மாடுகளை அடித்துக் கொன்ற சிங்கம் கதை தெரியுமா? - சீனியர்களிடம் கொதித்த சசிகலா
தொழிலதிபர் சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராம மோகன ராவ், திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பயந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், சோதனை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விளக்கமாக கூறியதோடு, ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இந்த சோதனை நடந்திருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அவரது இந்த பேட்டிக்குப் பின்னால் அரசியல் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ராம மோகன ராவிடம் கார்டன் வட்டார முக்கிய நபர்கள் பேசியுள்ளனர். அதில் சோதனை குறித்த முழு விவரங்களையும் அவர்கள் கேட்டறிந்ததோடு ராம மோகன ராவிற்கு சில அறிவுரைகளை அவர்கள் தெரிவித்துள்ளனர். கார்டன் வட்டார முக்கிய நபர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே ராம மோகன ராவ் பேட்டிக்கு தயாராகி உள்ளார். அதற்கு முன்பு சட்ட நிபுணர்களுடனும் அவர் கலந்து ஆலோசித்துள்ளார். அவரது பேட்டிக்கு முன்னதாகவே மத்திய அரசை எதிர்க்கும் முடிவை அ.தி.மு.க எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்து 5 நாட்களுக்குப் பிறகு அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மத்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதன்தொடர்ச்சி ராம மோகன ராவின் பேட்டி. இதையெல்லாம் பார்க்கும் போது மத்திய அரசை வெளிப்படையாக அ.தி.மு.க எதிர்க்க தொடங்கி விட்டதை காண முடிகிறது.
அ.தி.மு.க.வுக்கு 50 எம்.பிக்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் கார்டனில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் இன்னொரு பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. அதாவது, அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா வருவதை பா.ஜ.க விரும்பவில்லை. இதனால்தான் மத்திய அரசு இயந்திரங்கள் மூலம் தமிழகத்தில் சோதனை என்ற பெயரில் உயரதிகாரிகள் முதல் அ.தி.மு.க.வுக்கு நெருக்கமானவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தலுக்குப் எப்போதுமே அஞ்சாதவர் அம்மா (ஜெயலலிதா). அவரது அதிரடி ஆக்ஷனை தொடர வேண்டும் என்று சசிகலாவிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு சசிகலா தரப்பும் சம்மதம் என்று சொன்ன பிறகே எம்.பி.யின் கண்டன அறிக்கை, ராம மோகன ராவின் பேட்டி என மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.
ராம மோகன ராவ் பேட்டிக்கு பதிலடி கொடுக்க வருமான வரித்துறையும் தயாராகி விட்டது. அந்த துறை தரப்பில் 'ராம மோகன ராவிற்கும், சேகர் ரெட்டிக்கும் இடையே உள்ள தொடர்பிற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதன்தொடர்ச்சியாகவே ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினோம். ராம மோகன ராவ் தரப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவைகளை புள்ளி விவரங்களுடன் தெரிவிக்க உள்ளோம். அப்போது இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்' என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று மாலை முதல்வர் பன்னீர்செல்வம், கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசி உள்ளார். அவர்களது சந்திப்பில் வருமான வரித்துறை சோதனை குறித்தும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது. மேலும், வரும் 29ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை முன்னிலைப்படுத்தினால் ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்தும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். அதை எவ்வாறு சட்டரீதியாக எதிர்கொள்ளலாம் என்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் மாடுகளை சிங்கம் அடித்துக் கொன்ற நிலைமை நமக்கும் ஏற்படும். எனவே நமக்குள்ளேயே எந்தவித ஈகோவும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றே கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் சொல்ல, அதற்கு மற்றவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மீது சோதனை என்ற பெயரில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இனிமேலும் அமைதியாக இருக்க வேண்டாம். உடனடியாக நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த சசிகலா, 'அக்கா இருக்கும் போது தமிழகத்தைக் கண்டு அஞ்சிய பா.ஜ.க இப்போது நம்மை எல்லாம் எள்ளி நகையாடுகிறது. அதற்கு நாம் ஒருபோதும் சம்மதிக்க கூடாது' என்றும் தெரிவித்து இருக்கிறார். சசிகலாவின் பேச்சு, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பொதுக்குழுவிற்கு வருகைத் தரும் அ.தி.மு.க எம்.பி.க்களுக்கு ஒரு அசைமெண்டை கார்டன் தரப்பு கொடுத்துள்ளதாம். அந்த அசைமெண்ட்டுக்கு பா.ஜ.க சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் அ.தி.மு.க.வின் எதிர்ப்பு குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவும், முக்கிய முடிவுகளை பா.ஜ.க எடுக்க முடியாமல் தடுப்பதே அ.தி.மு.க எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்ட அசைமெண்ட்டாம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், "மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் ரசிக்கவில்லை. ஆனால் அம்மா இறந்த இந்த நேரத்தைப் பயன்படுத்தி சோதனை என்ற பெயரில் எங்களை வேதனைப்படுத்திக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. அவர்களின் நடவடிக்கைகளுக்குப் பயந்து இனி அமைதியாக இருக்க மாட்டோம். நிச்சயம் எங்களது எதிர்ப்புகளை தெரிவிப்போம். அதற்கு சின்னம்மா தரப்பிலிருந்தும் எங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது. எங்களை மிரட்ட இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை பா.ஜ.க நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்களும் எங்களது எதிர்ப்புகளை காட்டுவோம்" என்றார்.
எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment