சசிகலா நடத்திய ஆடிவெள்ளி சிறப்பு பூஜை! -தேர்தல் வெற்றிக்குப் பரிகாரமா?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். ' ஆடிவெள்ளிக் கிழமை நாளில் அம்பாளை வழிபடுவது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மையை அதிகரிக்கும்' என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சசிகலா வரும் தகவல் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. கோவில் தக்கார் தொழிலதிபர் கருமுத்து.கண்ணன், பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கோவிலில், அம்மனுக்கு நடந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு, உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் குவிந்தனர். ஆனால், கோவிலுக்கு வந்த சுவடே தெரியாமல் பூஜையை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் சசிகலா.
சசிகலாவின் சிறப்பு வழிபாடு குறித்து நம்மிடம் பேசிய ஆலய நிர்வாகி ஒருவர், " பருவநிலை மாற்றத்தை உண்டாக்கக் கூடிய மாதம் என்றவகையில் ஆடிக்கு சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் முளைக் கொட்டு நிகழ்ச்சிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன. அதிலும், ஆடி வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு பூஜை செய்யும்போது, ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
. குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மனுக்குப் பெயரே ராஜமாதங்கி. பச்சை வர்ணத்தில் வீற்றிருப்பவர். அதிகாரத்தில் இருப்பவர்கள் ராஜ மாதங்கியை வணங்கும்போது, எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அரசாட்சி தொடரும் என்ற நம்பிக்கை வலம் வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை மீனாட்சி அம்மன் சந்நிதியில் வைத்து வழிபட்டார் சசிகலா. தேர்தலுக்குப் பிறகு அம்மனுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார்" என்றார்.
- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்
No comments:
Post a Comment