Wednesday, August 24, 2016

வண்டலூர் ராஜநாகம் உயிரிழந்தது ஏன்?



வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு இராஜநாகங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி, அதில் ஒரு ஆண் ராஜநாகம் உயிரிழந்தது. மிகவும் அருகிவரும் உயிரினங்களுள் ஒன்றான இராஜநாகம் உயிரிழந்தது, விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. என்ன நடந்தது என வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டோம்.


"இறந்த ஆண் இராஜநாகம், 2015 அக்டோபர் மாதம், கர்நாடகாவின் பிலிக்குலா பூங்காவில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. இரண்டு இராஜநாகங்கள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் ஒன்றுதான் தற்போது இறந்துள்ளது. பாம்புகள் வளரும் போது, தோலுரிப்பது இயல்பு. பாம்புகள் வளர, வளர தோல் உரிப்பதும் கூடும். இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு. ஆனால் இந்த இராஜநாகம் இப்படி தோல் உரிக்கவில்லை. இதனால் தலையின், கண் பகுதியையும் சேர்த்து தோல் மூடியது. எனவே பாம்பினால், இரையை எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதுதான் பாம்பின் இறப்பிற்கு காரணம். தோலுரிப்பது என்பது இயற்கையாக நிகழ வேண்டும். ஆனால், இந்த இராஜநாகத்திற்கு தோல் உரியவில்லை. எனவே அதற்கு உதவுவதற்காக அதன் மீது வெந்நீர் தெளிப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தோம். ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. தோல் உரியவில்லை என்பதற்காக நாம் செயற்கையாக அதைச் செய்யவும் முடியாது. மற்ற பாம்புகளைப் போல, ராஜநாகங்களை கையில் எடுத்தெல்லாம் கையாளவும் முடியாது. மிகவும் விஷம் அதிகமான பாம்பு இராஜநாகம். அதற்கு விஷமுறிவு மருந்தே கிடையாது.



ஒருவேளை தலைப் பகுதியில், தோல் உரிந்து, உடல்முழுக்க நிகழாமல் இருந்தால் கூட , மீதித் தோலை உரிப்பதற்காக நாம் உதவ முடியும். ஆனால் இந்த இராஜநாகத்திற்கு தலையிலும் அது நிகழவில்லை. எனவே நாம் செயற்கையாக அதைச் செய்யும் போது, அதன் கண்களும் சேர்ந்து உரிந்திட வாய்ப்புண்டு. அது மேலும் பாம்பிற்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே இந்த மரணம் இயற்கையாக நடந்த ஒரு விஷயம்தான். தகுந்த காலநிலை, உணவு, பராமரிப்பு இல்லாமல் எந்த விலங்காவது இணை சேருமா? ஆனால் இங்கே எத்தனையோ மான்கள், உயிரினங்கள் புதிதாகப் பிறக்கின்றன. பூங்காவைப் பொறுத்தவரை இதுதான் பெரிய விஷயம். ஆனால் இராஜநாகம் என்பது அரிதான விலங்குகளில் ஒன்று என்பதால் இது மட்டும் அதிக கவனம் பெறுகிறது" எனக் கூறினர்.

இராஜநாகங்கள் மிகவும், குளிர்ந்த இடங்களில் மட்டுமே இருக்கும். பசுமை மாறாக் காடுகள்தான் இவற்றின் முக்கியமான வாழ்விடம். ஒரு காலத்தில், அதிகம் வேட்டையாடப்பட்ட இனம் என்பதால், தற்போது வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்த இராஜநாகங்களின் சிறப்பு குறித்து, கோவை 'ஓசை' அமைப்பைச் சேர்ந்த திரு.காளிதாஸ் அவர்களிடம் பேசினோம்.

"நச்சுபாம்புகளிலேயே மிகவும் பெரிய பாம்பு, இந்த இராஜநாகம். இந்தியாவில் பல விஷப்பாம்புகள் இருந்தாலும் கூட, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் மற்றும் நாகப்பாம்பு ஆகிய நான்கு வகைப் பாம்புகளால்தான் 95% உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்த நான்கு வகைப் பாம்புகளுக்கும் விஷமுறிவு மருந்து உண்டு. ஆனால் அதைவிடப் பல மடங்கு விஷமுள்ள, இராஜநாகத்திற்கு விஷமுறிவு மருந்தே கிடையாது. அதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாதது அல்ல. கடந்த 50 ஆண்டுகளில் ஒருவர் கூட, ராஜநாகம் கடித்து இறந்ததாக வரலாறு இல்லை. இதனை 'Gentle Man Snake' என்பார்கள். இதுதான் நிஜமான நல்லபாம்பு! அதுமட்டுமில்லாமல் பாம்புகளை மட்டுமே, உணவாகக் கொள்ளக் கூடிய ஒரு பாம்பு இது. அதே போல கூடுகட்டி, முட்டையிட்டு, அடைகாக்கும் ஒரே பாம்பு இந்த இராஜநாகம்தான்.

பெண் இராஜநாகம், முட்டையிட்டு 100 நாட்கள் வரை அடைகாக்கும். அதுவும் உணவு எதுவும் உட்கொள்ளாமல் அடைகாக்கும். பெண் ராஜநாகம், முட்டையில் இருந்து நாளை குட்டிகள் வெளிவரும் என்ற நிலையில், இன்று கூட்டை விட்டு வெளியேறிவிடும். அதன்பிறகு அது கூட்டிற்கு திரும்பாது. காரணம் என்ன தெரியுமா? ஒருவேளை பசியில், தனக்கே தெரியாமல் தனது குட்டிகளையே உண்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான். அந்த அளவிற்கு தாய்மை உணர்வு நிறைந்த உயிரினமும் கூட! இவை மழைக் காடுகளில் அதிக அளவில் காணப்படும். கர்நாடாகாவில் ஆகும்பே என்ற இடத்தில் இவை அதிகளவில் காணப்படுகின்றன" எனக் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024