Monday, August 29, 2016

இரட்டை ஜடை போட்டால்தான் படிப்பு வருமா?...பாரதி ஆனந்த்

Return to frontpage

பள்ளிச் சிறுமிகள் பற்றிய நம் நினைவலைகளைத் தட்டிவிட்டால் நம் கண் முன் முதலில் தோன்றும் காட்சி உச்சி வகிடெடுத்து, இரட்டைப் பின்னல்கள் அதன் கீழ் அழகாய்க் கட்டப்பட்டிருக்கும் ரிப்பன்களுடன் ஓர் உருவம்.

இந்த இரட்டைப் பின்னல்தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒரு புகாரை முன்வைத்திருக்கிறார்.

அதில் இடம்பெற்றிருந்த ஐந்து குற்றச்சாட்டுகள்:

1. ஈரமான தலைமுடியை அப்படியே பின்னலாகக் கட்டும்போது அதிலிருந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் பேன் தொல்லை ஏற்படுகிறது.

2. தினமும் இரட்டைப் பின்னல் கட்டிக்கொள்வது நேர விரயமாகிறது. வீட்டில் இருப்பவர்கள் உதவியை நாட வேண்டியிருக்கிறது.

3. இரட்டைப் பின்னலால் முடி உதிர்வு அதிகமாகிறது.

4. காலையில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

5. இந்த விதிமுறை பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறது.

இந்தப் புகாரை ஆராய்ந்த மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பெண் குழந்தைகளை இரட்டைப் பின்னல் போட்டுக்கொள்ளும்படி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது, அதேவேளையில் மாணவிகள் தலைமுடியைச் சீராக வாரி வர வேண்டும் என்பதைக் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதுதான் சங்கதி. இந்த உத்தரவுக்கு ஆதரவு இருக்கும் அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. அண்டை மாநிலத்தின் இந்தச் செய்தியை முன்வைத்து நம்மூரில் சிலரிடம் இது குறித்துக் கருத்து கேட்டோம். அந்த மாணவியின் கருத்தை ஆதரிக்கும் தாய்மார்கள், தினமும் எண்ணெய் தேய்த்து இரட்டைப் பின்னல்கள் கட்டுவதும், வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே தலையில் தண்ணீர் விட்டு அலசும் நெருக்கடி ஏற்படுவதும் நிச்சயம் சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு நேர விரயத்தையும் இது ஏற்படுத்துகிறது. இரட்டைப் பின்னல்களும் ரிப்பன்களும் இல்லாமல் தலையைச் சீராக வாரிக்கொண்டு வருமாறு தெரிவிப்பதும் நல்லது என்று சொல்கிறார்கள்.

ஒருசில தாய்மார்களைப் பொறுத்தவரை நேர விரயம் என்றாலும் பள்ளிக்குச் செல்லும்போது சீராக இருப்பதுதான் அழகு. அதுமட்டுமல்லாமல் எப்படி வேண்டுமானாலும் தலைவாரிக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டால் பிள்ளைகள், அதுவும் பதின்பருவ பிள்ளைகள், சிகை அலங்காரத்துக்கே அதிக நேரம் செலவழிப்பார்கள் என்று கூறுகின்றனர்.

இந்த இரு வாதங்களையும் ஆசிரியர் ஒருவரிடம் முன்வைத்தோம். புதுச்சேரி சவராயலு நாயகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமாவதி கூறும்போது, “கேரள மாணவியின் வாதங்கள் அனைத்தும் ஏற்புடையதே. நம் நாடு முழுவதும் கல்வியில் சமத்துவம் இருக்கிறதா? கல்வியில் சமத்துவம் ஏற்பட்டால் இளைய சமுதாயம் ஊக்கம் பெற்று ஏற்றம் காணும். அதை விடுத்து இது போன்ற சிறிய விஷயங்களில் கட்டுப்பாடு கடைப்பிடிப்பதால் என்ன நன்மை இருக்கிறது? ஒரு பெண் குழந்தை அவளது தலைமுடியை நீளமாகவோ கட்டையாகவோ வைத்துக்கொள்வது அவளது உரிமை. பள்ளிக்கு வரும்போது தலை முடியைச் சீராக வாரி வந்தால் போதுமானதே. இரட்டைப் பின்னலும் ரிப்பனும் ஒழுங்கின் அடையாளம் அல்ல. அது நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்க நெறி பிம்பம். கேரள மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் உத்தரவை எல்லா மாநிலங்களும் பரிசீலிக்கலாம்” என்றார்.

இன்னும் பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; பெண்களுக்கு முழுமையாகக் கல்வி கொடுக்க முடியவில்லை; பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. செய்வதற்கு இவ்வளவு இருந்தும் நம் சமூகத்துக்கு இரட்டைப் பின்னல்தான் இன்னும் பிரச்சினை என்பதை நினைத்துப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024