Sunday, December 25, 2016

சவுகார்பேட்டையில் சிக்கிய பண சுரங்கம்... ஐ.டி.ரெய்டால் அலறும் காக்கிகள்!

vikatan.com

வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி சீரியல்படி ஆட்களை தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை போக ஆரம்பித்துவிட்டது. சென்னை தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் தங்களுடைய கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப் படுத்தி வருகின்றனர். சென்னையில் புரசைவாக்கம், மண்ணடி, பாரிமுனை, சவுகார்பேட்டை போன்ற இடங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் பட்டியலில் இல்லாததால் அவைகள் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.

அளவுக்கு அதிகமான புதிய ரூபாய் நோட்டுகள், கணக்கில் வராத பணம், நகைகள் என்று அடுத்தடுத்த ரெய்டுகளில் தாராளமாக சிக்குவதால் வருமான வரித்துறை அதிகாரிகள் முழு தெம்பில் சுழன்று சுழன்று வேலை பார்க்கிறார்கள்.வருமான வரித்துறையினரின் ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம், அடுத்தடுத்த ஆட்களை அடையாளம் காட்டத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், புதுக்கோட்டை எம்.ஆர். என்கிற ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வரையில் அந்த வாக்குமூலத்தின் நீளம் போய்க்கொண்டே இருக்கிறது.

சென்னை சவுகார்பேட்டை மீது கவனம் திரும்பவும், ரெட்டி அன்ட் கோ கொடுத்த வாக்குமூலம்தான் காரணம் என்கின்றனர். இதுவரையில் நடந்த ரெய்டுகளில் இதுவும் முக்கியமான ஒன்று. நான்கு நாட்கள் ஆனபின்னும், இன்னும் இங்கே ரெய்டு முழுமையாக முடிந்ததா, இல்லையா என்றே தெரியாத அளவுக்கு சவுகார்பேட்டை ரெய்டு போய்க் கொண்டே இருக்கிறது. சவுகார்பேட்டையில், பெருமாள் தெருவில் இருக்கிறது, தீபக் டிரேடர்ஸ். தங்கமுலாம் பூசும் கவரிங் நகைக்கடை மற்றும் ஃபேன்சி பொருட்கள் விற்கும் கடை. ஆனால், கடையின் உள்ளே சுரங்கம் அமைத்து கோடிக்கணக்கான கள்ளப் பணத்தை பதுக்கியிருக்கிறார் இதன் உரிமையாளர் தீபக். சென்னை வேப்பேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். 'தீபக் டிரேடர்ஸ்' என்ற ஒரு பெயர்ப் பலகை, வெளியில் சாதாரணமாகத் தொங்க, அங்கே நடப்பதோ மிரட்டலான பணப் பரிமாற்றங்கள் என்கிறார்கள்.

சேகர் ரெட்டியின் நூல் பிடித்த தொடர்புகளில் சவுகார் பேட்டை தீபக்கும் இருக்கவேதான், அதிகாரிகள் இங்கும் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.தீபக்கின் சுரங்கம் போன்ற பிரமாண்ட நிறுவனத்தில் நடந்த மூன்று மணி நேர சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், பழைய ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. முதல் நாள் மீட்பு பணத்தின் மதிப்பு மட்டுமே 10 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். வேப்பேரியில் உள்ள தீபக்கின் வீட்டில் நடந்த சோதனையும் அதிகாரிகளை ஏமாற்றவில்லை. கணக்கில் வராத 6 கிலோ தங்கம், மற்றும் முக்கியமான சில ஆவணங்கள் அங்கேயும் சிக்கியுள்ளன. தீபக் வீடு மற்றும் கடையில் ரெய்டு போய்க் கொண்டிருந்த போதே வருமான வரித் துறையினரின் அடுத்த ரெய்டு 'இரானி' நகைக்கடையில் ஆரம்பித்தது.

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள 'இரானி' நகைக்கடை மற்றும் கடையின் உரிமையாளர் வீடுகளிலும் அடுத்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து பெறப்பட்டது, தங்கத்தில் முதலீடு செய்வதற்காக கொண்டுவரப் பட்டவையா? போன்ற விசாரணை நடவடிக்கைகள் போய்க்கொண்டு இருக்கிறது.ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட தரகர்கள், தீபக் வசிக்கும் குடியிருப்பில்தான் முன்னர் சிக்கினர் என்பதால் ரெய்டில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணை உத்தியையும், அடுத்தக்கட்ட ரெய்டு நடவடிக்கையையும் இதனால் முற்றிலும் மாற்றி உள்ளனர்.



சேகர் ரெட்டியை மடக்கி, அடுத்தடுத்த அரசியல் காய்களை வெட்டலாம் என்று சின்னதாக கோடாரி தூக்கியவர்களுக்கு, ஐ.பி.எல் சூதாட்ட தரகர்களுடன் தொடர்புடைய ஆட்களை நெருங்கிவிட்ட உணர்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
சென்னை சவுகார்பேட்டை மற்றும் பாரிமுனை பகுதிகளில், அடித்த ரெய்டில் ஐ.டி.அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல்கள் நிறையவே கிடைத்துள்ளன. "என்.எஸ்.சி போஸ் சாலை (பாரிமுனை), சவுகார்பேட்டை, யானைக்கவுனி போன்ற இடங்களில் நகை வியாபாரிகளுடன் நெருக்கமான உறவில் இருக்கும் சில காக்கிகளின் தொடர்பை உறுதிப்படுத்தும் டைரி, ஐ.டி அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது.

வருமான வரித்துறையினரின் ரெய்டின் போது ராம மோகனராவிடமும் இதே போன்று ஒரு டைரி கிடைத்ததாக தகவல் உண்டு. ரெய்டின்போது, உள்ளூர் போலீசாரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற விவரத்தையும் ரகசியக்குழுவினர் கண்காணிப்பதால் 'போன் போட்டு தகவல்' கொடுக்கும் கறுப்பாடுகள் கலங்கிப் போயுள்ளனர். காவல்துறையில் தனிப்படை (ஸ்பெஷல் டீம்) என்ற பெயரில் இயங்கும் சிலர் 'ஸ்பெஷலாக' அடிக்கடி நகைக் கடைகள், இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான ஆட்களிடம் ரெய்டு அடித்து, சொத்துகளை குவித்து வைத்துள்ளனர். சிலர் அவர்களின் தொழில் நுட்பங்களைக் கூட இருந்தே கற்று நகைக்கடை, கந்து வட்டி என்று பெரிதாக வளர்ந்து விட்டனர். 'எங்களுக்கு எதற்கு இனி கவர்ன்மென்ட் வேலை, இருக்கறதை வைத்து காப்பாற்றிக் கொண்டால் அது போதும்' என்ற குரலே அங்கு கேட்கிறது.



ஸ்பெஷல் டீம்களை இயக்கும் மேலதிகாரிகளின் சொத்துப் பட்டியல் அதை விட பல மடங்கு எகிறிப் போய் இருப்பது, வருமானவரி புலனாய்வுத்துறையின் சோதனை டீமையே, சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது."இவ்வளவு நாட்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட பர்சன்டேஜைக் கொடுத்து விட்டுத்தான் தொழில் செய்தோம், அதே போல் நீங்களும் வாங்கிக் கொண்டு எங்களை வாழவிடுங்கள்" என்று ரெய்டின்போது விபரம் புரியாமல் சில வியாபாரிகள் கதறியுள்ளனர். கூடவே, காக்கிகளுக்கு வருடம் தவறாமல் கலெக்‌ஷன் கொடுத்த ஆதாரங்களையும் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளனர். அவர்களிடம் பக்குவமாகப் பேசி ' ஸ்பெஷல் போலீஸ் டீம்' குறித்த விபரங்களை ஐ.டி. அதிகாரிகள் வாங்கிக் கொண்டுள்ளனர். ஐ.டி.அதிகாரிகளின் பிடியில் 'ஸ்பெஷல் ரெய்டு காக்கிகள்' சிக்கிக் கொண்டாலும் வியப்பில்லை.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...