Monday, August 15, 2016

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்! By முனைவர். அ. பிச்சை


இந்திய தேசத்தின் 70-ஆவது சுதந்திர தினம் இன்று. 69 ஆண்டுகளுக்கு முன்னால், முதல் சுதந்திர தினத்தை - 15.08.1947-அன்று கொண்டாடியதும், குதூகலித்து மகிழ்ந்ததும் உலக வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வுகள்.

ஆங்கிலேயர் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேற முடிவு செய்தபோது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாளை ஆட்சி மாற்றத்துக்குத் தேர்வு செய்தனர். அது இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு தினம்.

"போரில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி தருவதை விட, போரில்லாமல் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி தரும் நாளாகக் கருதுகிறோம். ஆகவே தான் ஆகஸ்ட் 15-ஆம் நாளை நாங்கள் தேர்வு செய்கிறோம்' என்றார்கள். அவர்களின் உணர்வை மதித்து, ஆகஸ்ட் 15 நம் தேசத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆகஸ்ட் 14 முன் இரவு முதல், விழாவுக்கான முன்னேற்பாடுகளும், சம்பிரதாயச் சடங்குகளும் தொடங்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் சட்ட ஆலோசனை மன்றத்தில்தான் (அதுதான் இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்ட அரங்கமாக பின்னால் மாறியது) விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

அந்த அரங்கை அலங்கரித்த முன்னாள் வைஸ்ராய்களின் புகைப்படங்கள் மலர்களால் மறைக்கபட்டன. வண்ண வண்ண மாலைகளாலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒளிவிளக்குகளால் பிரகாசித்து அந்த அரங்கம்.

அந்த மண்டபத்தில் அவைத் தலைவரின் இருக்கைக்கு மேல் ஒரு அழகிய பெரிய கடிகாரம் இருந்தது. கடிகாரத்தில் இரு முட்களும் 12-ஐ தொட்டு இணைந்தது.

மணி 12 முறை கணீர் கணீரென்று ஒலித்து ஓய்ந்தது. அதன்பின் ஒரு ஒலி, ஒரு நாதம் எழுந்தது. அது மேல் மாடத்திலிருந்து பயிற்சி பெற்ற ஒருவரால் எழுச்சியோடு இசைக்கப்பட்ட சங்கநாத முழக்கம். இதுவே புதிய தேசம் பிறந்து விட்டது என்பதற்கான அறிவிப்பு.

அரங்கிலுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றார்கள். கையொலி எழுப்பி புதிய தேசத்தின் உதயத்தை புத்துணர்வோடு வரவேற்றார்கள். "வந்தே மாதரம்' என்ற கீதத்தை எல்லோரும் இணைந்து பாடினார்கள்.

"இந்திய தேசத்திற்காகவும் இந்திய மக்கள் நலனுக்காகவும் ஓயாது உழைப்போம், உளப்பூர்வமாக சேவை செய்வோம் என சபதம் ஏற்கிறோம்' என்ற உறுதி மொழியை நேருஜி சொல்ல, அதனை அனைவரும் அப்படியே திரும்பச் சொன்னார்கள்.

அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம், இரண்டு நிமிட அமைதி கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்ச்சிகரமான, மகிழ்ச்சிகரமான அந்த இனிய இரவில், முதல் நிகழ்ச்சியாக மூன்று முக்கியமான பெருமக்கள் உரை நிகழ்த்தினார்கள். முதலாவதாக, இந்திய இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் சார்பாக சௌத்ரி காலிக் உஸ் - ஸமான் பேசினார். அடுத்து சிறந்த சிந்தனையாளர், தத்துவ மேதை டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேசினார்.

அடுத்ததாக, முக்கியமான நிகழ்வாக தேசத்தின் முதல் பிரதமர் பண்டித நேருஜி பேசினார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த உரையில், "உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியா விழித் தெழுகிறது. புதிய விடியலை நோக்கி நம்பிக்கையோடு நாம் நமது பயணத்தைத் தொடங்குகிறோம்' - என முழங்கினார்.

