Thursday, August 11, 2016

ஆ'வலை' வீசுவோம் 25 - வியத்தகு வோல்பிராம் ஆல்பா தேடியந்திரம்!



தேடல் முடிவுகளை பட்டியலிடாமல் தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அலசி ஆராய்ந்து புதுமையான முறையில் முன்வைத்து வியப்பில் ஆழ்த்தும் தேடியந்திரம் இது. |

உங்கள் தேடல் அனுபவத்தை மாற்றிக்கொள்ள விருப்பமா? எனில், மாறுபட்ட தேடியந்திரமான வோல்பிராம் ஆல்பாவை பயன்படுத்திப் பாருங்கள்.

வோல்பிராம் ஆல்பா புதிய தேடியந்திரம் அல்ல; ஆனால், புதுமையான தேடியந்திரம். கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான வேல்பிராம் ஆல்பா தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து தன்னை மேலும் ஆழமாக்கி கொண்டுள்ளது. வெகுஜன தேடியந்திர அந்தஸ்து பெறாவிட்டாலும் மற்ற தேடியந்திரங்களால் முடியாத எண்ணற்ற விஷயங்களை செய்யக்கூடிய சிறப்பு தேடியந்திரமாக இருக்கிறது. ஆனால் ஒன்று... இந்த தேடியந்திரத்திற்கு நீங்கள் முதலில் பழக வேண்டும். ஏனெனில், வோல்பிராம் ஆல்பா வழக்கமான தேடியந்திரம் அல்ல; இது முற்றிலும் மாறுபட்ட தேடியந்திரம்.

கணக்கிடும் அறிவு இயந்திரம் (கம்ப்யூடஷேனல் நாலெட்ஜ் இஞ்சின்) என்றே வோல்பிராம் ஆல்பா அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த அறிமுகமே பலரை மிரட்சியில் ஆழ்த்தக்கூடும். இந்த தேடியந்திரத்தை முதன் முதலில் பயன்படுத்தும் போதும் மிரட்சியே ஏற்படலாம்.

இதன் முகப்பு பக்கம் எளிமையாகவே இருக்கிறது. அதில் வழக்கமான தேடல் கட்டத்தையும் பார்க்கலாம். ஆனால் மற்ற தேடியந்திரங்களுக்கும், வோல்பிராம் ஆல்பாவிற்குமான பொதுத்தன்மை தேடல் கட்டத்தின் தோற்றத்துடன் முடிந்து விடுகிறது.

உங்கள் குறிச்சொற்களை எல்லாம் கொண்ட வராதீர்கள் என்று சொல்வது போல, வோல்பிராம் ஆல்பா, நீங்கள் எதைக் கணக்கிட அல்லது அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என முகப்புப் பக்கத்தில் கேட்கிறது. அதாவது, குறிச்சொல்லை தட்டச்சு தேடுவதற்கு பதில் எதைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அதைக் கேள்வியாக கேட்கலாம். அல்லது, எதையேனும் கணக்கிடுவதற்கான கேள்வியை கேட்கலாம்.

ஆம், வோல்பிராம் ஆல்பா கேடக்கப்படும் கேள்வியின் தன்மையை புரிந்துகொண்டு அதற்கேற்ற பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், வோல்பிராம் ஆல்பா கேள்வி - பதில் தேடியந்திரம் மட்டும் அல்ல; கேள்விகளுக்கு அது பதில் அளிக்க முற்படுகிறது. ஆனால் அதற்கு மேல் எண்ணற்ற விஷயங்களையும் செய்கிறது.

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தேடியந்திரம் இணையத்திற்கு புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆஸ்க் (ஜீவ்ஸ்) தேடியந்திரம் இதைச் செய்ய முயன்றது. அதன்பிறகு வேறு தேடியந்திரங்களும் இந்த நோக்கத்துடன் அறிமுகமாயின. ஆனால் கேள்விகளுக்கு பதில் அளிக்க கம்ப்யூட்டர் சார்ந்த நிரல்களை நம்புவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. மனித மனம் எளிதாக புரிந்துகொள்ளும் சாதாரண கேள்வியை கம்ப்யூட்டர் புரிந்துகொண்டு சரியான பதில் சொல்ல வைப்பது பெரும் சவாலானது. சில நேரங்களின் கேள்வியின் தன்மையை கிரகித்துக்கொண்டு பொருத்தமான பதிலை அளித்தாலும் பல நேரங்களில் கேட்கப்படும் கேள்விக்கு பொருந்தாத பதிலை அளித்து வெறுப்பேற்றப்படும் அனுபவத்தை ஆஸ்க் உள்ளிட்ட கேள்வி பதில் இயந்திரங்கள் அளித்தன.

