verb என்கிறார்களே அப்படியென்றால் என்ன?

Dynamic என்றால் உற்சாகமான, இயங்குகிற என்று பொருள். ஒரு verb செயல்பாட்டைக் குறித்தால் அது dynamic verb. He ran five miles. They walked eight kilometers. He killed them with arrows. இவற்றிலுள்ள ran, walked, killed ஆகியவை dynamic verbs.

இப்போது இன்னொரு வாக்கியத்தைப் பார்க்கலாம். We believe that you are the best என்பதில் believe என்பது verbதான். ஆனால் இது ஒரு நிலையைக் குறிக்கிறதே தவிர செயலை அல்ல. இதுபோன்ற verbகளை stative verbs என்பார்கள்.

வண்ணங்கள் தொடர்பான சில வார்த்தைகளை சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தோம். இதைக் கவனித்த ஒரு நண்பருக்கு Black humour பற்றி அறிந்துகொள்ள ஆவல்.

Black humour என்பதை Black comedy என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். மிகவும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வை வேறு கோணத்தில் அணுகி மனதை லேசாக்க முயற்சி செய்யும் விஷயம் இது. ஆனால் இந்தக் காரணத்தினாலேயே இந்த வகை நகைச்சுவைக்கு எதிர்ப்புகளும் எழுவதுண்டு. (அதெப்படி அவ்வளவு சீரியஸான விஷயத்தை நகைச்சுவையாக்கலாம்?). சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?

“I said glass of juice. Not gas the jews” என்று ஹிட்லர் கூறுவதாக ஒரு நகைச்சுவை!

மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு, அந்தக் கல்லறையை விசிறியால் வீசிக்கொண்டிருந்தார் அவரது கணவர். நெகிழ்ச்சியுடன் ஒருவர் காரணம் கேட்க, “தன் கல்லறையின் ஈரம் காய்ந்த பிறகுதான் நான் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென என்னுடைய மனைவி என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தார்” என்றாராம்.

ஜான், டேவிட் ஆகிய இருவரும் மனநல மருத்துவ நோயாளிகள். ஒரு நாள் நீச்சல் குளத்தில் குதித்துவிட்டார் ஜான். டேவிடும் உடனே அந்தக் குளத்தில் குதித்து ஜானைக் காப்பாற்றினார். இவ்வளவு வீரதீரச் செயல் புரிந்தவர் எப்படி மனநோயாளியாக இருக்க முடியும்? டேவிடை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தார் டாக்டர். “டேவிட் உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. நீ முழுவதும் குணமாகிவிட்டதால் உன்னை டிஸ்சார்ஜ் செய்யப்போகிறேன் என்பது நல்ல செய்தி. நீ கஷ்டப்பட்டுக் காப்பாற்றிய ஜான் குளியல் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார் என்பது கெட்ட செய்தி” என்றார். அதற்கு டேவிட் இப்படிக் கூறினார். “அவன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை. நான்தான் முழுவதும் நனைந்த அவன் உலர வேண்டும் என்பதற்காகத் தொங்க விட்டிருக்கிறேன்”.



Black humour!

The car purred down the street என்பதில் purred என்பதன் அர்த்தம் என்ன?

பூனை எழுப்பும் மிருதுவான ஒலியை purr என்பார்கள். ஒரு இயக்கதினால் உருவாகும் இதமான ஒலியையும் purr என்பார்கள்.

The car purred down the street என்பது மறைமுகமாக அந்த கார் புதியது, விலை உயர்ந்தது என்பதைக் குறிக்கிறது.

ஒலியை உணர்த்தும் verb அந்த nounனின் தன்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு.

The car rattled down the street என்றால் அந்த கார் மிகப் பழையது என்பதைக் குறிக்கிறது (லொட லொட என்ற சப்தம்).

The car whispered down the street என்றால் அந்த கார் விலை உயர்ந்தது என்று அர்த்தம். ஒருவேளை சீருடை அணிந்த ஓட்டுநர்கூட அதற்கு இருக்கலாம்.

நாவல்களில் காரின் ஒலியையும் அது உயிர் பெறுவதையும் குறிக்கப் பலவித வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் சில

Cranked, Coughed, Hummed, Stuttered, Whined, Buzzed, Rumbled, Grumbled, Growled, Snarled, Zoomed, Vroomed, Screamed, Roared, Thundered, Exploded

OF - OFF

Of off இரண்டும் சந்தேகமில்லாமல் வெவ்வேறு அர்த்தம் கொண்டவைதான்.

Of என்பது preposition. இதற்குப் பொருள் இதிலிருந்து வந்த, இதற்குச் சொந்தமான என்று சொல்லலாம்.

He is the father of Adarsh.

Come out of your sorrow.

Off என்பது adverb. On என்பதற்கான எதிர்ப்பதம். Switch-களை நினைத்தால் அர்த்தம் விளங்கிவிடும். கொஞ்சம் அழுத்தத்தைக் கொடுக்கும் வார்த்தையாகவும் off பயன்படுத்தப்படுகிறது. Push off, clear off, move off.

# சிப்ஸ்

Captain என்பதன் பெண்பால் என்ன?

Captainதான். Friend, Lawyer, Lecturer போன்ற சில வார்த்தைகள் இருபாலருக்கும் பொதுவானவை.

# I ain’t bothered என்றால்?

I am not bothered.

# Britain என்பதற்கும் Briton என்பதற்கும் என்ன வேறுபாடு?

Britain என்பது நாடு. Briton என்பது அந்த நாட்டில் வசிப்பவர்.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...