ஆனால், விடுதலை வாங்கித் தந்த தேசப்பிதா காந்திஜியோ அந்தேரத்தில் கல்கத்தா பெலிய கட்டா சாலையில் உள்ள பாழடைந்த மாளிகையின் ஒரு பகுதியில் நெஞ்சில் கனத்த சுமையோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அன்று படுக்கைக்குப் போகும் முன்பு காந்திஜி தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் "நான் இருட்டில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன், இந்த தேசத்தை நான் தவறாக வழிநடத்தி விட்டேனோ' என்று வருந்தி எழுதியிருக்கிறார்.

ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை நகரங்கள், கிராமங்கள், குடிசைப் பகுதிகள் - அனைத்திலும் கொண்டாட்டங்கள் தான். "தேசமெங்கும் புதிய தீபாவளியாக, புதிய ஈத் பண்டிகையாக, புதிய கிறிஸ்துமஸ் தினமாகத் தெரிகிறது' என்றார் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை நிருபர்.

அன்றைய முதல் நிகழ்ச்சியாக சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக மௌண்ட் பேட்டன் பதவி ஏற்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். அருகில் எட்வினா மவுண்ட் பேட்டன் அமர்ந்தார். அவர்களுக்கு இடப்பக்கத்திலும் வலப் பக்கத்திலும் இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்தனர்.

பண்டித நேரு பருத்தியாலான ஜோத்பூர் உடைகளுக்கு மேல், லினன் துணியாலான கோட் அணிந்திருந்தார். அவரது கோட் பை-க்கு வெளியே அழகிய சிவப்பு ரோஜா சிரித்துக் கொண்டிருந்தது.

கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்த சர்தார் படேல், வெள்ளை நிற வேட்டியை மேலே போர்த்தி, ரோமப் பேரரசர் போலக் காட்சி அளித்தார்.

அடுத்து, சுதந்திர இந்தியாவின் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள். பிரதமர் நேருஜி உட்பட மொத்தம் பொறுப்பேற்றவர்கள் 14 பேர் மட்டுமே. "சுதந்திரம் தேசத்திற்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸýக்கு அல்ல. ஆகவே அனைவரையும் இணைத்துச் செயல்படுங்கள்' - என்பது அண்ணல் காந்தியின் அறிவுரை.

அதன்படி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் - ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி - என ஐந்து மதத்தினரும் இடம் பெற்றிருந்தார்கள். ஏன் நாத்திகர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

காங்கிரசை காலமெல்லாம் எதிர்த்த ஆர்.கே. சண்முகம் செட்டி, அண்ணல் அம்பேத்கர், இந்து மகா சபையைச் சேர்ந்த சியாம் பிரசாத் முகர்ஜி - ஆகியோரும் அப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

பாபு ஜகஜீவன் ராமைச் சேர்த்து, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கு பிரிதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

தியாகி, தேசபக்தர், கல்வியாளர், ஒன்றுபட்ட இந்தியாவே என் இலட்சியம் எனச் சொன்ன அபுல்கலாம் ஆசாத், ஜான் மத்தாய், (கிறிஸ்தவர்) சி.எச். பாபா (பார்சி - விஞ்ஞானி), சர்தார் பல் தேவ்சிங் (சீக்கியர்) ராஜ்குமார் அமிர்த கௌர் (மகளிர் பிரதிநிதி) - என்று அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் வகையில் அமைச்சரவை அமைந்திருந்தது.

அரசியல் அமைப்பு சபையில் காலை 10-30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. டில்லி மாநகரத்தில் 1000-த்துக்கும் அதிகமான இடங்களில் கொடி ஏற்றப்பட்டதாம்.

மாலை கூட்டத்தில் வெளிநாட்டுத் தூதர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், ஒரு எளிய மனிதர் உட்காரப் போனாராம். "அழைப்பிதழ் எங்கே' எனக் கேட்டபோது, "அழைப்பிதழா அது ஏன் பெற வேண்டும். நாங்கள்தான் சுதந்திரப் பிரஜைகளாயிற்றே' எனச் சொன்னாராம் அவர்.

