Friday, December 30, 2016


2017-ல் வாட்ஸ் ஆப்...?

சைபர் சிம்மன்

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் நிகழவிருக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் ஆப் வசதியைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றால், உங்கள் போனை மாற்றிக்கொள்ளுங்கள் எனச் சொல்லும் அளவுக்கு வாட்ஸ் ஆப் செல்வாக்கு மிக்கதாக மாறியிருப்பதும் இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம்.

பழைய மாடல்களுக்கு ‘குட்பை’

பழைய போன் மாதிரிகள் மற்றும் பழைய இயங்குதளங்களைக் கொண்ட போன்களில் எல்லாம் இந்தச் சேவை 2016-ம் ஆண்டுக்குப் பிறகு செயல்படாது எனும் தகவலை நீங்கள் அறிந்திருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் ஆப் தனது வலைப்பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் வெளியான‌ ஒரு அறிவிப்பு இதை உறுதி செய்தது.

இதன்படி நோக்கியா, பிளாக்பெர்ரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றின் பழைய மாடல்களில் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் பழைய வடிவங்களுக்கும் இது பொருந்தும். எனினும் இந்த முதல் கட்டப் பட்டியலிலிருந்து பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியா சிம்பயான் போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட்டிப்பும்கூட 2017 ஜுன் மாதம் வரைதான். அதன் பிறகு வாட்ஸ் ஆப் செயல்படக்கூடிய புதிய போன் அல்லது இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டும்.

ஆண்ட்ராய்டு 2.2, ஐ.ஓ.எஸ். 6 மற்றும் விண்டோஸ் போன் 7 உள்ளிட்ட பழைய ரகங்களில் இந்த ஆண்டுக்குப் பிறகு வாட்ஸ் ஆப் சேவையைப் பயன்படுத்த இயலாது. வாட்ஸ் ஆப் விஷயத்தில் இப்படிக் காலாவதியாகும் பழைய போன் மாதிரிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு செயலிக்காக போனை மாற்ற வேண்டும் என்பது கொஞ்சம் விநோதமானதுதான். வாட்ஸ் ஆப்பின் செல்வாக்கு அப்படி என்றாலும், இந்த மாற்றத்திற்கான காரணம் அதுவல்ல. வாட்ஸ் ஆப் தொடர்ச்சியாகப் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு சேவையாகத் தனது பயன்பாட்டுத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ள வாட்ஸ் ஆப்பிற்கு இந்தப் புதுப்பித்தல் அவசியம்.இதன் பக்கவிளைவுதான், பழைய இயங்குதளங்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை.

புதிய வசதிகள் என்ன?

இதற்கு வாட்ஸ் ஆப்பைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் வாட்ஸ் ஆப் அறிமுகமான காலத்தில், பிளாக்பெர்ரியும் ஐபோனும் நோக்கியா சிம்பயான் போன்களுமே ஸ்மார்ட் போன் பரப்பில் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதன் பிறகு ஆண்ட்ராய்டு அலை வீசத் தொட‌ங்கி, ஐபோன் ஆதிக்கமும் வலுப்பெற்றது. இந்தப் போக்குகளுக்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைந்த வாட்ஸ் ஆப், முன்னணிச் செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிலையில், புதிய வசதிகளுக்கு ஈடு கொடுக்க ஏற்றதாக இல்லாத பழைய இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உறவு கொள்வதற்கான மேம்பட்ட வழிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. எதற்கும் பழைய போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் ஆப் சேவை செயல்படக்கூடிய போன்களின் பட்டியலைப் பார்த்துக்கொள்வது நல்லது. இந்த முழுப் பட்டியலை இந்த இணைப்பில் காணலாம்: http://bit.ly/2hYKk1m

வரும் காலத்தில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படும் புதிய அம்சங்களில் சிலவற்றைப் பார்க்கலாம். செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் அறிமுகம் ஆக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடிட், டெலிட் செய்யலாம்

இப்போதைக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை விலக்கிக்கொள்ள நினைத்தால் அதற்கான வழியில்லை. ஆனால், ஜிமெயிலில் இருப்பது போலவே அனுப்பியவுடன், அந்தச் செய்தியைத் திரும்பப் பெற விரும்பினால் அதைச் சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இதன்படி செய்தியின் மீது கிளிக் செய்தால், அதைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புத் தோன்றும். அதை கிளிக் செய்து அந்தச் செய்தியை அழித்துவிடலாம்.

