Wednesday, August 3, 2016

உங்கள் புரொஃபஷனல் இமேஜை வளர்த்துக் கொள்ள 5 வழிகள்!

உங்கள் புரொஃபஷனல் இமேஜை வளர்த்துக் கொள்ள 5 வழிகள்!


ஒருவர் மிகவும் சந்தோஷமான மனநிலையோடு சேஷியலாக பழகக் கூடிய நபராகவும், மிகவும் தாமதமாக தனது வேலைகளை செய்பவராகவும் இருக்கலாம், இல்லையென்றால் தனிமையில் அதிகம் இருப்பவராகவோ, யாரோடும் சிரித்துப் பேசாத நபராகவோ இருக்கலாம். இதெல்லாம் தனிப் பட்ட வாழ்க்கையில் சரி, ஆனால் புரொஃபஷனல் இமேஜ் என்ற ஒரு விஷயம் உள்ளது. ஒரு நபர் அலுவலகத்திலும், வேலையிலும் இப்படி இருக்க வேண்டும் என்ற புரொஃபஷனல் விஷயங்களைக் கட்டாயம் தெரிந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1. உங்கள் வேலை என்ன?

உங்கள் வேலை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் நிர்வாகம் சில கூடுதல் விஷயங்களை எதிர்பார்க்கலாம். அதனைச் செய்ய நீங்கள் தகுதியானவர் என்பதால் தான் அந்த வேலை உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மையான வேலையையும், இலக்கையும் அடைந்துவிட்டுப் பின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முதன்மையான வேலை தான் உங்களது புரொஃபஷனலிஸத்தை பிரதிபலிக்கும். அதில் தெளிவாக இருங்கள். பின்னர் கூடுதல் வேலைகளைக் கவனியுங்கள்.

2. கற்றுக் கொள்ளுங்கள்!

உங்கள் வேலைக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன் என்று இருக்காதீர்கள். தினசரி கற்றுக் கொள்ளும் மனநிலையுடன் அனைத்து வேலைகளையும், நபர்களையும் அணுகுங்கள். நீங்கள் அணுகும் வேலையும், நபரும் உங்களைச் சோர்வடைய வைக்கும் விஷயமாக இருக்கக் கூடாது. அது உங்களுக்கு ஒரு புதிய விஷயத்தைக் கற்றுத்தரும் ஒன்றாக இருக்க வேண்டும். உங்களிடம் கேட்டால் சில விஷயங்களுக்குத் தீர்வு இருக்கும் என்ற நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

3. வேலை - நட்பு சமநிலை!

உங்களை ஒருவர் இவர் நமது நண்பர் தானே நாம் சில வேலைகளைச் செய்ய தவறினால் கோபம் கொள்ள மாட்டார். இவர் எப்போது சொன்னாலும் வேலைகளை முடித்துவிடுவார் என்பன போன்ற, உங்களை நிர்ணயிக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். வேலைகளில் எந்தப் பாகுபாடும் பார்க்காதீர்கள். வேலையைத் தரும் பாஸ் முதல், நீங்கள் வேலை வாங்கும் நபர் வரை அனைவரிடமும் நன்றாகப் பழகலாம். ஆனால் வேலையில் நியாயமாக இருங்கள். அதேபோல் எப்போது சொன்னாலும்(உங்கள் அலுவலக நேரம் தவிர) வேலையைச் செய்யும் நபராக இருக்காதீர்கள். அது உங்களை அப்படியேஒரே நிலையில் வைத்திருக்கும். அவசர உதவிகளை மட்டும் செய்யும். எப்போதும் அதிகம் தேவைப்படும் நபராக இருங்கள்.





4. செயல் திறனை அதிகரியுங்கள்!

உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையோ அல்லது பொறுப்போ அதில் செயல்திறனை அதிகரியுங்கள். உதாரணமாக உங்களிடம் 10 பேர் முடிக்கும் வேலையை 8 பேரை கொண்டு முடிக்க சொன்னால் தனிமனிதர்களின் பொறுப்பை உணர்ந்து குழுவாகச் செயல்திறனை கூட்டுங்கள். தானாக வேலையின் செயல்திறன் அதிகரிக்கும். உங்களது குறுகிய இலக்குகளால் பெரிய இலக்குகள் சாத்தியமாகும். உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

5. உடல்மொழி!

நீங்கள் செய்யும் வேலை 80 சதவிகிதம் என்றால் மீதமுள்ள 20 சதவிகிதத்தை உங்கள் உடை, உடல்மொழி ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன. உங்கள் உடை புரொஃபஷனலாக இருப்பது அவசியம். சில நிறுவனங்களில் உடை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளப்படாது. ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களில் உடை கட்டுப்பாடு என்பது அந்த அளவுக்கு இல்லை. ஆனால் உடல் மொழி அனைத்து இடங்களிலும் கவனிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. நீங்கள் பேசும் போது சில வார்த்தைகளைத் தவிர்த்து, சில சைகைகளைச் செய்யாமல், சரியான அமரும், நிற்கும் முறைகளைப் பிரதிபலித்தால் நீங்கள் பர்ஃபெக்ட் புரொஃபஷனல் இமேஜை பெறுவீர்கள்.



- ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...