Friday, December 30, 2016

ஜெயலலிதா மரணத்திற்கு 'இந்த' மருந்துகள்தான் காரணமா?! -அப்போலோ மெயிலும் 5 சந்தேகங்களும்



vikatan.com

"ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களுக்குள் போக நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்காக அடிப்படை உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற விவரம் பொதுமக்களுக்குத் தெரியவேண்டும். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என யார் வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். ஜெயலலிதா சாவில் மர்மங்கள் உள்ளன என்று பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வந்தன. ஜெயலலிதா நடந்தார் என்று சிலர் பேட்டி கொடுத்தனர். ஜெயலலிதா டி.வி. பார்க்கிறார் என்று மற்றொரு நாள் மற்றொருவர் பேட்டி கொடுக்கிறார். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது. எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற போது, அது தொடர்பான வீடியோ, புகைப்படம் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. ஏன் அப்படி ஒரு நிலை ஜெயலலிதா விஷயத்தில் இல்லை? சாதாரண ஒரு குடிமகன் என்ற முறையில், ஜெயலலிதாவின் சாவில் எனக்கும் பல சந்தேகங்கள் உள்ளன" -அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்வு செய்த நிர்வாகிகள், அவரிடம் தீர்மானத்தின் நகலைக் கொடுத்த தருணங்களில்தான், இப்படியொரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் உயர் நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன். ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலையாகவும் இந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.

"முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, நீதியரசர் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையிலேயே நாங்களும் கேள்வி எழுப்புகிறோம். தொலைக்காட்சி விவாதத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் பேசும்போது, ' அம்மா மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை' என்கின்றனர். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று பேசும்போது, ' மருத்துவர்கள் சொல்கின்ற தகவல்கள், தவறாக இருப்பதற்கு வாய்ப்பில்லை' என்கிறார். அரசியல்ரீதியாக, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அணுக நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றம் சொல்வதைப் போலவே, மருத்துவரீதியாக இந்த விவகாரத்தை அணுகுகிறோம். நாங்கள் முன்வைக்கும் ஐந்து கேள்விகளுக்கு அப்போலோ மருத்துவமனை விளக்கம் தருமா?" என ஆதங்கத்தோடு பேசினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி. அவர் எழுப்பும் கேள்விகள் இதோ...!

1. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படும்முன், சில நாட்களாக காய்ச்சலால் அவதியுற்ற நிலையில், சுயநினைவு இழந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? ஆம் எனில், சுயநினைவு இழக்கக் காரணங்கள் யாவை? சிகிச்சைக்காக அவரை அனுமதித்ததில் காலதாமதம் ஏற்பட்டதா?

2. முதல்வரின் உறுப்புக்கள் நன்றாகச் செயல்பட்டநிலையில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்போது இதயத் துடிப்பு முடக்கம் (cardiac arrest) வருவதற்கான காரணங்கள் யாவை? அது திடீரென ஏற்பட்டதா அல்லது மெல்ல ஏற்பட்டதா? இதைக் கண்டறிந்தபின், உடனடி சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டதா?

3. அப்படி நின்ற இதயத் துடிப்பைச் சீராக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது? 30 முதல் 40 நிமிடங்கள் ஆனது என பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. அப்படியெனில், மூளைச் சாவைத் தடுக்க முடியாது. முதல்வருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது உண்மையா? மருத்துவரீதியாக மூளைச்சாவைத் தடுக்கவே எக்மோவைப் பயன்படுத்துவார்கள்.



4. முதலமைச்சரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு மறைமுக காரணிகள் (underlying conditions) இருந்ததாக, அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில் வெளியானது. அவை என்ன என்பது விளக்கப்படவில்லையே ஏன்? உதாரணம். முதல்வருக்கு இருந்த சர்க்கரை நோய் பாதிப்பு.

5. இவை எல்லாவற்றையும்விட, குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக புரோப்பிடன் (prophiaden) 75 மில்லி கிராம் மருந்தை ஜெயலலிதா எடுத்ததாகச் சொல்கிறார்கள். இந்த மருந்தை அவர் எடுத்துக் கொண்டாரா? சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, பயோகிளிட்டசோன் (pioglitazone), ரொசிகிளிப்டஜொன் (rosiglipazone) போன்ற மாத்திரைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டதா? புரோப்பிடனும் பயோகிளிட்டசோனும் இருதயத் துடிப்பை பாதிக்கும் என மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், 'ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தத் தவறான மாத்திரைகள் கொடுக்கப்பட்டன' என செய்தி வெளியிட்டுள்ளது. புரோப்பிடன் கொடுத்தாலே இருதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். 'அப்போலோ மருத்துவமனையின் இ-மெயில்களில் இந்தத் தகவல் கசிந்துள்ளது' என அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது - என விவரித்த மருத்துவர் புகழேந்தி,

"டிசம்பர் 3-ம் தேதி இரவில் அவருக்கு செயற்கை சுவாசம் துளி அளவும் கொடுக்கப்படவில்லை. அதற்கு முந்தைய அப்போலோ அறிக்கையில், ' செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை' எனத் தெரிவித்திருந்தது. இதில் எந்த உண்மையும் இல்லை. டிசம்பர் 4-ம் தேதி இறப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளக் கூடிய அனைத்து உரிமைகளும் பொதுமக்களுக்கு இருக்கிறது. அதைத் தெளிவுபடுத்தாமல் கடந்து செல்வதில் இருந்தே சந்தேகங்கள் வலுக்கின்றன. அரசியல்ரீதியாக அணுகாமல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி வெளி உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை அரசு நிர்வாகத்துக்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் இருக்கிறது" என்றார் நிதானமாக.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024