'அதுவும் நாங்கதான்... இதுவும் நாங்கதான்!' - ராம மோகன ராவ் மகனுக்கான மாஸ்டர் ப்ளான்
வருமானவரித் துறை அண்மையில் நடத்திய ரெய்டில் பிடிபட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் இருவரும் மேலும் பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தற்போது அம்பலமாகி வருகிறது. இந்த மோசடியில் ராம மோகன ராவின் உதவியாளர் என்று கருதப்படும் பாஸ்கர் கனுமூரி என்பவரது பங்கும் இருப்பதாகத் தெரிகிறது.
பாஸ்கர் கனுமூரி, ஆந்திராவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி’ நிறுவனத்தின் இயக்குநர். இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு மருத்துவமனைகளில் சுகாதார மேம்பாட்டு வசதிகளைப் பராமரித்து வருகிறது. இது, தமிழக அரசின் ‘தமிழ்நாடு டூரிஸம்’ சுற்றுலா நிறுவனத்துடனும் கான்ட்ராக்ட் அடிப்படையில் இயங்கி வருகிறது. பாஸ்கர் ஸ்வான் என்டர்பிரைஸஸ் என்னும் தனியார் நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறார். ஸ்வான் நிறுவனத்தின் இயக்குநர், ராம மோகன ராவின் மகன் விவேக் ஆவார். விவேக்கும், பாஸ்கர் கனுமூரியும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிகிறது. இதனடிப்படையில் அரசின் கான்ட்ராக்ட்டில் கிடைக்கும் வருமானத்தைத் தங்களுக்குள்ளேயே சுழற்சி முறையில் லாபம் ஈட்டி மகனும் தந்தையும் மோசடி செய்திருக்கிறார்கள். இதன்மூலம், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு கான்ட்ராக்ட்டை தன் வசப்படுத்த விவேக் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.அதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதாக வருமானவரித் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், பாஸ்கர் யார்... ராம மோகன ராவின் உதவியாளரா அல்லது அவரது பினாமியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் தென்னக ரயில்வே, பெல் நிறுவனம், வெங்கடேஸ்வரா கால்நடைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுடன் இவர்கள் கான்ட்ராக்ட் ஒப்பந்தம் செய்துள்ளனர். குறிப்பாக ராம மோகன ராவின் மகன் விவேக்குக்கு பெங்களூருவில் உள்ள பிரபல சொகுசு ரியல் எஸ்டேட் ஒன்றிலும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விவேக் வருமானவரித் துறையின் விசாரணையில் இருக்கிறார்.விசாரணை தொடக்கத்திலேயே, தாங்கள் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டார் விவேக். மேலும் சேகர் ரெட்டிக்கான வங்கி சிபாரிசுகளுக்காக கடிதம் கொடுத்து மோசடி செய்தது,ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அவசர அவசரமாக பல எண்ணிக்கையிலான கோப்புகள் கையெழுத்தானது என்று பல குற்றச்சாட்டுகள் ராம மோகன ராவ் மீது தற்போது எழுந்துள்ளது.
இதில் மற்றொரு முக்கிய திருப்பமாக தமிழக மருத்துவ கல்வித் துறையுடனான 400 கோடி ரூபாய் மதிப்பிலான காண்ட்ராக்டையும் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 2006 தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் அதன் இயக்குநர் பாஸ்கர்.
ஆனால் காண்ட்ராக்ட் கையெழுத்தாவதற்கு அத்தாட்சியாக இருந்த சீனுவாச ராவ் என்பவர் பத்மாவதி நிறுவனத்தின் அருகிலேயே ஒரு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார் என்று பல தகவல்களை வெளியிட்டு வருகிறது வருமான வரித்துறை.
ராம மோகன ராவ் வீட்டில் கடந்த டிச 21-ம் தேதி நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் 30 லட்சம் அளவிலான புது ரூபாய் நோட்டுகளும். 5 கிலோ அளவிலான கணக்கில் வராத தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment