Monday, August 29, 2016

குறள் இனிது: கொஞ்சமாவது நினைச்சுப் பாரு குமாரு!

THE HINDU TAMIL

விளையாட்டுகளை பெரிய திரையில் விளையாடிய அனுபவம் உண்டா உங்களுக்கு?

வீடியோ இப்ப இந்தத் துரத்தும் (chase) விளையாட்டை விளையாடலாம் வாங்க.

ராட்சத மோட்டார் பைக்கில் சிரமப்பட்டு பாலன்ஸ் செய்து உட்கார்ந்து விட்டீர்கள் நீங்கள். புர்புர் எனும் பயங்கர சத்தத்துடனும் பெரும் புகையுடனும் வண்டி கிளம்பி விட்டது.

மானசீகமாக வேகம் கொடுக்கின்றீர்கள்; எதிரில் வரும் வண்டியில் மோதி விடாமல் வளைக்கின்றீர்கள்; பின்னால் வரும் பெரிய லாரிக்கு வழி விடுகின்றீர்கள்.

பெரும் இரைச்சலுடன் சீறிப் பாயும் வண்டி உங்கள் கையசைவுகளுக்கெல்லாம் பணிவது ஒரு கிறக்கத்தைத் தருகிறது இல்லையா? ஆனால் புயலாய்ப் பறக்கும் வேளையில் கொஞ்சம் கவனம் சிதறுகிறதே! அடாடா, வண்டி இடது பக்கச் சுவரில் படாரென மோதி விழுகிறதே! அச்ச்சோ தீப்பிழம்பாய் எரிகிறதே! அத்தகைய கோர விபத்தில் உங்கள் உடம்பில் மட்டும் என்ன மிஞ்சும்?

ஆனால் இது வீடியோ விளையாட்டுத்தானே! ஒன்றும் நடக்காதது போல உடனே எழுந்து மீண்டும் ஓட்ட முடிகிறது! இதுவே நிஜ வாழ்க்கையில் சாத்தியமா? விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் எழுதி வைக்கப் பட்டிருந்த இந்த வாசகத்தைப் பாருங்கள்.

‘மற்றவர்களின் தவறுகள் மூலம் கற்றுக்கொண்டு விடுங்கள்; ஏனெனில் உங்கள் தவறுகள் வழியாகக் கற்றுக் கொள்ள நீங்கள் உயிரோடு இருப்பீர்களா எனச் சொல்ல முடியாது!'

உண்மைதானே. அதனால்தான் விமான ஓட்டிகளுக்கு பயிற்சி அறையிலேயே உட்கார்ந்து கொண்டு வானத்தில் விமானத்தை ஓட்டுவதைப் போன்ற சூழ்நிலையைத் தத்ரூபமாக உருவாக்கி விமானத்தைச் செலுத்துவதன் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள்! அண்ணே, நமது வாழ்க்கையில் நிகழக்கூடிய விபத்துகளை, தவறுகளை இந்த மாதிரி கற்பனை விளையாட்டு விளையாடி கற்றுக் கொள்ளமுடியாதே!

சாலையில், வானத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் வரும் பொழுது என்ன செய்யவேணும் எனப் பயிற்சியளிப்பது போல இதற்கும் ஏதேனும் வழி உண்டா? ஆமாம், இதற்கும் ஓர் எளிய வழி இருக்கிறது. மற்றவர்களின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வதுதான் அது! விளம்பரத்தில், விற்பனையில், வியாபாரத்தில் மற்றவர்கள் செய்த தவறுகளைக் கவனிப்பதும் அவற்றை நாம் தவிர்த்து விடுவதுமான யுக்தி!

ஆனால் கோபம் வந்து கண்ணை மறைப்பது போலவே வெற்றி வந்தாலும் சிலருக்குக் கண்ணை மறைத்து விடுகிறது!

வெற்றி தலைக்கு ஏறக்கூடாது, தோல்வி இதயத்தைத் தாக்கக் கூடாது என்பார்கள்.

இந்த மாதிரியான நேரங்களில் நம்முடன் போட்டியிட்டுத் தோற்றவர்களையும் அவர்கள் செய்த தவறுகளையும் நாம் எண்ணிப்பார்த்தால் நிதானம் வரும்!

மற்றவர்களின் தவறுகளிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்; ஏனெனில் எல்லாத் தவறுகளையும் செய்து பார்க்க உங்கள் வாழ்நாள் போதாது என எலெனர் ரூஸ்வெல்ட் சொல்லியதை மறுக்க முடியுமா?

நாம் மகிழ்ச்சியில் திளைத்து மயங்கும் பொழுது, தம் மறதியினால் கெட்டுப் போனவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்!

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ( குறள்: 539)

somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024