வரிகளையும் வாசகங்களையும் மனிதர்கள் புரிந்துகொள்ளும் விதத்திலேயே கம்ப்யூட்டர் நிரல்கள் புரிந்துகொள்வது என்பது தொழில்நுட்ப உலகின் பெருங்கனவாக நீடிக்கிறது. எனவே, கேள்விக்கு பதில் அளிப்பதாக எந்தத் தேடியந்திரமும் மார்தட்டிக்கொள்வதில்லை.

இந்தப் பின்னணியில்தான், வோல்பிராம் ஆல்பாவின் செயல்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன் வோல்பிராம் ஆல்பாவின் அடிப்படையான வேறுபாட்டை தெரிந்துகொள்ள வேண்டும்.

கூகுள் உள்ளிட்ட மற்ற தேடியந்திரங்கள் போல குறிச்சொல்லுக்கு ஏற்ப தேடல் முடிவுகளை பட்டியலிட்டு தருவதில்லை. ஏனெனில் இது இணையத்தில் தேடுவதில்லை. எனவே, இது இணையதளங்கள், இணையப் பக்கங்களை கொண்ட பட்டியலை முன்வைப்பதில்லை. மாறாக, தான் திரட்டி வைத்திருக்கும் தகவலை அலசி ஆராய்ந்து கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் விஷயங்களை புரிந்து கொள்வதற்கான புதிய வழியை முன்வைக்கிறது.

கூகுள் போன்ற தேடியந்திரங்களின் செயல்பாட்டை எளிதாக விளக்கி விடலாம். அவை இணையத்தில் வலைவீசி அதில் உள்ள இணையதளங்களை எல்லாம் அட்டவனையாக்கி வைத்திருக்கின்றன. இணையவாசிகள் குறிச்சொல் கொண்டு தேடும்போது அந்த குறிச்சொற்களை கொண்ட இணைய பக்கங்களை எல்லாம் கொண்டுவந்து கொட்டுகின்றன. குறிச்சொற்களை எடை போட்டு அதன் பொருத்தமான தன்மையை புத்திசாலித்தனமாக அளவிடுவதற்கான பிரத்யேக வழியை கூகுள் உருவாக்கி வைத்திருப்பதால் அதன் தேடல் பட்டியல் சிறந்ததாக கருதப்படுகிறது.

வோல்பிராம் ஆல்பா இதைவிட சிக்கலான செயல்முறையை கொண்டிருக்கிறது. எல்லா வகையான தகவல்களையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை புரிந்துகொள்ள பயன்படும் எல்லா வகையான மாதிரிகளையும், முறைகளையும், நிரல்களையும் துணையாக கொண்டு எதைப் பற்றியும் என்ன எல்லாம் சாத்தியமோ அதை எல்லாம் கணக்கிட்டு புரிந்துகொள்ளும் வகையில் அளிப்பதே வோல்பிராம் ஆல்பாவின் நோக்கமாக இருக்கிறது.

இதன் பின்னே சிக்கலான கணிதவியல் சமன்பாடுகளும், சிக்கலான நிரல்களும் இருக்கின்றன. இவற்றைக்கொண்டு டன் கணக்கிலான தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை அலசி பதில்களாக அளிக்கிறது.

சாமானியர்கள் வோல்பிராம் ஆல்பா பின்னே இருக்கும் தேடல் நுட்பத்தை புரிந்துகொள்வது சிக்கலானது. ஆனால் அதில் தேடிப்பார்க்கும் போது, இந்த நுட்பத்தின் பரிமாணத்தை பார்த்து வியக்கலாம். உதாரணத்திற்கு, இதில் ஐசஜ் நியூட்டன் பெயரை தட்டச்சு செய்து பார்த்தால் முன்வைக்கப்படும் தேடல் பக்கம் நியூட்டன் சார்ந்த முக்கிய அமசங்களை திரட்டி தொகுத்து அளிக்கிறது. முதலில் நியூட்டன் என்பதை பெளதீக விஞ்ஞானியாக புரிந்துகொள்வதாக தெரிவிக்கிறது. (நீங்கள் எதிர்பார்ப்பது வேறு நியூட்டன் என்றால் அதனடைப்படையிலும் தேடலாம்).

