Friday, December 23, 2016


ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரின் மகள் கிரிஜா


அரசின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதன், 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சென்னையில் பிறந்தார். சென்னை ஐஐடியில் 1981-ம் ஆண்டு எம்எஸ்சி இயற் பியல் முடித்த இவர், 1981-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று, தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார். அந்த ஆண்டு குடிமைப்பணி தேர்வில் பெண்களில் முதலாவதாகவும், தேசிய அளவில் 9-வது இடத்தை யும் கிரிஜா வைத்தியநாதன் பிடித்தார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி கள் அறிந்தவர். பயிற்சி முடித்து 1983-ம் ஆண்டு தமிழகத்தில் சார் ஆட்சியராக திருவள்ளூர் மாவட்டத் தில் பணியில் இணைந்தார். அதன் பின் சைதாப்பேட்டை பகுதிக்கென நியமிக்கப்பட்ட சார் ஆட்சியராக பணியாற்றினார். 1985-ல் தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழக பொது மேலாளர், 1986-ல் சுகா தாரத்துறையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட ஒருங்கிணைப் பாளர், 1989-ல் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை இணை மேலாண் இயக்குநராக பணியாற்றினார்.
அதன்பின், 1991-ல் இந்திய மக்கள்தொகை திட்டத்தில் பணியாற்றிய அவர், அதே ஆண்டு ஜூலையில் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 1992-ல் கலை மற்றும் பண்பாட்டு இயக்குநர், நிதித்துறை கூடுதல் செயலாளர், 1995-ல் செய் தித்துறை கூடுதல் செய லாளர், 1996-ல் சர்க்கரைத்துறை ஆணையர் என பல பதவிகளை வகித்தார்.
அதன்பின் செயலாளர் அந்தஸ் தில் பதவி உயர்வு பெற்று 1999-ம் ஆண்டு நிதித்துறை சிறப்புச் செயலாளரானார். 2001-ம் ஆண்டு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, 2002-ல் சுகாதாரத்துறை, 2005-ல் கல்வித்துறை, 2006-ல் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் பொறுப்புகளையும் அதே ஆண்டில் மாநில திட்டக்கமிஷன் உறுப்பினர் - செயலர் , 2008-ம் ஆண்டு தாய் - சேய் திட்ட சிறப்பு ஆணையர் ஆகிய பதவி களையும் கிரிஜா வைத்தியநாதன் வகித்தார்.
அந்தஸ்து உயர்வு
2011-ம் ஆண்டு முதன்மைச் செய லாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்ட கிரிஜா, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2012-ம் ஆண்டு தமிழ் நாடு மின்விசை நிதி மற்றும் கட் டமைப்பு வளர்ச்சி கழகம் (பவர்ஃபின்) தலைவராக இருந் தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு மே 22-ம் தேதி நில நிர்வாக ஆணையராக நியமிக் கப்பட்டார். 2014-ம் ஆண்டு அவ ருக்கு கூடுதல் தலைமைச் செயலா ளர் அந்தஸ்து அளிக்கப்பட்டு அதே பணியில் தொடர்ந்தார்.
2019 வரை
இதையடுத்து, தற்போது அவர் தமிழக அரசின் தலை மைச் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். கிரிஜா வைத்தியநாதன் 2019-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி வரை பணியில் இருப்பார்.
குடும்ப பின்னணி
கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வெங்கட்ராமன், மத்திய அர சில் நீண்டகாலம் பணியாற்றியவர். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தார். இவரது கணவர் வைத்தியநாதன், நடிகர் எஸ்.வி.சேகரின் சகோதரராவார். கிரிஜா வைத்தியநாதனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ஐஐடியில் படிப்பு முடித்து வெளிநாட்டில் உள்ளார். மகள் மருத்துவராக உள்ளார். கிரிஜா வைத்தியநாதன், தான் படித்த சென்னை ஐஐடியில் 2011-ம் ஆண்டு சுகாதார பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 279 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 2-வது இடத்தில் இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன். முதலிடத்தில் இருப்பவர் மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சக்தி காந்ததாஸ். 1980-ம் ஆண்டு தமிழக பிரிவு அதிகாரியான அவர், விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
முன்னதாக, ராமமோகன ராவை தமிழக தலைமைச் செயலாளராக நியமித்தபோது, அவர் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் 19-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போதுள்ள 22 கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து பெற்ற அதிகாரிகளில் 9 பேர் மத்திய அரசுப் பணியில் உள்ளனர். முன்னாள் தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் இடை நீக்கத்தில் உள்ளார். தற்போது வருமான வரித்துறை சோதனை யில் சிக்கியுள்ள ராமமோகன ராவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024