ரியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறதா, மலைப்பாக இருக்கிறதா?
உலகிலேயே அதிக வேகமாக ஓடுபவர் யார் தெரியுமா? 9.58 விநாடிகளில் 100 மீட்டர்களை ஜமைக்கா நாட்டின் உசைன் போல்ட் கடந்ததுதான் இதுவரை முறியடிக்கப்படாத உலக சாதனை!
`மின்னல் போல்ட்' எனும் செல்லப் பெயருடைய இவருக்கு இரண்டாவதாய் வருபவர்கள் மிகவும் பின்னால் இருப்பதையும் பார்த்து ரசியுங்கள்!
இவர் ஒரு காலத்தில் செருப்பை மாற்றி மாட்டிக் கொண்டு ஓடியவர் தான்! ஆனால் இப்பொழுது? 2008, 2012 இரண்டு ஒலிம்பிக்கிலும் 100மீ, 200 மீ இரண்டிலும் முதலில் வருவது என்றால் சும்மாவா?
இவரைப் போல வேறு சிலரும் 6'5”உயரம் இருக்கலாம்.ஆனால் இவர் மட்டும் இவ்வளவு சாதித்தது எப்படி? சிறிதும் சிதறாத கவனக் குவிப்பினால் தானே! கொஞ்சம் அசந்தாலும் அடுத்த ஆள் முன்னாடி ஓடிப் போய் விடுவானே!
சரி, இதுவரை ஒலிம்பிக்கில் மிக அதிக பதக்கங்களை வென்றவர் யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம். மைக்கேல் பெல்ப்ஸ் எனும் அமெரிக்க நீச்சல் வீரர்தான் 21 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் வாங்கியுள்ளார்! அவர் வாங்கியுள்ள மொத்த ஒலிம்பிக் பதக்கங்கள் 25!
அதிகபட்ச ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் என்றால் சும்மா இல்லைங்க.இவருக்கு அடுத்துள்ளவர் இவர் வாங்கியதில் பாதியைக் கூட வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
விடமாட்டேன் என்று தண்ணீரில் குதித்தவர் தான்!
'பறக்கும் மீன் 'எனக் கூறப்படும் அளவிற்கு வேகமாக நீந்தினார், நீந்தினார்,யாரும் எட்டமுடியாத இடத்திற்கு நீந்தியே வந்து விட்டார்!
7 வயதிலேயே சகோதரிகள் கொடுத்த உத்வேகம்தான் அவரது உற்சாகத்தை ஒருமுகப்படுத்தி உயர்த்தி விட்டது!
சரி, நம்ம திபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டாரே! திரிபுரா பெண்ணான இவர் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஜிம்னாஸ்டிக்ஸ் படிக்கப் போனவராம்!
திபாவின் ஒருமித்த கவனம் இறுதிப் போட்டி வரை விளையாட்டில் இருப்பதற்காகவும், அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாதென்பதற்காகவும், அவரது பயிற்சியாளர் பிஷ்பேஷ்பர் நந்தி அவரை ‘வீட்டுச் சிறையில்' வைத்து விட்டாராம்! பெற்றோர் தவிர யாருக்கும் அவரிடம் பேச அனுமதி இல்லை!
இக்கட்டுரையை நீங்கள் படிக்கும் பொழுது 'பறக்கும் பாவை'யான திபாவின் சாகஸங்களையும் உசைன் மற்றும் பெல்ப்ஸின் புதுப்புது சாதனைகளையும் பார்த்து ரசித்திருப்பீர்கள்!
பணியில் அர்ப்பணிப்பு என்பது ஒருவரை அவரது இலக்குடன் ஒட்ட வைக்கும் பசை என்பார் ஜில் கோனெக்!
விளையாட்டோ, வணிகமோ வெற்றி பெறத் தேவை ஒருமித்த கவனம்!
அலட்சியமின்மை எனும் கருவியைக் கொண்டு கருத்துடன் செயலாற்றினால், முடிக்க முடியாத செயல் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்!
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின் (குறள்: 537)
somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment