Friday, December 30, 2016

நான் இதனால்தான் அ.தி.மு.க-விலிருந்து விலகினேன்!” ஆனந்த ராஜ் அடுக்கும் காரணங்கள்


சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க-வில் ஒலித்த குரல்களில் நடிகர் ஆனந்த ராஜ் உடையதும் ஒன்று. இவர் 12 ஆண்டுகளாக அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் தொடங்குவதற்கு முதல்நாள், அதாவது நேற்று அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோதே ஆனந்த ராஜை சந்தித்துப் பேசினோம். அப்போது, "கழகத்தில் நடக்கும் குழப்பங்களுக்கு என்ன காரணம்? சசிகலா பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று கழகத்திலும் சிலர் நினைக்கிறார்களே?" என்று கேட்டதற்கு, “கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் எந்த முடிவு எடுத்தாலும், அதை கட்சியின் தொண்டனாக ஏற்று பணியாற்றுவேன்" என அவர் தெரிவித்திருந்தார். மேலும், "பொதுக் குழுவுக்கு அழைப்பு வரும் என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை அழைப்பு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு, “அழைப்பு வரவில்லை என்றால் அப்போது முடிவெடுப்போம்” என்று பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஆனந்த ராஜூக்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. இதையடுத்து அவர் அ.தி.மு.க-வில் இருந்து திடீரென்று விலகியுள்ளார். எதற்காக இந்த முடிவுக்கு வந்தார் என்பது குறித்து ஆனந்த ராஜை தொடர்பு கொண்டு கேட்டோம்.

"அ.தி.மு.க-வில் இருந்து விலக பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு வராததுதான் காரணமா?"

"ஆம். மக்கள், பொதுக் குழுவில் ஏன் கலந்துக் கொள்ளவில்லை? என்று என்னை கேட்டால், நான் கட்சியின் உறுப்பினரோ, தொண்டரோ இனி இல்லை. அதனால், நான் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்? என்று நான் பதிலுக்கு கேட்கலாம். அம்மாவை இழந்த ரணமே இன்னும் என்னை விட்டு விலகவில்லை. இந்த நிலையில் புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது. இந்த முடிவை நான் எடுத்ததன் மூலம் பெரிய பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்கிறேன்".

"அழைப்பு ஏன் வரவில்லை என்ற காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லையா?"

"இல்லை. அழைப்பு அனுப்பப்படவில்லை என்று ஆனபிறகு, காரணத்தை தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். கட்சியில் இப்போது எந்த முடிவும் இவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டாம் என்பதுதான் இப்போதும் நான் சொல்லும் கருத்து. சிறிதுகாலம் கழித்து, எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்".



"செங்கோட்டையன் மற்றும் பொன்னையன் பேசியது பற்றி வருத்தம் தெரிவித்தீர்களே?"

"ஆம். இதுநாள்வரை, அம்மா வழிகாட்டுதலில் இருந்து வந்தவர்கள், அவரைப் பற்றி தவறாகப் பேசியது வருத்தம் அளிக்கிறது. அம்மா யாருடனும் ஒப்பிடப்பட முடியாதவர். அவருக்கு யாரும் ஈடாக முடியாது. அவரால், கட்சியில் சேர்க்கப்பட்டவன் நான். அம்மாவின் தொண்டர்களால் ராசியான நடிகர் என்று நான் அழைக்கப்பட்டவன். கட்சியில் இருந்தவரை நான் விசுவாசம் நிறைந்த தொண்டனாக மட்டுமே இருந்து வந்தேன்".

"பொதுக்குழுவுக்கு அழைப்பு வந்திருந்தால் கலந்து கொண்டிருப்பீர்களா?"

"நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன். கலந்து கொண்டு என்னுடைய கருத்தையும் பதிவு செய்திருப்பேன். நான் உண்மையான விசுவாசியாக இருந்திருக்கிறேன். இது, என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்றவர்கள் பொய் சொல்லச் சொல்கிறார்கள் என்பதற்காக, பொய் சொல்ல மாட்டேன். எனக்கு மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாக கூறுவேன். எடுக்கப்படும் முடிவு, கட்சிக்கு நல்லது செய்யுமா? என்பதை ஆலோசிக்கும்படி சொல்லியிருப்பேன்".

"சசிகலாவை ஆதரிப்போருக்கு உங்களோட கருத்து என்ன?"

"ஒருவருக்காக. மற்றவரை தாழ்த்திப் பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இப்படிப் பேசுவதற்கு, அவர்களுக்கு என்ன விலை என்று போகப் போக தெரியும். எதிர்காலத்தில் அவர்களுக்கு தரப்படும் பதவிகள், அவற்றுக்கு பதில் சொல்லும் என நம்புகிறேன். கட்சியின் பொதுச் செயலாளராக யார் வந்தாலும் எனது வாழ்த்துகள்".

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024