Monday, August 29, 2016

சென்னை 377: இடைவிடாத 372 ஆண்டு சேவை

THE HINDU TAMIL

தமிழகத்தின் முதல் நவீன மருத்துவமனையான சென்னை அரசு மருத்துவ மனைக்கான விதை 1644-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் இடப்பட்டது.

அதேநேரம் சென்னை அரசு பொது மருத்துவமனை 1772-ல் இருந்து கடந்த 245 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே செயல்பட்டு வருகிறது. 1644 - 1772-க்கு இடைப்பட்ட காலத்தில் அரசு மருத்துவமனை கட்டிடம் 9 முறை மாற்றப்பட்டது. 2002-ல் கட்டிடம் கட்டப்பட்டது 11-வது முறை.

புதிய இடம்

1771 வரை நகரின் மையமாகக் கருதப்பட்ட ஆர்மீனியன் தெருவில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. 1760-களிலேயே மருத்துவமனையை இடம்மாற்றுவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டாலும் 1771 வரை ஒரு கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. 1680-களில் மதராஸ் நரிமேடு பகுதியின் தாழ்வான சரிவுகளில் கிழக்கிந்தியக் கம்பெனியின் கார்டன் ஹவுஸ் அமைந்திருந்தது. அந்த இடத்தில்தான் தற்போதைய சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் அமைந்துள்ளன. அதையடுத்த இடமே அரசு மருத்துவமனை கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

அரசு பொது மருத்துவமனை தற்போது அமைந்துள்ள இடத்தில் முதல் கட்டிடத்தைக் கட்டியவர் ஜான் சல்லிவன். 1772 அக்டோபர் 5-ம் தேதியில் இருந்து புதிய இடத்தில் அரசு மருத்துவமனை செயல்பட ஆரம்பித்தது. அன்றைக்கு நகரைப் பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த கோட்டை போன்ற டவுன் சுவரில், அரசு மருத்துவமனைக்கு வழிவிடும் ஒரு கதவு இருந்தது. அது ‘ஹாஸ்பிடல் கேட்’ என்றே அழைக்கப்பட்டது.

அழகை இழந்த கட்டிடங்கள்

ஆண்டுகள் செல்லச் செல்ல அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல், இதயநோயியல், மற்றச் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட, 1960-களில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டிடங்கள் கட்டப்பட ஆரம்பித்தன. ஆனால், பழைய கட்டிடங்களின் வடிவ அழகை அவை பெற்றிருக்கவில்லை. 2002-ம் ஆண்டில் அரசு மருத்துவமனையின் இரண்டு முதன்மை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இன்றைக்கும் முகப்பில் உள்ள இரண்டு குவிமாட கட்டிடங்களில் இருக்கும் டாக்டர் எம். குருசாமி, டாக்டர் எஸ். ரங்காச்சாரியின் சிலைகள் மட்டுமே 1930-களின் காட்சிகளை நினைவுபடுத்தும் ஒரே அடையாளமாகத் திகழ்கின்றன. முகப்பைத் தாண்டி உள்ளே சென்றால் பழசை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் இந்த வளாகத்துக்குள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அதேநேரம், இந்தக் கட்டிடங்கள் பலவும் பராமரிப்புக்காக ஏங்கித் தவிக்கின்றன.

மக்கள் மருத்துவமனை

மதராஸ் முதல் மருத்துவமனையின் பெயர் 1692-ல் அரசு மருத்துவமனை என்று மட்டுமே வழங்கப்பட்டது. ‘பொது’ என்ற வார்த்தை அப்போது இல்லை. அதற்குக் காரணம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே அந்த மருத்துவமனை சிகிச்சை அளித்து வந்ததுதான்.

1842-ல்தான் அரசு பொது மருத்துவமனை ஆனது. அப்போதுதான் இந்தியர்களுக்கும் இந்த மருத்துவமனை சிகிச்சை அளிக்க ஆரம்பித்தது. 1899-ல்தான் ராணுவச் சேவையை விடுத்து, முழுக்க முழுக்க மக்களுக்கான மருத்துவமனையாக இது மாறியது.

சென்னையின் மருத்துவச் சாதனைகள்

அரசு பொது மருத்துவமனை பல்வேறு புதிய கண்டறிதல்களுக்காகவும் புகழ்பெற்றிருக்கிறது. காலா அசர் என்ற பயங்கர நோய்க்குக் காரணமாக இருந்த கிருமியை மதராஸ் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த கர்னல் சி. டோனவன் 1903-ல் கண்டறிந்தார். இந்தத் தகவல் இங்கிலாந்துக்குச் சென்றபோது, டாக்டர் லீஷ்மேன் என்பவரும் அதே கிருமியைக் கண்டறிந்திருந்தது தெரியவந்தது. அதனால், அந்தப் பாக்டீரியாவைக் கண்டறிந்த பெருமை இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அந்தப் பாக்டீரியாவின் பெயரில் இருவருடைய பெயரும் Leishman Donovani இடம்பெற்றது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த டோனவன், அந்த மருத்துவமனையில்தான் அந்தக் கிருமியைக் கண்டறிந்திருக்க வேண்டும்.



அதேபோலப் பெப்டிக் அல்சருக்கான நவீன சிகிச்சைகளில் ஒன்றை இந்தியாவிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தியவர் டாக்டர் டபிள்யு.ஜெ. நிப்லாக். அரசு மருத்துவமனையில் 1905 மார்ச் 2-ம் தேதி இது நிகழ்த்தப்பட்டது.

முதல் தலைமை மருத்துவரின் விநோதங்கள்

மதராஸ் மருத்துவமனையின் முதல் தலைமை மருத்துவராக டாக்டர் எட்வர்டு பல்க்லே 1692-ல் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே இந்தியாவின் முதல் மருத்துவ-சட்ட ரீதியிலான பிரேதப் பரிசோதனையை அவர் நடத்தினார். கிழக்கிந்திய கம்பெனியின் மூத்த அதிகாரி ஒருவருக்குத் தவறாகக் கொடுக்கப்பட்ட மருந்தால் ஏற்பட்ட இறப்பு காரணமாக இந்தப் பிரேதப் பரிசோதனை நடந்தது. ஏற்கெனவே ஆர்செனிக் இருந்த பாத்திரத்தை ஒழுங்காகக் கழுவாமல் மருந்து தயாரித்ததால் இந்த இறப்பு நேர்ந்தது. அதேபோல முதல் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர், முதல் காயமடைந்ததற்கான சான்றிதழை வழங்கியவரும் எட்வர்டு பல்க்லேதான். அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் இவருடைய கல்லறை உள்ளது. மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ள இந்தக் கல்லறையை இப்போதும் பார்க்கலாம்.

நன்றி: மெட்ராஸ் மியூஸிங்ஸ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024