ஆனால் இதற்குக் கால வரையறை இருக்கிறது. தற்போது சோதனை வடிவில் ஒருசில போன் மாதிரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் சேவை முழு வீச்சில் அறிமுகமாகும்போதுதான் இதன் செயல்பாடு பற்றி தெளிவு கிடைக்கும். இப்போதுள்ள செய்திகளை டெலிட் செய்யும் வசதியில் இருந்து இது மாறுபட்டது. ஏனெனில் செய்திகளை டெலிட் செய்தாலும் அது அனுப்பியவர் போனில் இருந்துதான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய சேவையில் இது சாத்தியம்.

இதே போலவே செய்திகளைத் திருத்தும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

எல்லாம் சரி, அப்படியே வதந்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஒரு வசதி அறிமுகமானால் நன்றாக இருக்கும் அல்லவா..?

பணமழையில் வருமான வரித்துறை: கணக்கில் வராத பணம் எவ்வளவு தெரியுமா?


புது தில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ.4,172 கோடி மதிப்பிலான சொத்துகள், ரொக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

சாதாரண, ஏழை, எளிய மக்கள் வெறும் 2,500க்கு நாள் முழுக்க வரிசையில் நிற்கும் நிலையில் ரூ.105 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தான் பொது மக்களுக்கு மட்டும் அல்ல வருமான வரித்துறையினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. கருப்பு பண ஒழிப்பில் முக்கிய நடவடிக்கையாக இதனை மத்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித் துறையினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 28-ஆம் தேதி வரை நடைபெற்ற சோதனைகளில் இதுவரை ரூ.4,172 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள், ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் உள்ளிட்ட நகைகள், ரொக்கத்தின் மதிப்பு மட்டும் ரூ.549 கோடியாகும்.

இதில் புதிதாக வெளியிடபட்டுள்ள ரூ.500, ரூ.2000 நோட்டுகளாக ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 477 வழக்குகளை சிபிஐ, அமலாக்கத் துறைக்கு வருமான வரித் துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

மோடி சொன்ன அந்த நாள் வந்துவிட்டது: இதுவரை நடந்தது என்ன?


புது தில்லி: நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த அன்றைய தினம், கையில் வெறும் 500 ரூபாய் வைத்திருந்தவர்கள் முதல், ரூ.500 கோடி வைத்திருந்தவர்கள் வரை அனைவருமே கலக்கம் அடைந்தனர்.

டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

பிரதமர் மோடி கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிகிறது. ஆம், மோடி சொன்ன அந்த நாள் வந்து விட்டது. இதுவரை எந்த அரசும் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த மக்கள், மோடியின் நடவடிக்கைக்கு மனதளவில் நிச்சயம் ஆதரவு அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வங்கியில் கால்கடுக்க நிற்கும்போது வேதனை தெரிவித்தாலும், நிச்சயம் இந்த நடவடிக்கையால் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்பினார்கள். அதனால்தான், பெரிய அளவில் இதுவரை எந்த அசம்பாவிதங்களும், வன்முறைகளும் அரங்கேறவில்லை.

அன்றைய தினம் முதல் இதுவரை மோடியின் நடவடிக்கையால் நடந்தது என்னவென்று பார்க்கலாம்.

•நவம்பர் 10ம் தேதி முதல் அம்மாத இறுதி வரை சுமார் 1.77 லட்சம் பேர், தாங்கள் வங்கிகளில் வாங்கிய ரூ.25 லட்சம் வரையிலான கடன் தொகைகளை பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அடைத்துள்ளனர். இதன் மூலம் பெறப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.50 ஆயிரம் கோடி.

• பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அதிகளவிலான வருமான வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

•வங்கிகளில் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்த சுமார் 5 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

• நவம்பர் 8ம் தேதி முதல் நாடு முழுவதும் 983 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

• நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையினரால் ரூ.4,172 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

•பல பெரும் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்கள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது.

• சரியாக சொல்ல வேண்டும் என்றால், தேன் கூடு போன்ற கருப்புப் பணப் பதுக்கல், மோடியின் இந்த நடவடிக்கையின் மூலம் கல்லெறியப்பட்டு கலைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

நிலைமை சரியாக இன்னும் 50 நாட்கள் ஆகும் என்ற காலக்கெடு வேண்டுமென்றால் சற்று நீட்டிக்கப்படலாம். ஆனால், உண்மையில் நடந்திருப்பவை அனைத்தும் நல்லவையே.. இனி நடக்கப்போவதும் நல்லவையாகவே இருக்கும் என்று நம்புவோம். சாமானியனின் இந்த நம்பிக்கைதான் இந்த நடவடிக்கையின் உண்மையான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

அனைத்துக்கும் பின்னால் நடராஜன் : பொதுக்குழுவுக்கு முன்பும்... பின்பும்...!


முடியாது... நடக்காது’ என்று யூகிக்கப்பட்ட அனைத்தையும் யூகங்கள் ஆக்கி... பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார், சசிகலா. அச்சு பிசகாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார்கள் கழகக் கண்மணிகள். கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால், ஆதரவாக இருக்கலாம்; ஆனால், தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிவந்த நிலையில்... வீட்டில் இருந்த சசிகலாவைத் தேடி பொதுச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்பட... அவருக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்கிற கேள்விதான் டெல்லி முதல் தி.மு.க வரை தொங்கித்தொங்கி நிற்கிறது.

டெல்லியின் அச்சுறுத்தல்கள்!



முதலில் இருந்தே சசிகலாவை எதிர்த்துவரும் பி.ஜே.பி-யினர்... அவரை, கட்சியைவிட்டு வெளியேறுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சசிகலாவிடம் பேச... நிர்மலா சீதாராமன் அனுப்பிவைக்கப்பட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு 7 முறை தமிழகம் வந்திருந்தார் அவர். அதில், பலமுறை சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். சசிகலாவை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பை நிர்மலா சரியாகச் செய்தாலும், கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு மட்டும் தொடர்ந்து பிடி கொடுக்காமல் இருந்துள்ளார். இதற்குப் பிறகு வெங்கய்ய நாயுடுவைக் களம் இறக்கியது பி.ஜே.பி. கடந்த 4-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே... அசுரவேகத்தில் களம் இறங்கியது பி.ஜே.பி. சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. அதனால், எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் வரவழைத்து... அப்போலோ மருத்துவமனையில், தனக்கு ஆதரவாகக் கையெழுத்துகளை சசிகலா வாங்கிய விஷயம் தெரிந்தது. அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்த வெங்கய்ய நாயுடு... அவர், தயார் செய்துகொண்டு வந்திருந்த ஃபைலில்... எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச்சென்றார். அத்துடன் அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்தது வரை எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார். அதன்படி, தமிழகத்தில் ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

போயஸ் கார்டன் இல்லத்தில் நடராஜனும், சசிகலாவும் அமைச்சர்களை சந்தித்துப் பேசிய மறுநாளே... சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை நடத்தினர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது. டெல்லி சென்றுவந்த பிறகு... ஓ.பி.எஸ்., கார்டன் சென்று சசிகலாவை சந்திக்கவில்லை. அதைத் தொடர்ந்தே ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இது, எல்லாம் சசிகலாவுக்கு டெல்லி கொடுத்த அழுத்தங்கள்.

பதுங்கிப் பாய்ந்த சசிகலா!

