Wednesday, August 10, 2016

5,451 காலியிடங்களை நிரப்ப நவம்பர் 6-ல் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதல் தொழில்நுட்பத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 18 முதல் 32 வரை. எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து வகுப்புகளை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு 18 முதல் 35 வரை. எனினும் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (ஆதரவற்ற விதவைகள் உட்பட) பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்திருந்தால் வயது உச்சவரம்பு கிடையாது. இத்தேர்வுக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வு முறை, பாடத்திட்டம், விண்ணப்பக் கட்டணம், கட்டணச் சலுகை, தேர்வு மையம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024