Saturday, August 6, 2016

மும்பையில் விடிய, விடிய கொட்டிய கனமழை: சாலை, ரயில், விமான போக்குவரத்து முடங்கியது


மும்பையில் பெய்த கனமழையால் வெள்ள நீரில் மெல்ல மிதந்து செல்லும் மாநகரப் பேருந்து | படம்: பிடிஐ
மும்பையில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக புறநகர் ரயில் மற்றும் விமான போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக கிழக்கு எக்ஸ்பிரஸ், மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை கள் மற்றும் முக்கியமான வடக்கு தெற்கு சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. இத னால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

சியோன்-குர்லா இடையே ரயில் தண்டவாளங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால், புறநகர் ரயில் சேவை ஸ்தம்பித்தது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது குறித்து மத்திய ரயில்வே செய்திதொடர்பாளர் கூறும்போது, ‘‘சியோன், மஸ்ஜித் மற்றும் சந்த்ரஸ்ட் சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இருப்புப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மும்பை சிஎஸ்டி மற்றும் தானே இடையிலான புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பகல் 12.00 மணிக்குப் பின் இயக்கப்பட்டது’’ என்றார்.

எனினும் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் அனைத்து ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்கின்றன. இதற்கிடையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலோர கொங்கன் பகுதியிலும், மகாராஷ்டிராவின் மத்திய பகுதியில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், போலீஸார் உட்பட அனைத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மும்பையை அடுத்த தானே, பால்கர், ராய்கட் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் மும்பையில் இருந்து அகமதாபாத், புனே, நாசிக் மற்றும் கோவாவை இணைக்கும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகா பலேஷ்வர் (159.6 மி.மீ) ராதாநகரி (128.0 மி.மீ), ராய்கட் (84 மி.மீ), மதேரன் (72 மி.மீ) மற்றும் ரத்னகிரி யில் (71.8 மி.மீ) மழை பதிவான தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024