Tuesday, August 2, 2016

யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!

vikatan.com

எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி.

அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை அடைந்து, புகழையும் பெருமையையும் அடைந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. தன் கட்சியின் தலைவர் தன்னை அறைந்தார் என மாநிலங்களவையின் மையத்தில் நின்று அவர் சொல்லிய ஒற்றை வார்த்தையால் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கிறார் அவர். ஏற்கெனவே இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவரான ஜெயலலிதாவை இன்னும் பெரிய சர்ச்சையில் தன் பேச்சினால் சிக்கவைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.

யார் இந்த சசிகலா புஷ்பா...

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சமயத்தில், நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகர் என்பவருடன் திருமணமானது. ஆசிரியை ஆவதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அதற்காக அடுத்தடுத்து கல்வித் தகுதிகளை ஏற்படுத்திக்கொண்டாலும் வேலை கிடைத்தபாடில்லை. விரக்தியுடன் சென்னைக்கு கணவருடன் ரயில் ஏறினார் சசிகலா புஷ்பா .
சென்னையில் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நர்சரி டீச்சராக சேர்ந்தார். கூடவே மசாஜ் சென்டர் ஒன்றையும் வருமானத்திற்காக நடத்தி வந்தார்.

அந்த சமயத்தில் அ.தி.மு.கவில் செல்வாக்கோடு வலம்வந்த ஜெயக்குமாருடன் அறிமுகம் ஏற்பட்டது. அதன் மூலம் அதிமுகவில் பொறுப்புகள் பெற முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அதன் பின்னர், அவரின் செல்வாக்கில் சென்னை அண்ணாநகரில் மகளிருக்கான தங்கும் விடுதி ஒன்றை நடத்திவந்தார். அவரின் கணவரும் இந்த சமயத்தில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.



ஆனாலும் பொருளாதார ரீதியாக சிரம திசைதான். போராட்டம் மிகுந்த வாழ்க்கையை நடத்தி வந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதை விட்டு அகலவே இல்லை. அ.தி.மு.கவில் பெயரும் புகழும் பெற வேண்டுமானால் தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கு அறிமுகமாகி இருக்கவேண்டும் என்ற திட்டமிடுதலுடன் தலைமையுடன் நெருக்கமான சிலருடன் நட்பு கொண்ட சசிகலா, அந்த வரிசையில் அதிமுக வின் நிழல் மனிதரான மணல் தொழிலதிபர் ஒருவருடன் நட்பு கிடைத்தபின் விடுவிடுவென வளர்ச்சி அடைந்தார்.

மணல் தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த சசிகலா, கட்சியில் தனக்கு ஏதாவது பொறுப்பு வாங்கிக் கொடுக்குமாறு அவரை நெருக்க தொடங்கினார். சசிகலா புஷ்பாவின் இந்த தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக அந்த தொழிலதிபர் மூலம், 'மிடாஸ்' மோகனிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரிடமும் கட்சிப் பொறுப்பு பற்றியே சசிகலா புஷ்பா வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பாவிற்கு கார்டனுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நெருக்கமானார். இது கட்சியில் இன்னும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள காரணமானது.

அதனால்,சென்னையில் குடியிருந்த போதிலும் 2010 ம் ஆண்டு நெல்லை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பு சசிகலா புஷ்பாவுக்கு கிடைத்தது. கட்சி மேலிட வட்டத்தில் நல்ல அறிமுகமானவராக வலம் வரத் துவங்கினார் . 2011 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியின் வேட்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பரவலாக உள்ளூர்க் கட்சி நிர்வாகிகள் பலரும், ‘யார் இந்த சசிகலா புஷ்பா? இவருக்கு எப்படி சீட் கிடைத்தது?’ என்று விவாதிக்க தொடங்கினார்கள். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா மற்றொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன், தனக்கு தெரியாமல் முதல் பட்டியல் வெளியானதாகவும் அறிவித்தார்.



இரண்டாவது பட்டியலில் சசிகலா புஷ்பா பெயர் இடம்பெறவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், கட்சித் தலைமையுடன் நெருக்கமாக இருக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 2011ல் கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா புஷ்பாவுக்கென்று ஆதரவு வட்டம் உருவானது. கட்சியின் சார்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் அளவுக்கு ஜெயலலிதாவால் அப்போது முக்கியத்துவம் தரப்பட்டது.

அந்த அளவுக்கு கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது. பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக வேண்டும் என்கிற கனவுடன் தீவிரமாகச் செயல்பட்டார். கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மூலமாக காய் நகர்த்தினார். ஆனால், சொந்த ஊர்ப் பிரச்னை அதற்கு முட்டுக் கட்டையானது. சென்னையில் வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு தனது வாக்காளர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றினார்.
அவர் எதிர்பார்த்தது போலவே, தூத்துக்குடி மாநகராட்சித் தேர்தலில், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதில் வெற்றி பெற்று மேயராகவும் தேர்வானார். அந்த சமயத்தில் மாநகராட்சிக் கூட்டம் நடந்த போதே ஆணையரை பேச விடாமல் மைக்கை பிடுங்கியதாக சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், கட்சித் தலைமையுடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு ஏற்றம் மட்டுமே ஏற்பட்டது. மேயர் பொறுப்பில் இருந்தபோதே 2014 ல் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பைக் கொடுத்தது, அ.தி.மு.க. தலைமை. அத்துடன், மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. மாநிலங்களவை அதிமுக கொறடாவாகவும் அவர் ஆக்கப்பட்டார். பளபளப்பாக சென்று கொண்டிருந்த அவரது அரசியல் வாழ்வினை ஒரு ஆடியோ அதகளம் செய்துவிட்டது.

