சொல்வதெல்லாம் உண்மை' அவமானத்தால் தற்கொலையா?
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஜீ தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒளிபரப்பாகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தொடர்பாக
சிலர் வழக்கும் போட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் (60) என்பவர் இது போன்றதொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அவமானப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் இரண்டு லாரிகள் சொந்தமாக வைத்திருந்தார். தனது மனைவி அம்பிகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மைத்துனி ரேணுகாவிடம் நெருக்கமாக வாழ்ந்துள்ளார். ரேணுகாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரேணுகாவின் கணவர் மகேந்திரன். ரேணுகா மீது சந்தேகமடைந்த மகேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பன் தரப்பினர் போலீஸுடம் சொன்னபோது,
''சொத்து பிரச்சனை காரணமாக ரேணுகா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நாட இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட நாகப்பனை ஒளிபரப்ப மாட்டோம் என்று உறுதி கொடுத்து பேசியுள்ளனர். ஆனால் நிகழ்ச்சியில் நாகப்பன் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் ரேணுகாவின் இரண்டு மகள்களிடம் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம்சாட்டியது ஒளிபரப்பானது. இதனால் மனமுடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தங்கள் தந்தை மரணத்திற்கு சொல்வதெல்லாம் உண்மைதான் காரணம் என்று நாகப்பன் மற்றும் அம்பிகா தம்பதியின் மகள் ஆதி , மகன் மணிகண்டன் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர். தனது தந்தை சாவுக்கு நியாயம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. நிகழ்ச்சி தொகுப்பாளரே நீதிபதி போல் தீர்ப்பு கூறியதால் மனமுடைந்து போனார் தனது தந்தை என்று மகன் மணிகண்டன்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
வியாபார நோக்கத்துடன் குடும்பங்களில் சாதாரண சண்டைகளை பூதாகரமக்கி அவர்களது அந்தரங்கத்தை படம் பிடித்து போட்டு அதன் மூல காசு பார்த்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடும்பத்தினரை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என நாகப்பனின் உறவினர் சந்திரசேகர் கூறுகையில், 'சமீபத்தில் மேடவாக்கத்தில் ஒரு இடத்தை 45 லட்சம் ரூபாய்க்கு நாகப்பன் விற்றார். அந்தப் பணம் தொடர்பாகவே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரேணுகாவின் வீட்டில் நாகப்பன் குடியிருந்து வந்தார். அங்கும் தகராறு ஏற்பட்டதால் பெரும்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். போனிலேயே தற்கொலை செய்ய வேண்டாம் என்று அந்த உறவினர் தெரிவித்தார். அப்போது, செய்யாத தவறுக்கு என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்த அவமானத்திற்குப் பிறகு என்னால் வெளியில் நடமாட முடியாது.
இதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று நாகப்பன் விரக்தியில் பேசியதோடு இணைப்பையும் துண்டித்துவிட்டார். உடனடியாக உறவினர்கள் எல்லோரும் அவர் வீட்டிற்க்கு சென்றோம். ஆனால் அவர் அதற்குள் தற்கொலை செய்துவிட்டார். ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டபோதே அதை நிறுத்தும் படி, போனில் தகவல் தெரிவித்தோம். ஆனால், எங்களிடம் நிறுத்துவதாக சொல்லியவர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தி நாகப்பனை கேவலமாக பேசியிருக்கிறார்கள். மேலும், நாகப்பன் ரேணுகாவின் இரண்டு மகள்களிடமும் பாசமாக நடந்துகொள்வார். பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவார். அப்படி பாசமாக இருந்தவர் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் மீது நாகப்பனின் தாயார் நாகம்மாள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரில், தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் சேர்க்க நாங்க முடிவு செய்தபோது போலீஸார் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் அவரது பெயர் இல்லாமல் புகார் கொடுத்தும், போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். முதல்வர் தனிப்பிரிவிற்கும், சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அங்கேயும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவோம்.' என்றார்.
இதுகுறித்து ஜீ தமிழ், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்,
''இந்த சம்பவம் குறித்து, ஜீ தமிழ் தொலைகாட்சி நிர்வாகம் சட்ட வல்லுநர்களை வைத்து ஆராய்ந்து வருகிறது. இந்த செய்தியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி பெரிதுபடுத்தி வருகிறது. பொதுவாக, பிரச்னையோடு வரக்கூடிய நபர்களுக்கு நல்லது செய்வதே எங்களுடைய நோக்கம் ஆகும். எதிர்தரப்பையும் விசாரித்தே அவர்களுக்கான வழிகாட்டுதலை தருகிறோம். அந்த நிகழ்ச்சியில் நான் பேசியபோது கூட, 'குழந்தைகள் உதவி மையத்தின் தொடர்பு எண்ணான 1098 - ஐ தொடர்பு கொண்டு பிரச்னையை கூறியிருந்தாலே, அவர்கள் அதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பார்கள்', என்று சொல்லியிருந்தேன்.'' என்று கூறினார்.
-வே.கிருஷ்ணவேணி
No comments:
Post a Comment