நாட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இது மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் சவாலாக உள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் பிரச்னை தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் (ஐ.எஸ்.ஐ.) தேசிய புலனாய்வு ஏஜென்சியுடன் (என்.ஐ.ஏ.) இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், நாட்டில் ரூ.400 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.400 கோடி கள்ள நோட்டுப் புழக்கமானது, கட்டுப்படுத்தப்படாமல், கடந்த 4 ஆண்டுகளாக நிலையாக இருந்து வருவதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். கள்ள ரூபாய் நோட்டுப் பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன் கையில் இருக்கும் ரூபாய் நோட்டு நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்பதைக் கண்டறிய முடியாமல் கலங்கி நிற்கின்றார். அதாவது, 10 லட்சம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்குமானால், அவற்றில் 250 நோட்டுகள் கள்ள ரூபாய் நோட்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வப்போது, சந்தைகளில், உணவகங்களில், பேருந்துகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள வளாகங்கள் ஆகிய இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றும்போது பலர் கைது செய்யப்படுகின்றனர். கள்ள கரன்சி நோட்டை புழக்கத்தில் விடுபவர்கள், குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். நாட்டில் பல நகரங்களில் காவல் துறையினரால் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளில் உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் பறிமுதல் செய்யப்பட்டவை மொத்தத்தில் 43% எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய அனைத்து வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், கள்ள கரன்சி புழக்கத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை. வங்கிகளின் ஏ.டி.எம்.களிலேயே கள்ள ரூபாய் நோட்டுகள் உள்ளன. மேலும், சில தனியார் வங்கிகள் சுமார் 80% அளவிலான கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிந்துள்ளன. பொதுவாக, 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளே புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றை அச்சிட்டால்தான் லாபம் எனக் கூறப்படுகிறது. இவற்றில் 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் பிடிபடுகின்றன. மொத்த கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் 1,000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 50% எனக் கண்டறியப்பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில், பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. இவை நேரடியாக இந்தியாவுக்கு வராமல், வங்கதேசம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது. அதைத் தடுக்க, இந்திய-வங்கதேச அரசுகள் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளன.
கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தைத் தடுக்க, கரன்சி டிசைனில் சில மாற்றங்களைச் செய்யலாம், வரிசை எண்களில் மாற்றங்களைச் செய்யலாம் என இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. தற்போதைய வடிவிலான ரூபாய் நோட்டுகள் அப்படியே தொடர்ந்தால், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது.
சராசரியாக ஆண்டுக்கு ரூ.70 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பகுதியே பறிமுதல் செய்யப்படுகின்றன என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புழக்கம் குறைந்துள்ளது. இதை முனைப்புடன் செயல்படுத்தினால், ஆண்டுக்கு 20% என்ற அளவில் புழக்கத்தைக் குறைக்கலாம் என்று இந்திய புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது.
2013-14ஆம் நிதியாண்டில், தில்லியில் 2,15,092 கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10,35,86,240. 2015-16ஆம் நிதியாண்டில் இது ரூ.9,31,13,960 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் 2013-14ஆம் நிதியாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3,78,15,110. இது, 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.2,19,50,450 கோடி எனத் தெரியவந்துள்ளது.
இந் நிலையில், 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் சற்று குறைந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டில் 6.32 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.30.43 கோடியாகும். அதற்கு பின் ஓராண்டில் இதன் புழக்கம் 10% வரை குறைந்துள்ளது.
2015-ஆம் ஆண்டில் பணம் கடத்தல் மற்றும் கள்ள ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக 788 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 816 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு கள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகள் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை கிடைக்கிறது என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. அதாவது, 100 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று புழக்கத்துக்கு வந்தால், ஐ.எஸ்.ஐ.க்கு ரூ.40 வரை கிடைக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிலும் "ஒரிஜினல்' இல்லை என்பது இதன்மூலம் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment