Wednesday, August 24, 2016

முகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா வாழ்த்துகள் கமல்.. அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ஜெயலலிதா!


வாழ்த்துகள் கமல்.. அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ஜெயலலிதா!


சென்னை: ரஜினி முதல் ஆளாக வாழ்த்தி விட்டார்.. அதுவும் எங்களின் நடிகர் திலகம் என்று டிக்ளேரே செய்து விட்டார். கருணாநிதி வாழ்த்தி விட்டார். அன்புமணி வாழ்த்தி விட்டார்... இன்னும் யார் யாரோவெல்லாம் வாழ்த்தி விட்டனர்.. ஆனால் இந்த மாநிலத்தின் முதல்வர், இந்த மாநிலத்தின் முன்னணி நடிகரான கமல்ஹாசனுக்கு, செவாலியர் விருது பெற்றதற்காக சின்னதாக கூட வாழ்த்தவில்லை.

ஒருவரை வாழ்த்துவதும், வாழ்த்தாமல் போவதும் அவரவர் விருப்பம். யாரும் அதை கேள்வி கேட்க முடியாது. வாஸ்தவம்தான்.. ஆனால் கமல்ஹாசனால் தமிழகத்திற்குத்தான் பெருமை கிடைத்துள்ளது, தமிழுக்குத்தான் பெருமை கிடைத்துள்ளது, தமிழ் சினிமாவுக்குத்தான் பெருமை கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட பெருமையைத் தேடிக் கொடுத்தவருக்கு வாழ்த்து சொல்லாமல் அமைதி காப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் போன்ற அரும் பெரும் தங்கங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்தபோது பேதம் பாராமல் இந்திய உணர்வோடு ஜெயலலிதா முதல் அனைவரும் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தோம். அதேபோல நமது மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு செவாலியர் விருது கிடைத்திருப்பதையும் அதே மாநில உணர்வோடு பாராட்டியிருக்கலாம் இல்லையா?

அட, நரேந்திர மோடி கூட பாராட்டவில்லையே!.. சின்னதாக ஒரு வாழ்த்து.. வாழ்த்துகள் கமல்.. என்று சொல்லியிருந்தால் கூட அந்த நடிகனுக்கு சின்னதாக ஒரு மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.

உண்மையில் ஜெயலலிதாவுக்குப் பிடித்த நடிகராக இருந்தவர் கமல்ஹாசன்தான். கமலும் கூட ஜெயலலிதா பக்கம்தான் எப்போதும் சாயந்திருப்பார். ஆனால் இந்த உள்ளார்ந்த நட்பில் விரிசல் விழுந்தது விஸ்வரூபம் படம் சமயத்தில்தான். அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதில் பல விதமான தடங்கல்கள், தடைகள், இடையூறுகள். படத்திற்குத் தடை வர, கமல்ஹாசன் கொந்தளிக்க, நாட்டை விட்டுப் போவேன் என்று மிரட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அந்த சமயத்தில்தான் ஜெயலலிதாவுக்கு, கமல் மீது கடும் கோபம் வந்ததாக கூறப்படுகிறது.

அது பின்னர் கடந்த ஆண்டு வெள்ளம் சென்னையை மூழ்கடித்தபோது மேலும் விஸ்வரூபம் எடுத்தது... கமல்ஹாசன் அரசின் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் அரசை கடுமையாக கோபப்பட வைத்து விட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கமல்ஹாசனை மிகக் கடுமையாக தாக்கி அறிக்கை விட, அரசுக்கும், கமலுக்கான மோதலாக அது மாறியது. பின்னர் கமல் விளக்கம் அளித்தார்.

அந்த விளக்கத்தில், 'மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கை நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றிய புலம்பலே. இது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டுப்போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர்காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு ஆட்சியாளர்களின் பிளாக் லிஸ்ட் பட்டியலில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டதாக பேசிக் கொண்டனர். இதனால்தான், இந்த நிகழ்வுகளை மனதில் வைத்துத்தான் கமல்ஹாசனுக்குக் கிடைத்துள்ள இந்த விருதுக்காக அரசுத் தரப்பும் மகிழவில்லை, ஜெயலலிதாவும் உற்சாகம் அடையவில்லை என்கிறார்கள். இதனால்தான் வாழ்த்தும் சொல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. "அம்மா" என்றால் பெருந்தன்மை.. "அம்மா" என்றால் அன்பு.. "அம்மா" என்றால் மன்னிப்பு என்பார்கள்.. கமலுக்கு வாழ்த்துச் சொல்லி இதை நிரூபித்து விடலாமே முதல்வர் ஜெயலலிதா?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024