Saturday, August 27, 2016

இந்தியாவில் உசேன் போல்ட்டுகள் ஏன் உருவாவதில்லை?!' -சீறுகிறார் சீமான்

vikatan.com

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நிதி உதவிகள் குவிந்து வருகின்றன. ' தமிழ்நாட்டிலும் உசேன் போல்ட்டுகளுக்கு பஞ்சமில்லை. அவர்களைத் தேர்வு செய்யாமல் குறுக்கீடு செய்வதே விளையாட்டுத்துறை அதிகாரிகள்தான்' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது இந்தியா. " நம்மிடம் வீரர்களுக்குப் பஞ்சமில்லை. தினமும் என்னுடன் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஓடும் வீரர்களைப் பாருங்கள். அத்தனை பேரும் உசேன் போல்ட்டுக்கு இணையானவர்கள்தான். அவர்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டில் தங்கம் வெல்வதற்கு ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

" ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மிக நுட்பமாக கவனிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் போட்டியைக் கைவிட்ட நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளே, அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இரண்டாம் இடத்திற்கான போட்டிகளே தொடர்ந்தன. கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டைக் கைவிட்ட நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் சாதித்துவிட்டன. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் இரண்டு பதக்கங்களையும் பெண்கள்தான் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த நாட்டின் மானத்தைக் காத்த கண்மணிகள் அவர்கள். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் ஒரு தங்கம் வெல்வதற்குக்கூடவா ஆட்கள் கிடைக்கவில்லை?



செர்பியாவில் இருந்து பிரிந்த கொசாவா, வெறும் பத்து லட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடு அது. தங்கம் வென்ற நாடுகள் பட்டியலில் கொசாவா இடம் பெற்றுவிட்டது. உலகின் வெல்ல முடியாத தலைசிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் உசேன் போல்ட். ஜமைக்கா என்ற சிறிய நாட்டைச் சேர்ந்தவர் அவர். அவரை அந்த நாடு எப்படி உருவாக்கியிருக்கிறது பாருங்கள். விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றை ஒரு நாட்டின் அழகான முகங்களாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல விளையாட்டு வீரனை ஒரு நாடு உருவாக்குகிறது என்றால், அந்த நாடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நாட்டில் எல்லாம் வர்த்தக மயமாக்கப்பட்டுவிட்டன. சந்தைப் பொருளாதாரத்தை கவனிக்கவே அரசுக்கு நேரம் சரியாக இருக்கிறது. விளையாட்டுத் துறையின் அனைத்து மட்டத்திலும் சாதி, மத குறுக்கீடுகள் அதிகரித்துவிட்டன.

அதனால் ஏற்படுகிற பின்விளைவுகள்தான் இதெல்லாம். நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் சிறந்த நீச்சல் வீராங்கனையாக திகழ்கிறார். அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு விளையாட்டுத் துறை அதிகாரிகளின் குறுக்கீடுகள்தான் காரணம். இதை அரசியல் என்று சொல்ல விரும்பவில்லை. அரசியல் என்ற சொல்லை புனிதமாகக் கருதுகிறேன். ஆந்திராவிலிருந்து நேற்று பிரிந்து சென்ற தெலுங்கானா மாநிலம் வெள்ளிப் பதக்கம் வெல்கிறது என்றால், அந்த மண்ணைச் சேர்ந்தவர்களின் வெறிதான் வெற்றிக்குக் காரணம். 130 கோடி மக்களில் வேகமாக ஓடுவதற்கு ஓர் இளைஞன் கூடவா நம்மிடம் இல்லை? நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதலில் மிகச் சிறந்த வீரர், வீராங்கனைகள் நம்மிடம் உள்ளனர். அவர்களைத் தேர்வு செய்து இந்த நாட்டின் செல்வங்களாக மாற்ற வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பராமரித்து, விளையாட்டைத் தவிர வேறு எந்த சிந்தனையும் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளி வென்ற பி.சி.சிந்து பேட்டி கொடுக்கும்போதுகூட, ' மூன்று மாதங்களாக செல்போனைப் பயன்படுத்தவில்லை' என்கிறார். எந்த ஒரு கவனச் சிதைவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வெற்றியை நோக்கி அவர் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். நமது தடகள வீராங்கனை சாந்திக்கு உரிய நிவாரணத்தைத் தராமல் அரசு அலைக்கழிக்கிறது. அவருக்கான நீதியை தமிழக அரசே உடனே செய்து தர முடியும். இன்று வரையில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அடுத்து வரக் கூடிய காலகட்டங்களில் பதக்கம் வெல்ல வேண்டுமானால், விளையாட்டுத்துறையை விளையாட்டாக பார்க்க வேண்டும். நியாயமான தேர்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும். ' தன் மதம் சார்ந்தவன், சாதியைச் சேர்ந்தவன்தான் வர வேண்டும்' என்றால் எதுவும் உருப்படாது. மத்திய விளையாட்டுத் துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024