Wednesday, August 31, 2016

நாயைக் காயப்படுத்திய மாணவர்களுக்கு லட்சங்களில் அபராதம்!

vikatan.com

சென்னை: மாடியில் இருந்து நாயைத் தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய மருத்துவ மாணவர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம்,நான்காவது மாடியில் இருந்து நாயைத் தூக்கி வீசும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த அனைவரும் அந்தச் சம்பவத்தைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவிட்டு இருந்தனர். அதனையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் நாயைத் தூக்கி எறிந்து அதனை செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய தண்டனைக் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி, விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளமெண்ட் ரூபன் சென்னை குன்றத்தூர் போலீசில் புகார் செய்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர்கள் யார்? சம்பவம் நடந்த இடம் எது? என்பது குறித்து உடனடியாக விசாரணை செய்தனர்.

அதில்,மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம் சுதர்சன், என்றும், அந்தக்காட்சியை செல்போனில் வீடியோ எடுத்தவர் அவரின் நண்பர் ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது. இருவரும் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வருபவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மருத்துவ மாணவர்களைக் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோரே போலீஸில் ஒப்படைத்தனர்.பின்னர் மருத்துவ மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீன் பெற்றனர். இதற்கிடையே அவர்கள் படித்த கல்லூரியில் இருந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ மாணவர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024