மத்திய அரசுடன் சுமுகமாகப் போகவே சசிகலா விரும்பினார். அதற்காகச் சில விஷயங்களையும்... அவர், மத்திய அரசுக்கு செய்துகொடுத்தார். ‘‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு திட்டம் (நீட்), அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வழிவகுக்கும் 4 அடுக்கு வரிமுறையான மத்திய விற்பனை வரி முறை (ஜி.எஸ்.டி.) உள்ளிட்ட திட்டங்களை ஆதரிக்காது’’ என்று ஜெயலலிதா கூறிவந்த நிலையில், அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் அ.தி.மு.க ஆதரித்துக் கையெழுத்துப் போடவைத்தது; ஜெயலலிதா எதிர்த்த பறக்கும் சாலை திட்டத்துக்கு அனுமதி வழங்கியது; ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியது என்று பல்வேறு சமாதான முயற்சிகளை எடுத்தாலும் எதற்கும் மசியவில்லை, மத்திய அரசு.

அதற்காகச் சும்மாவும் இருக்கவில்லை சசிகலா. ஒருபக்கம், சமாதான முயற்சி செய்துகொண்டு இருந்தாலும்... மறுபக்கம், தனக்கான வேலைகளைச் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. அடக்கம் செய்த மறுநாள், ‘துக்ளக்’ ஆசிரியர் சோ மரணத்துக்கு அஞ்சலி செலுத்த சசிகலா சென்றபோது, அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவார் என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, போயஸ் கார்டன் வீட்டில் தினமும் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலையில், கட்சிக்காரர்களைச் சந்திப்பதும்... மதியத்துக்கு மேல், அமைச்சர்களைச் சந்திப்பதும் என்று பரபரப்புக் காட்டினார். இதற்கிடையில் சசிகலா பொதுச் செயலாளராக வந்தால்... கட்சிக்குள் செங்கோட்டையன், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் போன்றவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வளைக்க தி.மு.க ஒருபக்கம் முயற்சி செய்யும் என்ற பேச்சும் பரவலாக இருந்தது. ஆனால், இந்தச் சந்தேகங்கள் அத்தனையும் மன்னார்குடி குடும்பத்தின் வியூகத்தில் காலியாகின. போயஸ் கார்டன் வீட்டு வாசலில் சசிகலாவுக்கு முன், செங்கோட்டையனும் மதுசூதனனும் கைகட்டி நின்றார்கள். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தலைமையை எதிர்த்த சைதை துரைசாமி, “சின்ன அம்மாவால்தான் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முடியும். எனவே, அவர்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வரவேண்டும்” என்று பேட்டி கொடுத்தார். தமிழகத்தின் அரசியல் சூழலை கொஞ்சமும் உள்வாங்கிக் கொள்ளாத பி.ஜே.பி., புறவாசல் வழியாக அ.தி.மு.க அரசாங்கத்தையும் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து, காய்களை நகர்த்தியது. ஆனால், சசிகலா அசைந்து கொடுக்கவில்லை. ரெய்டுகள் சென்னை முழுவதும் பறந்தன. சேகர் ரெட்டி தொடங்கி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டுக்குள் நுழைந்த வருமானவரித் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளும் நுழைந்தது. ஆனால், அப்போதும் சசிகலா அசராமல் இருந்தார்.

அத்துடன் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு என்று அறிவிக்கவைத்து... அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கார்டனுக்கு வரவழைத்து... தன்னை, பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் செய்யும்படி கேட்க வைத்தார். தொடர்ந்து மீடியா அதிபர்களைச் சந்தித்து அவர்கள் ஆதரவு தனக்குத்தான் என உணர்த்தினார். உச்சபட்சமாக பச்சமுத்து கைதுக்குப் பிறகு, கோபத்தில் இருந்த அவரது மகன்களே வந்து சசிகலாவைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருந்தனர். ‘சசிகலா தரப்பினர் - துணைவேந்தர்கள் சந்திப்பு’ என நீண்டுகொண்டு இருந்த இந்தக் கதைக்கு... ஓ.பி.எஸ்., டெல்லி சென்ற அன்று... அமைச்சர் உதயகுமார், ‘‘சசிகலா, முதலமைச்சராக... பன்னீர்செல்வம் வழிவிட வேண்டும்’’ என பேட்டி கொடுக்கும் அளவுக்குக் கட்சியினர் சசிகலாவுக்கு விசுவாசத்தைக் காட்ட ஆரம்பித்தனர்.

