Wednesday, August 24, 2016

கமல்ஹாசன் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம்!



நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ' கமல் நடிகர் மட்டுமல்ல. சமூகப் பற்றுள்ள மாபெரும் கலைஞன். அவருக்கு வாழ்த்து சொல்வதற்குக்கூட முதல்வருக்கு நேரமில்லையா?' எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். ஆனால், ஜெயலலிதாவுக்கும் கமலுக்கும் இடையே கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் பனிப்போர் ஆரம்பமானது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், தொடர்ந்து மந்தமான நிவாரண பணிகள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த அந்த பேட்டியில், அரசு செயல் இழந்துவிட்டது, நாங்கள் கட்டிய வரிப்பணமெல்லாம் எங்கே.? என்றெல்லாம் கூறியிருந்தார். கமலின் இந்த பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பன்னீர் செல்வம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல, குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்'' என்று கடுமையாக சாடியிருந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத கமல்ஹாசன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதில் அளித்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்... அதில், ''மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கை நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றிய புலம்பலே. இது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டுப்போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர்காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன்'' என்று சொல்லியிருந்தார்.

கமல் திடீரென பல்டி அடித்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனாலும், அவரின் பதில் அறிக்கையை ஜெயலலிதா ரசிக்கவில்லை என்பதுதான் நிஜம். அதன் வெளிப்பாடே தற்போது செவாலியர் விருது பெற்ற கமலுக்கு வாழ்த்துச் சொல்லாமல் புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...