Friday, December 23, 2016

ஐ.டி கையில் 11 ஐ.ஏ.எஸ்கள்! - கதிகலங்கும் கோட்டை


வருமான வரித்துறையின் வளையத்தில் இருக்கிறார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். "கடந்த ஐந்தாண்டுகளாக ராமமோகன ராவ் ஆதரவில் ஆட்டம் போட்ட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலைக் கையில் வைத்திருக்கிறது வருமான வரித்துறை. சில நாட்களில் அவர்களது வீடுகளிலும் ரெய்டு தொடங்கும்'’ என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் கிரிஜா வைத்தியநாதன். இதுநாள் வரையில் கோட்டை அதிகாரத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்டு வந்தவர், அதிகாரத்திற்குள் வந்ததால் அதிர்ந்து போய் உள்ளனர் ராமமோகன ராவ் ஆதரவில் கோலோச்சிய அதிகாரிகள். " 2006-ம் ஆண்டு முதல் 2011 வரையில் தி.மு.க ஆட்சி காலத்தில் கோட்டையில் கொடிகட்டிப் பறந்த அதிகாரிகள் பலரும், அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும் நல்ல பதவிகளில் தொடர்ந்தார்கள். இவர்களுக்கு உள்ள சிண்டிகேட்டை யாராலும் உடைக்க முடியவில்லை. அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பிரமாண்ட திட்டங்களில் இவர்களுக்குப் பங்கு தராமல் எந்தப் பைலும் நகராது. இவர்களுக்குப் பக்கபலமாக இருந்து வந்தவர் ராமமோகன ராவ்" என விளக்கிய தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்,

"பொதுப் பணித்துறையாக இருந்தாலும் பள்ளிக் கல்வியாக இருந்தாலும் டெண்டர் விதிகளை மாற்றுவது, வேண்டப்பட்ட நிறுவனங்களுக்குப் பணிகளை ஒதுக்கீடு செய்வது வரையில் ராமமோகன ராவ் வைத்ததுதான் சட்டம். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டம் போன்றவற்றில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்தது. புதிய கட்டடம் கட்டுவது, விலையில்லா புத்தகப் பை, விலையில்லா காலணி உள்பட மிகப் பெரிய டெண்டர்களில் தங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் வருகிறார்கள் என்பதற்காக, டெண்டரையே ரத்து செய்தார்கள் இந்த அதிகாரிகள்.

மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் பணத்தை விரயம் செய்தார்கள். இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து, இவர்கள் கவலைப்படவில்லை. இதுதொடர்பாக பேசும்போதெல்லாம், ' டெண்டர் நார்ம்ஸ்படி அந்தக் கம்பெனி வரவில்லை' எனக் காரணம் சொன்னார்கள். நீதிமன்ற கண்டனத்திற்கு பலமுறை ஆளானபோதும்கூட, அவர்கள் மீது ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ராமமோகன ராவ். அரசுச் செயலரோடு இணக்கமாகச் செயல்படாத குற்றத்திற்காகவே, பள்ளிக் கல்விக்கு வந்த அமைச்சர்கள் பலரும் பந்தாடப்பட்டனர். ஓரளவு தாக்குப் பிடித்தவர் அமைச்சர் கே.சி.வீரமணி மட்டும்தான். அதற்குக் காரணம், 'நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என அவர் ஒதுக்கிக் கொண்டதுதான்.

அதேபோல், சத்துணவுக் குழந்தைகளுக்கான முட்டை கொள்முதலில் ஊழல் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடங்கி அனைத்துக் கட்சிகளும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டன. இதற்குக் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சத்துணவு மாவு முதற்கொண்டு ஒருங்கிணைந்த சமூக நலத் திட்டங்களில் ராமமோகன ராவ் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. சுகாதாரத்துறையில் நடந்த ஊழல்களுக்கு தனி விசாரணைக் கமிஷனே வைக்கலாம். வழக்கமாக எந்தப் பணி நடந்தாலும், அமைச்சரைப் பார்த்துவிடுங்கள் என ஒப்பந்ததாரர்களிடம் சொல்லப்படுவது வழக்கம். ஆனால், தமிழக அரசைப் பொறுத்தவரையில், ராமமோகன ராவைப் பார்த்தால்தான் காரியமே நடக்கும். இதற்கு வழிகாட்டுவதுதான் அவருடைய ஆதரவு ஐ.ஏ.எஸ்களின் வேலை. பொதுப் பணியில் தொடங்கி பள்ளிக் கல்வி வரையில் இவர்கள் நினைப்பவர்கள்தான் இயக்குநர்களாக வர முடியும். இவ்வளவு ஆட்டத்தையும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தார் தற்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். ஆறு ஆண்டுகளுக்கும் செயலர் பதவியில் அமர்ந்து கொண்டு, ஓர் ஐ.ஏ.எஸ் நடத்திய ஆட்டத்தையும் அவர் கவனித்து வந்தார். இனி வரக் கூடிய காலகட்டங்களில், அந்த ஐ.ஏ.எஸ் ஆன்ட்டி என்று அழைக்க ஜெயலலிதா உயிருடன் இல்லை. வரும் காலங்களில் தூய்மையான நிர்வாகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்" என்றார் உறுதியாக.

சேகர் ரெட்டி கைகாட்டியதால், ராமமோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. அவர் மூலமாக நடத்தப்பட்ட பரிவர்த்தனைகள் ஒருபுறம் இருந்தாலும், அவருக்காக செயல்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் குறிவைத்திருக்கிறது வருமான வரித்துறை. அந்த வகையில் முதலமைச்சரின் தற்போதைய செயலர் ஒருவர், ஏழு ஆண்டுகாலம் ஒரே துறையில் கோலோச்சும் அதிகாரி, ரெட்டி அதிகாரி, வர்ம அதிகாரி என 11 பேரைக் குறிவைத்திருக்கிறது ஐ.டி. இவர்கள் அனைவரும் பசையான துறைகளில் நீண்டகாலம் அமர்ந்திருப்பவர்கள். தொடர்ந்து அரசுப் பணிகளை எடுத்துச் செய்த வந்த ஒப்பந்ததாரர்கள், அவர்கள் மூலம் ஐ.ஏ.எஸ்கள் அடைந்த லாபம், அவற்றின் மூலமான முதலீடுகள் என துல்லியமான வேட்டை தொடங்கியிருக்கிறது. நேற்றே மோகனமான அதிகாரி வீட்டிற்குள் ஆய்வை நடத்தினோம். மேலும் சில ஐ.ஏ.எஸ்கள் வளைக்கப்பட உள்ளனர்" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.

அமைச்சர்கள் முகத்தில் கலவர பீதி தென்படுகிறதோ இல்லையோ, தினம்தினம் அச்சத்தோடு நேரத்தைக் கடத்தி வருகிறார்கள் ராமமோகன ராவ் ஆதரவு ஐ.ஏ.எஸ்கள்.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...