அனைத்துக்கும் பின்னால் நடராஜன்!

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது... காங்கிரஸ்காரர்களுக்குக்கூடத் தெரியாமல் ராகுலை அப்போலோவில் இறக்கிய நாளில் இருந்து ஆரம்பித்தது நடராஜனின் ஆபரேஷன். டெல்லியின் அத்தனை நெருக்குதல்களுக்கும் புதுப்புது வியூகங்கள் மூலம் அணை கட்டினார் நடராஜன். தொல்.திருமாவளவன் முதல் ஸ்டாலின் வரை அப்போலோ வாசலுக்கு வரவழைத்தார். ஒவ்வொரு முறை மத்திய அரசு நெருக்கும்போதெல்லாம் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளைவைத்து அதைத் திசை திருப்பினார். ஜெயலலிதா, மறைவுக்குப் பின்பு அவரின் பெசன்ட் நகர் இல்லம் அடுத்த போயஸ் கார்டனாகியது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்த கட்சி நிர்வாகிகள், வேதா இல்லம் நோக்கித் திரும்பினர். எல்லோருக்கும் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. எதிர்த்த செங்கோட்டையன்கூட இறங்கிவந்தார். இதையடுத்து கட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் குடும்ப உறுப்பினர்களைத் தேர்வு செய்தார். அதன்படி கட்சி நிர்வாகிகளைப் பார்த்துக்கொள்ள டி.டி.வி.தினகரனையும், அலுவலக வேலைகளைக் கவனித்துக்கொள்ள வெங்கடேசையும் நியமித்தார் நடராஜன். இவர்கள் ஏற்படுத்திய பாதையில் எந்த மாற்றமும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது பொதுக் குழு.

பொதுக்குழுவுக்குப் பிறகு...!





நேற்று காலை முதலே பரபரப்புடன் இயங்கிவந்தது போயஸ் கார்டன். முன்பே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு முடித்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டதுபோல் இருந்தது கார்டன் நிகழ்வுகள். காலை 9 மணிக்கு முன்பே நடராஜன் உட்பட குடும்ப உறவுகள் அனைவரும் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆஜர் ஆகிவிட்டனர். பொதுக் குழு நடந்துகொண்டு இருக்கும்போதே பூச்செண்டுகளும்... மாலைகளும்... கோயில் பிரசாதங்களும் வேதா இல்ல வாசலுக்கு வரத் தொடங்கிவிட்டன. சரியாக 9.45 மணிக்கு வந்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேராக பொதுக்குழு தீர்மானத்தைக் கொடுத்துத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பிறகு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். இன்று, போயஸ் கார்டன் நடவடிக்கைகள் எல்லாமே வழக்கத்தைவிட மாறியுள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். போயஸ் கார்டன் முகப்பிலே தடுப்புகள் போட்டு யாரையும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ... அதேபோல இன்று சசிகலாவைச் சந்திக்க வந்தவர்களுக்கும் பின்பற்றப்பட்டது. ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு முன்பு எப்படிப் பேசவேண்டும், எப்படி நிற்க வேண்டும் என்று எல்லாம் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பது உண்டு. அதேபோன்று, இன்று சந்திக்க வந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இளவரசி மகன் விவேக் மட்டும், போவதும் வருவதுமாக இருந்தார். மற்றபடி உறவுகள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை.

சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மத்திய அரசு, சொத்துக் குவிப்பு வழக்கு எனப் பல பிரச்னைகளை இப்போதைக்கு மறந்தாலும்... இது, எல்லாம் அடுத்து தாக்க உள்ள அஸ்திரங்கள் என்று சசிகலா தரப்பினருக்குத் தெரியும். நீதிபதி வைத்தியநாதன் வேறு, ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது’ என்று கூறியிருக்கிறார். வரும் காலங்களில் சசிகலா கடக்க வேண்டிய தூரங்கள் மிக அதிகம்தான்.