இந்த அறிமுகத்தின் கீழ் நியூட்டன் பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்கள் இடம்பெறுகிறது. அதன் கீழ் நியூட்டன் வாழ்க்கையின் கால வரிசை வரைபடம் மற்றும் அவரைப்பற்றிய முக்கிய விவரங்கள் இடம்பெறுகின்றன. நியூட்டனின் உடல் வாகு தொடர்பான தகவல்கள், பூர்வீகம், உறவினர்கள் ஆகிய விவரங்களுடன் கணிதம் ,பெளதீகம் உள்ளிட்ட துறைகளில் அவரது சாதனைகளும் பட்டியலிடப்படுகின்றன. நியூட்டன் பற்றிய விக்கிபீடியா விவரம் கடையில் வருகிறது. இந்த விவரங்கள் ஒவ்வொன்றையும் மேற்கொண்டு விரிவாக்கி அணுகும் வசதியும் இருக்கிறது. வழக்கமாக பார்க்க கூடிய நியூட்டன் பெயரிலான இணைதளங்கள், இணைய பக்கங்கள், கட்டுரைகள் போன்ற எதுவுமே கிடையாது. ஆனால் நியூட்டன் பற்றி கச்சிதமாக அறிந்துகொள்ள இந்த பக்கம் வழி செய்கிறது.

இது ஒரு உதாரணம்தான். நம்மூர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினி காந்த் துவங்கி பலரைப் பற்றிய தகவல்களை இப்படி மாறுபட்ட வகையில் தருகிறது. அதே போல இந்தியா என்று தேடினால் நம் தேசம் பற்றி அடிப்படையான தகவல்களை பல பிரிவுகளில் தொகுத்து அளிக்கிறது. தமிழ் மொழி என தேடினாலும் இதே போல நம் மொழி குறித்த விரிவான புரிதலை ஏற்படுத்த முயல்கிறது. வரைபடங்கள் போன்றவை பொருந்தக்கூடிய தேடல்களில் தான் இதன் உண்மையான பரிமாணத்தை பார்க்க முடியும். கணிதம், பெளதீகம் சார்ந்த தேடல்களில் இதை உணரலாம். குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை தேடும் போது இது அளிக்கும் விரிவான தகவல் சித்திரம் மூலமான பதில் மலைக்க வைக்கும்.

கூகுளின் எளிமைக்கு பழகிய இணைய மனதிற்கு இந்த தேடியந்திரம் முதலில் குழப்பத்தை அளிக்கலாம். ஆனால் இதை பயன்படுத்த துவங்கும் போது பிரம்மிப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக வழக்கமான தேடலில் இருந்து விலகிய தேடலுக்கு பயன்படுத்தும் போது இதன் செழுமையான தேடல் அனுபவம் லயிக்க வைக்கும்.

மற்ற தேடியந்திரங்களில் செய்ய முடியாதது, ஆனால் வோல்பிராம் ஆல்பாவில் சாத்தியமாகக் கூடிய விஷயங்கள் என்பதற்கும் நீளமான பட்டியலும் இருக்கிறது. இரண்டு இடங்களுக்கு இடையிலான தொலைவை கடக்க ஆகும் நேரத்தை கணக்கிடலாம், உறவு முறையை பரம்பரை வரைபடமாக்கி புரிந்து கொள்ளலாம், எந்த இணையதளம் பிரபலமாக இருக்கிறது என ஒப்பிட்டுப்பார்க்கலாம் என பலவகையான பிரத்யேக வசதிகளை இது அளிக்கிறது. கணிதவியல் சமன்பாடுகளுக்கான விடை காணும் வசதியும் இருக்கிறது.

தேடல் கட்டத்தின் கீழே இந்த வசதிகள் எல்லாம் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் வோல்பிராம் உருவாக்கிய வோல்பிராம் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில் இந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுக்கான செயலி வடிவம் என பல விதங்களில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

தேடியந்திர முகவரி > https://www.wolframalpha.com/

- சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...