பேருந்துகளில் ஏறிய கிராமத்து மக்கள் சுதந்திர தேசத்தில் நாங்கள் ஏன் கட்டணம் தர வேண்டும் எனக் கேட்டார்களாம்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாகாண பிரதமர் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தேசியக் கொடியை ஏற்றினார். மக்கள் காலை முதல் இரவு வரை சாரி சாரியாக வந்து, கொடிக்கு வணக்கம் செலுத்தினார்கள்; கோட்டையைக் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிராமப் பகுதிகளில் கரகாட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டார்கள்.

இவ்வாறு தேசமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், அதே நேரத்தில் சில பகுதிகளில் சில மக்கள் சஞ்சலத்திலும், சந்தேகத்திலும், அவநம்பிக்கையிலும், கவலையிலும் மூழ்கிக் கிடந்தார்கள்.

மேற்கு பஞ்சாபில் பாதிக்கப்பட்ட 20,000 அகதிகளுக்கு சிகிச்சையும், பாதுகாப்பும் வழங்கும் பொறுப்பு சுசிலா நய்யாருக்கு காந்திஜியால் வழங்கப்பட்டது.

பம்பாயில் கொலாசியா நகர்ப் பகுதியில் வாழும் ஒரு பெண், தன் வீட்டு பால்கனியில் இந்தியக் கொடியையும் ஏற்றி, பாகிஸ்தான் கொடியையும் ஏற்றினார். அவர்தான் ஜின்னாவின் ஒரே மகளான டினா.

லாகூரைச் சேர்ந்த குஷ்வந்த் சிங் "என் பஞ்சாபைப் பிரித்து சிதைத்து சீரழித்துவிட்டார்ளே. நான் அனைத்தையும் இழந்துவிட்டேனே. நான் மகிழ்ச்சி அடையவில்லை. சுதந்திர தினம் எனக்கு ஒரு சோக நாள்' - எனச் சொன்னார்.

இவ்வாறு தேசத்தின் பெரும் பகுதியில் பெருமகிழ்ச்சி. சிலர் மனங்களில் கலக்கமும் கவலையும்.

அன்று காலையில் அண்ணல் காந்திஜியின் ஆசியும், சுதந்திரதினப் பரிசும் கேட்டு நேருவும் பட்டேலும் எழுதிய கடிதத்தை, ஒரு தூதுவன் கல்கத்தாவில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த காந்திஜியிடம் கொடுக்கிறார்.

கடிதத்தைப் படித்துப் பார்த்த மகாத்மா "நானோ பரம ஏழை, அவர்களோ அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு நான் என்ன தந்து விட முடியும்' எனச் சொல்கிறார், அப்பொழுது சிறிது காற்றடிக்கிறது. கிளைகள் அசைகின்றன ஒரு இலை காந்தியின் கையில் விழுகிறது. அந்த இலையை தூதுவனின் கையில் கொடுக்கிறார் காந்திஜி.

இலையைப் பெற்றுக் கொண்ட தூதுவன் கண்ணீர் வடிக்கிறான். அக்கண்ணீரால் இலை ஈரமாகிறது.

"கடவுள் கருணை நிறைந்தவர். வறண்ட இலையை நேரு, பட்டேலுக்கு பரிசாகக் கொடுக்க இறைவன் விரும்பவில்லை. ஆகவே தான் அதனை ஈரமாக்கிக் கொடுக்கிறார். இந்த இலை உங்கள் கண்ணீரால் பிரகாசிக்கிறது. அதே போல் இந்தியாவும் பிரகாசிக்கும். இது தான் என் சுதந்திர தினப் பரிசு' எனச் சொல்லுகிறார்.

இந்தியா பிரகாசிக்கும் என்பது அண்ணலின் நம்பிக்கை: அவர் வழி நடந்தால், அவர் நம்பியது நடக்கும்! நினைத்தது நிறைவேறும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024