கு.க பெண்ணுக்கு குவா குவா - இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூர் - திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது மனைவி ஜெயசுதா(35).
2005ல் ஜெயசுதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் கர்ப்பமடைந்த ஜெயசுதாவிற்கு 2007 மே 27ம் தேதி திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, அவர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜெயசுதா மீண்டும் கர்ப்பமாகி ஆண் குழந்தை பிறந்தது.
இதுதொடர்பாக அவர் அரசு மருத்துவமனையில் கேட்டபோது, ஆயிரம் பேரில் 17 முதல் 30 நபர் வரை அறுவை சிகிச்சை தோல்வியடைந்து கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கமும், ரூ. 8 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று திருவாரூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் ஜெயசுதா மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்ற தலைவர் ஜெயசந்திரன், உறுப்பினர்கள் ரமேஷ், சிவசங்கரி ஆகியோர், ‘கருத்தடை செய்த ஜெயசுதா மீண்டும் கர்ப்பமானதால், இது மருத்துவமனை மருத்துவர்களின் சேவை குறைபாடு என்று தெரியவருகிறது.
மன உளைச்சலுக்காக ரூ. 50 ஆயிரமும் சேவை குறைபாட்டிற்காக ரூ. 50 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் ஜெயசுதாவிற்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும்.
கால தாமதம் செய்து தொகை கொடுக்கும் பட்சத்தில் 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்
No comments:
Post a Comment