Wednesday, December 28, 2016

பொதுக்குழுவில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்!' - கட்சியினருக்கு வகுப்பெடுத்த சசிகலா


VIKATAN

பொதுக்குழுவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு சசிகலா தரப்பு கிளாஸ் எடுத்துள்ளது. மேலும், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரையும் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது சசிகலா தரப்பு. அதிருப்தியில் இருந்த கட்சியினரையும் திருப்திபடுத்தி இருக்கிறது அந்த தரப்பு. இதனால் அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்விக்கான விடை வரும் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழுவில் தெரிந்துவிடும்.

சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது. அதை மாவட்டச் செயலாளர்கள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கொடுத்து விட்டனர். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் பங்கேற்க உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் என்ற அழைப்பிதழ்கள் வழக்கமாக வழங்கப்படும். ஆனால் இந்தமுறை அந்த அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 280 பேரும், 50 மாவட்டச் செயலாளர்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவதாக நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அடுத்து, யார் பொதுச் செயலாளர் என்ற தீர்மானம் கொண்டு வரப்படும். செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்படும். பொதுக்குழு உறுப்பினர்களையும், செயற்குழு உறுப்பினர்களையும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு அழைத்து வர சொகுசு பஸ்ககள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் தங்குவதற்கு சென்னையில் ஓட்டல்களில் ரூம்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறகு அவர்கள் அனைவரையும் கூட்டம் நடக்கும் வானகரத்துக்கு பஸ்கள் மூலமாகவே அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

செயற்குழு, பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள கட்சியினருக்கு சிறப்பு கிளாஸ் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. மேலும், யாரை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும். கூட்ட அரங்கில் செல்போன் கொண்டு செல்ல தடை, திருமண மண்டபத்துக்கு முன்பு வைக்கப்படவுள்ள பேனர்களில் கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் போட்டோ இருக்கக் கூடாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இருக்க வேண்டும். பேனர்களை வைக்க கட்சி தலைமையில் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளதாம். மேலும் சசிகலாவை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், "செயற்குழு, பொதுக்குழுவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், அமைச்சர் பெஞ்சமின் தலைமையிலான கட்சியினர் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புக்கான பணிகளில் உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அம்மா இல்லாமல் இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2014ல் நடந்தது போல பிரமாண்டமாக கூட்டத்தை நடத்த முடிவு செய்யவில்லை. இருப்பினும் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சின்னம்மாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார்.

சசிகலாவின் தலைமையை ஏற்காத செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கூட்டத்துக்கான அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லையாம். இதனால் கூட்டத்தில் சசிகலா, பொதுச் செயலாளராகுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்கின்றனர் கட்சியினர்.

இதற்கிடையில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மான நகலை கட்சியினர் போயஸ் கார்டனில் அவரிடம் கொடுத்தவுடன், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அவர் வர உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது, பொதுச் செயலாளராக அவர், பதவி ஏற்றுக் கொண்டு, கூட்டத்தில் கட்சியினரிடையே பேசவும் உள்ளார். அதற்கான பேச்சு தயாரிப்பு உரையும் தயாராக உள்ளதாம்.

பத்திரிகையாளர்களுக்கு தடை

வழக்கமாக அ.தி.மு.க பொதுக்குழு கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு அனுமதி கிடையாது. புகைப்படக்காரர்களுக்கு மட்டும் 5 நிமிடம் ஒதுக்கப்படும். அப்போது புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவர்களும் வெளியே வந்து விட வேண்டும். இந்த முறை புகைப்படக்காரர்களுக்கும் அனுமதியில்லையாம். கட்சித் தலைமையே புகைப்படங்களை எடுத்து இ-மெயிலில் ஒவ்வொரு பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...