ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு தினமான இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக சிறப்பு தர்ப்பண பூஜைகள் செய்த பின்னர் அவர்கள், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை மற்றும் ஆடி பெருக்கு தினமான இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே வரத் துவங்கினர். இன்று காலை அக்னி தீர்த்தத்தில் கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில், தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீராமர் பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தார். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்களும் புனித நீராடியதுடன் மறைந்த தங்களின் முன்னோர்கள் நினைவாக சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி, அம்பாள் சன்னிதிகளில் அவர்கள் தரிசனம் செய்தனர்.
22 தீர்த்தங்களிலும் நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கோயில் தீர்த்தமாடுவதற்காக 4 ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய இரு நிகழ்வுகளும் ஒரே தினத்தில் வருவது 14 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்பு நிகழ்வாகும். இந்த சிறப்பு நிகழ்வு குறித்து அர்ச்சகர் பக்ஷி சிவராஜன் கூறுகையில், '' பிதுர்களின் காலம் என அழைக்கப்படும் தட்ஷியாயண காலத்தில் வருவது ஆடி அமாவாசை. இந்த நாளில் மறைந்த தங்களின் முன்னோர்கள், தங்களை தேடி வருவார்கள் என்பது காலம் காலமாக இந்துக்களிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி தங்கள் முன்னோர்களின் நினைவாக உலகின் முதலில் உருவான தானியங்களில் ஒன்றான எள்ளினை தண்ணீரில் கரைத்து பூஜைகள் செய்வார்கள்.
கடல்கள், நதிகள், ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது விசேஷமானது என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்கள் விடுபட்டிருந்தால், இந்த நாளில் அந்த பூஜைகளை செய்வதன் மூலம் தோஷங்கள் விலகி முழுமையான பலன் கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல வடமாநிலங்களில்கூட, செவ்வாய்க்கிழமையில் வரும் இந்த அமாவாசையை ’சீராவன்’ அமாவாசையாக குறிப்பிட்டு சிறப்பாக கடைப்பிடிப்பார்கள்.
இந்த சிறப்பான நாளுடன், ஆடிப்பெருக்கு தினமும் சேர்ந்து வந்துள்ளது. பூமியில் வாழும் ஜீவராசிகள் உயிர் வாழத் தேவையான விவசாய தானியங்களை விளைவிக்கத் தொடங்கும் காலம் இதுவாகும். விவசாயத்திற்கு நீர்தான் பிரதானம். எனவே விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள், நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி அந்த தீர்த்தங்களை காவடியாக எடுத்து சென்று நிலங்களில் தெளித்து பொன் பூட்டிய ஏறுகளின் மூலம் நிலங்களை உழத் துவக்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் பழக்கமாகும்.
ஆடி மாதமான இந்த மாதத்தில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளான காவேரி, தாமிரபரணி, வைகை மற்றும் நதிகள் எல்லாம் பெருகெடுத்து ஓடும். இந்த நாளில் காவிரியை தாயாக கருதும் பெண்கள் தங்களின் தாலிச் சரடுகளை மாற்றி வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா வளங்களும் பொங்க வேண்டும் என வேண்டுதல் நடத்துவார்கள். இந்த நாளில் உறவுகள் மேம்பட சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு காதோலையும், கருக மணியையும் கொடுப்பது வழக்கம்.
மேலும், ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகியன ஒருசேர வரும் இந்த நாளில், ‘அதிசார வக்ரம்’ எனப்படும் குருபகவான் ஒரே ஆண்டில் சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளுக்கு இடம் பெறும் நிகழ்வும் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளும் ஒரு சேர வரும் இந்த அரிய நாளில் இறைவனையும், தங்கள் முன்னோர்களையும் ஒருசேர வழிபடுவதன்மூலம் விவசாயம் செழிக்கும், மழை அதிகமாக பெய்து அறுவடை அதிகரிக்கும். வறண்ட பூமி செழிக்கும்" என்றார்.
- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி
No comments:
Post a Comment