Wednesday, August 3, 2016

வேலை செய்யும் இடத்தில் இந்த 6 வாக்கியங்களை பயன்படுத்தாதீர்கள்! #DailyMotivation

vikatan

நீங்கள் சிறப்பாக வேலை செய்பவராக இருக்கலாம். ஒழுக்கம் உட்பட அனைத்திலும் ‘அட.. நம்பர் ஒன்யா இவன்’ என்று பேர் வாங்கி இருக்கலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இந்த ஆறு வாக்கியங்கள், நிர்வாகத்துக்கு உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். அவை என்னென்ன தெரியுமா?

1. ‘இது முடியாது’ அல்லது ‘இதனைச் செய்வது கடினம்’

புதிதாக நிர்வாகம் ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆலோசனை கேட்கும் போது. செய்ய முடியாது அல்லது அதனை செயல்படுத்துவது கடினம் என்று கூறாதீர்கள். ஒருவேளை உண்மையிலேயே அந்தத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றால், அதிலுள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு அதனை உங்கள் அலுவலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, எப்படி செய்தால் அந்தத் திட்டம் வெற்றி பெறும் என யோசியுங்கள். ஆரம்பிக்கும் போதே முடியாது என்ற‌ வார்த்தையை பயன்படுத்துவதை நிர்வாகம் எப்போதும் விரும்பாது.

2. இது என் வேலை அல்ல

தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு துறையோ சில காரணங்களால் இயங்க முடியாமல் போகும் போது அந்த வேலையை உங்களிடம் அளித்தால், ‘இது என்னுடைய வேலை அல்ல; இதனை நான் செய்ய மாட்டேன்’ என்று கூறாதீர்கள். உங்களுக்கு அந்த வேலை தெரிந்ததால் - அல்லது அதை உங்களால் செய்ய முடியும் என்று நிர்வாகத்திற்கு உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால்தான் - அந்த வேலை உங்களுக்கு அளிக்கப்படுக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வாய்ப்புகளை வீணாக்காமல், சிறப்பாக முடிக்க பழகுங்கள்.



3. இது சிறப்பாக இல்லை!

ஓர் அணி, ஏதோ ஒரு வேலையைச் செய்து அதனை அறிக்கையாக அளிக்கும் போது, இந்த வேலை சிறப்பாக இல்லை. இதில் இந்த விஷயங்கள் இல்லை என்று கூறாதீர்கள். அதில் உள்ள குறைகளை அவர்களுக்கு பரிந்துரைகளாக அளிக்க முயற்சி செய்யுங்கள். இது அந்த அணிக்கு உத்வேகத்தை அளிப்பதுடன், உங்களது தலைமை பண்பையும் பிரதிபலிக்கும் விதமாக அமையும்.

4. இல்லை என்று துவங்காதீர்கள்!

நீங்கள் பங்கேற்கும் முக்கியமான மீட்டிங்குகளையோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களையோ, இல்லை என்ற வார்த்தையோடு ஆரம்பிக்காதீர்கள். உதாரணமாக ஒருவர் ஒரு செயலை எப்படி செய்யலாம் என்று கேட்கும் போது ''இல்லை, இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்காமல், இந்தச் செயலை இப்படிச் செய்யலாமே’ என வழங்குங்கள். அவருக்கும் உடனடி வெறுப்பு வராமல் இருக்கும். உங்கள் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.



5. நாம் இப்படி செய்வதில்லை

அலுவலகத்தில் புதிய முயற்சியை ஒருவர் செய்கிறார் என்றால், அதனை என்ன என்று கவனியுங்கள். அது புதிதாக உள்ளது என்பதற்காக ''இது போன்ற விஷயங்களை நாம் செய்வதில்லை'' என்று கூறி புதுமைகளை மறுத்துவிடாதீர்கள். எல்லா விஷயங்களுமே புதிதாக யாரோ ஒருவர் உருவாக்கிய விஷயம் தான் எனபதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

6. அவர் சரியில்லை, அவர் சோம்பேறி, நிறுவனத்தைப் பிடிக்கவில்லை!

ஒரு நபரை ‘அவர் சரியில்லை’ என்றோ அல்லது ‘அவர் சோம்பேறித்தனமாக இருக்கிறார்’ என்றோ விமர்சிக்காதீர்கள் தனிப்பட்ட மனிதர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. உயரதிகாரியாக இருந்தாலும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வேலையை மட்டுமே விமர்சிக்க முடியும். அதேபோல் நிறுவனத்தைப் பிடிக்கவில்லை என்று விமர்சித்துவிட்டு பணிபுரியாதீர்கள். என்னதான் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தாலும், இவர் விருப்பமில்லாமல் பணிபுரிகிறார் என்ற மனநிலையையே அது உருவாக்கும்.

ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...