நான் இதனால்தான் அ.தி.மு.க-விலிருந்து விலகினேன்!” ஆனந்த ராஜ் அடுக்கும் காரணங்கள்


சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க-வில் ஒலித்த குரல்களில் நடிகர் ஆனந்த ராஜ் உடையதும் ஒன்று. இவர் 12 ஆண்டுகளாக அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் தொடங்குவதற்கு முதல்நாள், அதாவது நேற்று அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோதே ஆனந்த ராஜை சந்தித்துப் பேசினோம். அப்போது, "கழகத்தில் நடக்கும் குழப்பங்களுக்கு என்ன காரணம்? சசிகலா பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று கழகத்திலும் சிலர் நினைக்கிறார்களே?" என்று கேட்டதற்கு, “கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் எந்த முடிவு எடுத்தாலும், அதை கட்சியின் தொண்டனாக ஏற்று பணியாற்றுவேன்" என அவர் தெரிவித்திருந்தார். மேலும், "பொதுக் குழுவுக்கு அழைப்பு வரும் என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை அழைப்பு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு, “அழைப்பு வரவில்லை என்றால் அப்போது முடிவெடுப்போம்” என்று பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஆனந்த ராஜூக்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. இதையடுத்து அவர் அ.தி.மு.க-வில் இருந்து திடீரென்று விலகியுள்ளார். எதற்காக இந்த முடிவுக்கு வந்தார் என்பது குறித்து ஆனந்த ராஜை தொடர்பு கொண்டு கேட்டோம்.

"அ.தி.மு.க-வில் இருந்து விலக பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு வராததுதான் காரணமா?"

"ஆம். மக்கள், பொதுக் குழுவில் ஏன் கலந்துக் கொள்ளவில்லை? என்று என்னை கேட்டால், நான் கட்சியின் உறுப்பினரோ, தொண்டரோ இனி இல்லை. அதனால், நான் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்? என்று நான் பதிலுக்கு கேட்கலாம். அம்மாவை இழந்த ரணமே இன்னும் என்னை விட்டு விலகவில்லை. இந்த நிலையில் புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது. இந்த முடிவை நான் எடுத்ததன் மூலம் பெரிய பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்கிறேன்".

"அழைப்பு ஏன் வரவில்லை என்ற காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லையா?"

"இல்லை. அழைப்பு அனுப்பப்படவில்லை என்று ஆனபிறகு, காரணத்தை தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். கட்சியில் இப்போது எந்த முடிவும் இவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டாம் என்பதுதான் இப்போதும் நான் சொல்லும் கருத்து. சிறிதுகாலம் கழித்து, எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்".



"செங்கோட்டையன் மற்றும் பொன்னையன் பேசியது பற்றி வருத்தம் தெரிவித்தீர்களே?"

"ஆம். இதுநாள்வரை, அம்மா வழிகாட்டுதலில் இருந்து வந்தவர்கள், அவரைப் பற்றி தவறாகப் பேசியது வருத்தம் அளிக்கிறது. அம்மா யாருடனும் ஒப்பிடப்பட முடியாதவர். அவருக்கு யாரும் ஈடாக முடியாது. அவரால், கட்சியில் சேர்க்கப்பட்டவன் நான். அம்மாவின் தொண்டர்களால் ராசியான நடிகர் என்று நான் அழைக்கப்பட்டவன். கட்சியில் இருந்தவரை நான் விசுவாசம் நிறைந்த தொண்டனாக மட்டுமே இருந்து வந்தேன்".

"பொதுக்குழுவுக்கு அழைப்பு வந்திருந்தால் கலந்து கொண்டிருப்பீர்களா?"

"நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன். கலந்து கொண்டு என்னுடைய கருத்தையும் பதிவு செய்திருப்பேன். நான் உண்மையான விசுவாசியாக இருந்திருக்கிறேன். இது, என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்றவர்கள் பொய் சொல்லச் சொல்கிறார்கள் என்பதற்காக, பொய் சொல்ல மாட்டேன். எனக்கு மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாக கூறுவேன். எடுக்கப்படும் முடிவு, கட்சிக்கு நல்லது செய்யுமா? என்பதை ஆலோசிக்கும்படி சொல்லியிருப்பேன்".

