உத்தரப் பிரதேச அமைச்சர்களின் சமோசா, தேநீருக்கான செலவு ரூ.9 கோடி
ஆர்.ஷபிமுன்னா
உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த 4 ஆண்டுகளில் சமோசா, தேநீர் மற்றும் இதர சிற்றுண்டிக்கு ரூ.8.78 கோடி செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்களில் தேநீர் மற்றும் சிற்றுண்டி பரிமாறப்படுவது உண்டு. இதில் இதுவரை எந்த மாநில அரசும் செலவிடாத அளவில் உ.பி. அமைச்சர்களின் செலவுப் பட்டியல் உள்ளது. இம் மாநிலத்தின் சமூகநலத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சரான அருண்குமார் கோரி, தேநீர், சமோசா மற்றும் குலாப்ஜாமூனுக்காக அதிகபட்சமாக ரூ.22,93,800 செல விட்டுள்ளார். இவரை அடுத்து தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் கைலாஷ் சவுரசியா ரூ.22,85,900 செலவிட்டுள்ளார். இந்தப் பட்டிய லின் மூன்றாவது இடம் பெற்றிருப் பவர் தனது கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் மூத்த அமைச்சரான ஆசம்கான். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரான இவர் தேநீர், சமோசாவுக்காக ரூ.22,86,620 செலவு செய்துள்ளார். இவ்வாறு சிற்றுண்டிக்காக பல அமைச்சர்கள் ரூ.21 லட்சத்துக்கு மேல் செலவிட்டுள்ளனர்.
இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராம் கரண் ஆர்டா, நீர்வள மற்றும் நிலவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜக்தீஷ் சோன்கர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
உ.பி. சட்டப்பேரவையில் கடந்த வாரம் இது தொடர்பாக பாரதிய ஜனதா உறுப்பினர் சுரேஷ் குமார் கண்ணா எழுப்பிய கேள்விக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் எழுத்துமூலம் பதில் அளித்தார்.
அப்போது அகிலேஷ், “கடந்த 2012, மார்ச் 15-ம் தேதி எனது அரசு பதவியேற்றதில் இருந்து 2016, மார்ச் 15 வரை 4 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இந்த 4 ஆண்டு களில் அமைச்சகங்களின் தேநீர், சமோசா மற்றும் இதர சிற்றுண்டி செலவு ரூ.8.78 கோடி” என்றார்.
உபி அரசின் நிர்வாக விதிகளின்படி ஓர் அமைச்சர் நாள் ஒன்றுக்கு மாநிலத்துக்கு உள்ளே ரூ.2500 வரையும் மாநிலத்துக்கு வெளியே ரூ.3000 வரையும் தனது பணிக்காலத்தில் செலவிடலாம் எனவும் தனது பதிலில் அகிலேஷ் சுட்டிக்காட்டினார்.
இதில், கடந்த 2015, அக்டோப ரில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சிவகுமார் பேரியா ரூ.21,93,900 செலவு செய்திருப்ப தாகவும் அகிலேஷ் தெரிவித்தார்.
அமைச்சர்களின் சிற்றுண்டி செலவில் குறைந்தபட்ச தொகை யாக ரூ.72,500 காட்டப்பட்டுள்ளது. இத் தொகையை மகளிர் மேம் பாட்டுத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சராக ஓராண்டு பதவி வகித்த சாதாப் பாத்திமா செல விட்டுள்ளார்.
இது குறித்து ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜேந்தர் சவுத்ரி ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த செலவுகள் பார்ப்பதற்கு மிகவும் அதிகமாகத் தெரியலாம், ஆனால் இவை அனைத்தும் அமைச்சர்கள் தங்களுக்காக மட்டுமே செலவிட்டது அல்ல. அமைச்சர்கள் கூட்டும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காகவும் செலவிடப்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான்” என்றார்.
No comments:
Post a Comment