Sunday, August 28, 2016

இது நல்லதல்ல... By ஆர். வேல்முருகன்

DINAMANI

கற்றலின் எதிரி விருப்பம் இன்மையோ, மறதியோ, அச்சமோ அல்லது வெறுப்போ கிடையாது. இவை அனைத்தையும் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் தண்டனைதான்.

அறிவியல் உலகம் எத்தனையோ முன்னேற்றத்தைக் கண்டுள்ள இந்தச் சூழ்நிலையிலும் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, பள்ளிக் குழந்தைகளின் கைகளில் கற்பூரத்தை ஏற்றிச் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளார் அண்மையில் தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர்.

பொதுவாக, தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியைகளை நியமிப்பது, குழந்தைகளின் மேல் அன்பு செலுத்தி நன்கு கற்றுத் தருவார் என்பதால்தான்.

ஆனால் சூடு வைத்ததன் மூலம் தான் ஆசிரியை பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார், அந்த ஆசிரியை. எந்த ஆசிரியர் இயக்கமும் குறைந்தபட்சம் இதை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலால் சூடுபட்ட குழந்தைகளுக்குக் கல்வியின் மேல் கண்டிப்பாக வெறுப்புத்தான் வளர்ந்திருக்கும்.

இது தவிர, பல இடங்களில் தொடரும் பாலியல் வக்கிரங்கள், வகுப்புக்கு குடிபோதையில் வரும் ஆசிரியர்கள், தனக்குப் பதிலாக வேறு ஓர் ஆசிரியரை நியமித்து விட்டு, சொந்த வேலையைப் பார்க்கச் செல்லும் ஆசிரியர்கள் என்று பிரச்னைகளின் வடிவம் வெவ்வேறு விதமாக உள்ளது.

பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு பெருகியுள்ள இந்தக் காலத்திலும் மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாகக் கருதப்பட்டுப் போற்றப்படும் குரு, இவ்வாறு செய்வதுதான் பொதுமக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட சம்பவங்கள் எல்லாம் சிறிய உதாரணங்கள்தான். இதே நிலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் ஆசிரியர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் மதிப்பு குறைந்துவிடும்.

ஈடுபாடுதான் கல்வி கற்பதன் முதல் படி என்பது ஆசிரியர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே மிகவும் கேவலமாகப் பார்க்கும் இத்தகைய சூழ்நிலையில், எத்தனை ஆசிரியர்கள் தங்களது மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது கேள்விக்குறிதான்.

ராமேசுவரம் தீவில் ஒரு காலத்தில் தினசரி செய்தித்தாள்களை வீடு, வீடாக விநியோகித்த ஒரு சிறுவன், தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வந்தது மட்டுமல்லாமல், நாட்டின் முதல் குடிமகனாகவும் உயர்ந்தார் என்பது வரலாறு.

தான் முதல் குடிமகனாக இருக்கும்போது, திருச்சி கல்லூரியில் படித்தபோது தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை, சந்திக்க விரும்பினார் அப்துல் கலாம். பாதுகாப்பைக் காரணம் காட்டி ஆசிரியரை அப்துல் கலாம் இருக்குமிடத்துக்கு அழைத்து வரலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனால் தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை தான் சென்று பார்ப்பதுதான் சரி என்று கூறி அந்த ஆசிரியரை தானே சென்று சந்தித்து வந்தார் அப்துல் கலாம்.

நாட்டின் முதல் குடிமகனாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து வரச் செய்வது என்பது அப்துல் கலாமுக்குப் பெரிய விஷயமாக இருந்திருக்க முடியாது.

இவர் சென்று பார்த்ததால் இருவரின் மீதான, ஆசிரியர், மாணவரின் மீதான எண்ணங்களும் மரியாதையும் மிகவும் உயர்ந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒரு மாணவரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பது யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்போதும் பெயர் தெரியாத எத்தனையோ ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் கண்டிப்பாக எந்த விருதும் கிடைக்காது.

அதற்காக அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. தங்கள் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இப்போதும் பல ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுகிறார்கள். தங்கள் ஊதியத்தின் ஒருபகுதியை மாணவர்களின் நலன்களுக்காகச் செலவிட்டு, பாடத்திட்டத்திற்கு அப்பாலும் பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு கற்றுத் தந்து கொண்டிருக்கின்றனர்.

முதலில் குறிப்பிட்ட விவகாரத்தில் சூடுபட்ட குழந்தைகள் அச்சத்தின் பிடியில்தான் இருப்பார்கள். அப்படி அச்சத்தின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் ஒரு குழந்தையால் எதைக் கற்றுக்கொள்ள முடியும்?

கற்றல் என்பது குழந்தைக்குக் குழந்தை கண்டிப்பாக மாறுபடும். இதுதொடர்பான விழிப்புணர்வு பெற்றோர்களிடம் மட்டுமல்லாமல், பெரும்பாலான ஆசிரியர்களிடமும் இல்லை.

தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சங்கங்கள் கூக்குரலிடுகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பதற்கே உயர் அதிகாரிகள் சங்கடப்படுகின்றனர்.

இப்போதைய சூழ்நிலையில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்துவரும் தலைமுறைக்குக் கல்வியின் மீது நாட்டத்தை ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பார்கள், படிப்பதற்கு மாணவ, மாணவியர் இருக்க மாட்டார்கள்.

இது தனியார் பள்ளிகள் மேலும் வளர்ச்சியடையவே ஊக்கமளிக்கும். இந்த நிலை நாட்டுக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் நல்லதல்ல.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024