"சசிகலாவை ஆதரிப்போருக்கு உங்களோட கருத்து என்ன?"

"ஒருவருக்காக. மற்றவரை தாழ்த்திப் பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இப்படிப் பேசுவதற்கு, அவர்களுக்கு என்ன விலை என்று போகப் போக தெரியும். எதிர்காலத்தில் அவர்களுக்கு தரப்படும் பதவிகள், அவற்றுக்கு பதில் சொல்லும் என நம்புகிறேன். கட்சியின் பொதுச் செயலாளராக யார் வந்தாலும் எனது வாழ்த்துகள்".

5 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா சசிகலாவை பொதுக்குழுவில் திட்டிய தினம் இன்று! #December30


சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கப்பட்டபிறகு நடந்த 2011 பொதுக்குழுவில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா திட்டிய தினம் இன்று!

2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஜெயலலிதாவிடம் இருந்து அதிரடியாக அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் சசிகலா மற்றும் அவரது உறவுகளை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார். ‘வி.கே.சசிகலா, எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், எம்.பழனிவேல், தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

இந்த அறிவிப்பு வந்த 11-வது நாள் அதாவது 2011 டிசம்பர் 30-ம் தேதிதான் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் பற்றிய பேச்சுகள் பரபரப்பை கிளப்பின. அதில் பேசிய ஜெயலலிதா ‘‘துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது’’ என்றார். அப்போது ஜெயலலிதா என்ன பேசினார். அந்த பேச்சு அப்படியே ரிப்பீட்டு!

‘‘அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களிலும் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர். ஒரு சிலர் வேறு கட்சியில் சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர். தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது. ஆனால், இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம். எனவே எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம’ என்று மிரட்டுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு கட்சித் தலைமையின் முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது’’ என முழுங்கினார் ஜெயலலிதா

இதெல்லாம் மூன்று மாதங்கள்தான் ‘‘அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என சொன்ன சசிகலாவை திரும்ப சேர்த்துக் கொண்டார். ஆனால் அவர் உறவுகளை சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீதான நடவடிகை தொடரும் என சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ‘‘அரசியல் ஆசை இல்லை’’ என்று சொன்ன சசிகலாதான் இப்போது பொதுச் செயலாளர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள்தான் சசிகலாவை சுற்றி இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மரணத்திற்கு 'இந்த' மருந்துகள்தான் காரணமா?! -அப்போலோ மெயிலும் 5 சந்தேகங்களும்



vikatan.com

"ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களுக்குள் போக நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்காக அடிப்படை உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற விவரம் பொதுமக்களுக்குத் தெரியவேண்டும். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என யார் வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். ஜெயலலிதா சாவில் மர்மங்கள் உள்ளன என்று பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வந்தன. ஜெயலலிதா நடந்தார் என்று சிலர் பேட்டி கொடுத்தனர். ஜெயலலிதா டி.வி. பார்க்கிறார் என்று மற்றொரு நாள் மற்றொருவர் பேட்டி கொடுக்கிறார். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது. எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற போது, அது தொடர்பான வீடியோ, புகைப்படம் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. ஏன் அப்படி ஒரு நிலை ஜெயலலிதா விஷயத்தில் இல்லை? சாதாரண ஒரு குடிமகன் என்ற முறையில், ஜெயலலிதாவின் சாவில் எனக்கும் பல சந்தேகங்கள் உள்ளன" -அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்வு செய்த நிர்வாகிகள், அவரிடம் தீர்மானத்தின் நகலைக் கொடுத்த தருணங்களில்தான், இப்படியொரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் உயர் நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன். ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலையாகவும் இந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.

"முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, நீதியரசர் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையிலேயே நாங்களும் கேள்வி எழுப்புகிறோம். தொலைக்காட்சி விவாதத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் பேசும்போது, ' அம்மா மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை' என்கின்றனர். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று பேசும்போது, ' மருத்துவர்கள் சொல்கின்ற தகவல்கள், தவறாக இருப்பதற்கு வாய்ப்பில்லை' என்கிறார். அரசியல்ரீதியாக, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அணுக நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றம் சொல்வதைப் போலவே, மருத்துவரீதியாக இந்த விவகாரத்தை அணுகுகிறோம். நாங்கள் முன்வைக்கும் ஐந்து கேள்விகளுக்கு அப்போலோ மருத்துவமனை விளக்கம் தருமா?" என ஆதங்கத்தோடு பேசினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி. அவர் எழுப்பும் கேள்விகள் இதோ...!

1. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படும்முன், சில நாட்களாக காய்ச்சலால் அவதியுற்ற நிலையில், சுயநினைவு இழந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? ஆம் எனில், சுயநினைவு இழக்கக் காரணங்கள் யாவை? சிகிச்சைக்காக அவரை அனுமதித்ததில் காலதாமதம் ஏற்பட்டதா?

2. முதல்வரின் உறுப்புக்கள் நன்றாகச் செயல்பட்டநிலையில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்போது இதயத் துடிப்பு முடக்கம் (cardiac arrest) வருவதற்கான காரணங்கள் யாவை? அது திடீரென ஏற்பட்டதா அல்லது மெல்ல ஏற்பட்டதா? இதைக் கண்டறிந்தபின், உடனடி சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டதா?

3. அப்படி நின்ற இதயத் துடிப்பைச் சீராக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது? 30 முதல் 40 நிமிடங்கள் ஆனது என பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. அப்படியெனில், மூளைச் சாவைத் தடுக்க முடியாது. முதல்வருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது உண்மையா? மருத்துவரீதியாக மூளைச்சாவைத் தடுக்கவே எக்மோவைப் பயன்படுத்துவார்கள்.



4. முதலமைச்சரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு மறைமுக காரணிகள் (underlying conditions) இருந்ததாக, அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில் வெளியானது. அவை என்ன என்பது விளக்கப்படவில்லையே ஏன்? உதாரணம். முதல்வருக்கு இருந்த சர்க்கரை நோய் பாதிப்பு.

5. இவை எல்லாவற்றையும்விட, குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக புரோப்பிடன் (prophiaden) 75 மில்லி கிராம் மருந்தை ஜெயலலிதா எடுத்ததாகச் சொல்கிறார்கள். இந்த மருந்தை அவர் எடுத்துக் கொண்டாரா? சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, பயோகிளிட்டசோன் (pioglitazone), ரொசிகிளிப்டஜொன் (rosiglipazone) போன்ற மாத்திரைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டதா? புரோப்பிடனும் பயோகிளிட்டசோனும் இருதயத் துடிப்பை பாதிக்கும் என மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், 'ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தத் தவறான மாத்திரைகள் கொடுக்கப்பட்டன' என செய்தி வெளியிட்டுள்ளது. புரோப்பிடன் கொடுத்தாலே இருதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். 'அப்போலோ மருத்துவமனையின் இ-மெயில்களில் இந்தத் தகவல் கசிந்துள்ளது' என அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது - என விவரித்த மருத்துவர் புகழேந்தி,

"டிசம்பர் 3-ம் தேதி இரவில் அவருக்கு செயற்கை சுவாசம் துளி அளவும் கொடுக்கப்படவில்லை. அதற்கு முந்தைய அப்போலோ அறிக்கையில், ' செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை' எனத் தெரிவித்திருந்தது. இதில் எந்த உண்மையும் இல்லை. டிசம்பர் 4-ம் தேதி இறப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளக் கூடிய அனைத்து உரிமைகளும் பொதுமக்களுக்கு இருக்கிறது. அதைத் தெளிவுபடுத்தாமல் கடந்து செல்வதில் இருந்தே சந்தேகங்கள் வலுக்கின்றன. அரசியல்ரீதியாக அணுகாமல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி வெளி உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை அரசு நிர்வாகத்துக்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் இருக்கிறது" என்றார் நிதானமாக.

NEWS TODAY 2.5.2024