Saturday, August 27, 2016

வி.ஏ.ஓ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த இளைஞரால் பரபரப்பு!



விழுப்புரம்: தந்தையின் இறப்பு உதவித்தொகை பெறுவதற்காக, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் இளைஞர் பிச்சை எடுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். கொளஞ்சியின் மனைவி விஜயா தனது மகன்கள் ஐயப்பன், அஜித்குமார், மகள் அனுசுயா ஆகியோருடன் ம.குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்த விஜயாவுக்கு, தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவர் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12,500 வந்துள்ளது. அதைப் பெற வந்த கொளஞ்சியின் மகன் அஜித்குமாரிடம், உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், எனக்கு ரூ.3,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ம.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், நீங்கள் கேட்கும் பணத்தை தர என்னிடம் பணம் இல்லை என அஜித்குமார் கூறி இருக்கிறார். ஆனாலும், பணம் தந்தால் மட்டுமே உதவித்தொகையை பெற முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் கண்டிப்புடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் மனமுடைந்த அஜித்குமார், ம.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள கடை வீதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், ''என் அப்பாவின் ஈம சடங்கிற்கு வாங்கிய கடனை அடைக்க வக்கு இல்லை. என்னிடம் அப்பா இறப்பிற்கு வந்த ரூ.12,500 தருவதற்கு மூன்றாயிரம் ரூபாய் கேட்கிறார் ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ." என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி, அரசின் உதவித்தொகையைப் பெற கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க, எனக்கு பிச்சை போடுங்கள் என்று அனைவரிடமும் கேட்டுள்ளார்.



இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024