ஆண் நண்பர் ஒருவருடன் சசிகலா புஷ்பா செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி கட்சி எல்லையைத் தாண்டி, அவர் மற்றவர்களின் கவனத்திற்கும் வந்தார். அந்த ஆடியோவில் அவர், ‘நேற்று நான் *******இருந்தேன். டெல்லியில் குளிரா இருக்குல்ல.. அதான் *****ந்தேன்’ என்கிற ரீதியில் பரபரப்பாக பேசியதுடன், ‘****** மாவட்ட ஆட்சியர் ஒரு தத்தி. அவருக்கு எதுவுமே தெரியாது’ என்று அதிகாரிகளையும் மட்டம் தட்டி, தம் சொந்தக் கட்சி தொடர்பான ரகசியங்கள் சிலவற்றையும் பேசியிருந்தார்.



அதன் பின்னர் இறங்கு முகம்தான் கட்சியில். கட்சியின் அனைத்துப் பொறுப்புகளும் பிடுங்கப்பட்டன. அத்துடன் மாநிலங்களவை கொறடா பொறுப்பில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். ஆனாலும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். மீண்டும் இழந்த இடத்தை திரும்பப் பெற்று விடமுடியும் என்கிற நம்பிக்கையுடனேயே அவர் செயல்பட்டார். ஆனால் திமுக எம்.பி சிவாவுடனான சர்ச்சை அதை இன்னும் சிக்கலாக்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மாநிலங்களவை எம்.பி.,திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இந்த புகைப்படங்கள் உண்மை இல்லை என்றும் தனது கணவருடன் இருந்த படங்களை யாரோ விஷமிகள் 'மார்பிங்' செய்து வெளியிட்டு தன்னை அசிங்கப்படுத்துவதாகவும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் திருச்சி சிவாவை மையப்படுத்தியே சர்ச்சை அவர் வாழ்வில் மையம் கொண்டுவிட்டது.

சசிகலா, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சென்னை திரும்ப, டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கிருந்த திருச்சி சிவாவை சட்டையைப் பிடித்து அடித்ததாக செய்தி வெளியாகி, இப்போது அவர் கட்சியை விட்டு கட்டம் கட்டப்படும் அளவுக்கு நிலை வந்துவிட்டது. தனது கட்சித் தலைமையை அவமரியாதையாக பேசியதால்தான் உணர்ச்சிவசப்பட்டு சிவாவை அடித்து விட்டதாக அவர் அந்த சம்பவத்திற்கு காரணம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்க சென்னையில் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார்.

அந்த சந்திப்பு அவரது அதிமுகவுடனான அரசியல் வாழ்வின் இறுதி என்றே இப்போது சொல்லப்படுகிறது. காரணம் இரும்புப் பெண்மணி என இந்திய மீடியாக்களால் சொல்லப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இமேஜை அசைத்துப் பார்க்கும் விதமாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் நடுநாயகமாக நின்று சர்ச்சைக் கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதிமுகவிற்கும் அதன் தலைமைக்கும் பெரும் சங்கடங்களைத் தரும் பேச்சு அது. “கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன். திருச்சி சிவாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன்.

ஆனால், எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்த பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். ஆனால், என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன்.இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன். என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பியை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்குப் பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில் கூட வாழமுடியவில்லை" என அழுதபடியே தெரிவித்தார் சசிகலா புஷ்பா.

இதன்மூலம் ஜெயலலிதாவை நோக்கி இந்திய மீடியாக்கள் தங்கள் கேமிராவின் வெளிச்சத்தை ஆர்வத்தோடு நீட்ட நாடாளுமன்றத்தில் நடுமையத்தில் நின்று ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இந்தப் பேச்சின் சுருக்கத்தை மாநிலங்களவை பத்திரிகையாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள், சசிகலா புஷ்பா கட்டம் கட்டப்பட்ட செய்தியை அந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து சசிகலாவுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது அதிமுக தலைமை.


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பிலும், ஒருபோதும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் அப்படி யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

.

இது ஒருபுறமிருக்க, சசிகலாவின் வளர்ச்சி அ.தி.மு.கவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பினாமி பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். குறிப்பாக மாற்றுக் கட்சியினர் பெயரில்தான் சசிகலாவின் சொத்துக்கள் உள்ளதாக அதிர்ச்சிக் கொடுக்கிறார்கள் அவர்கள். திருச்சி சிவாவுக்கும், சசிகலாவுக்கும் ஏற்பட்டமோதலுக்கு பின்னணியும் இதுதான் என்கிறார்கள்.



தங்களுக்கு கீழ்ப் படியாத சந்தர்ப்பங்களில் அதிமுக தலைமை, தங்களை அடித்ததாக கடந்த காலங்களில் புகார்கள் கிளம்பியதுண்டு. பத்துக்கு பத்து அறைகளில் புறப்பட்ட இந்த புகார், இப்போது மாண்புமிகு எம்.பிக்கள் குழுமிய இடத்தில் பேசப்பட்டிருப்பதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது.


“நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று மாநிலங்களவையிலேயே ஒரு உறுப்பினர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியதன்மூலம் கட்சிக் கட்டுப்பாடு, தலைமையுடன் முரண், அரசியல் சர்ச்சை என்பதையெல்லாம் மீறி அவர் தனது பிரச்னையில் கட்சித் தலைமை மீதான அதிருப்தியை ஒரு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்வரும் குற்றப் புகாராகவே மாநிலங்களவையில் முன்வைத்திருக்கிறார். இந்திய அரசியலில் இப்போது சசிகலா புஷ்பா விவாதப் பொருளாகி இருக்கிறார். இன்னும் சில தினங்களுக்கு இந்திய மீடியாக்களின் லைவ் வேன்களை சென்னை தெருக்களில் அதிகம் பார்க்கலாம்.

- ஆண்டனிராஜ், எஸ். மகேஷ்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...