'வர்தா' துயர் துடைக்க வந்தவர்களை அடித்து துரத்திய அ.தி.மு.க.வினர்
தருமபுரி : வர்தா புயலால் சிக்கி சின்னாப்பின்னமான நகரை சீர்படுத்த வந்த துப்புரவு தொழிலாளர்களை அ.தி.மு.க.வினர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை மையப்படுத்தி அடித்த வர்தா புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருந்தது. லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் புயல் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகின. சாலைகள் தோறும் மரங்கள் வீழ்ந்து கிடக்க... மரங்களை அகற்ற... மின் வினியோகத்தை சீர்படுத்த தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவுக்கரம் நீட்டியது அரசு பணியாளர்கள் தான்.
அனைத்து மாவட்டங்களில் இருந்து துப்புரது தொழிலாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், வனத்துறையினர் உள்ளிட்டோர் சென்னை வந்து, மரங்களை அகற்றுவது, துப்புரவு பணிகள், மின் வினியோக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இப்படி பணியாற்ற வந்த இடத்தில் துப்புரவு பணியாளர்களை அடித்து கொடுமைப்படுத்திய நிகழ்வு அரங்கேறி இருப்பது தான் வேதனை.
வர்தா புயலால் சென்னையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில். சேலம் மாவட்டத்திலிருந்து 119 ஆண் துப்புரவு பணிளர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். வேளச்சேரி பகுதியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தியும், சாலைகளை தூய்மைபடுத்தும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று விஜயா நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பாலன், மாது,ராவி,ராமக்கிருஷ்ணன் ஆகிய நால்வருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னைக்கு சென்றிருக்கும் சேலம் துப்புரவு பணியாளர்களிடம் பேசினோம், “நேற்று மதியம் ஒரு மணி இருக்கும் நாங்க ஒரு பத்துபேர் விஜயா நகர் பகுதியில் சுத்தம் பண்ணிகிட்டு இருந்தோம். அப்ப அந்த பகுதியோட வட்டச்செயலாளர் சம்பத்ங்கறவர் எங்க கிட்ட வந்து, கபாலி நகருக்கு சுத்தம் பண்ண வரச்சொன்னார். ஆனா, விஜயா நகரில் இன்னும் வேலை முடிக்கலை. அவர் பேச்சையும் தட்ட முடியாதுங்குறதுக்காக ஒரு நாலுபேர முதல்ல கபாலிநகருக்கு போக சொல்லிட்டு. மத்தவங்க விஜயா நகர்ல இருக்கும் வேலைய முடிச்சிட்டு அங்க போகலாம்னு நினைச்சு வேக வேகமா வேலை பாத்துகிட்டு இருந்தோம்.
அப்ப, அவர் என்ன நினச்சாரோ தெரியல. நான் கூப்பிட்டா நீங்க எல்லாரும் வர மாட்டீங்களாடானு, கெட்டவார்த்தையில் திட்டினாரு. அதை பொறுத்துகிட்டு தான் நாங்க நின்னோம். திடீர்னு ஓரமாக கிடந்த மரக் கட்டையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சார். இதுல பாலன், மாது, ரவி, ராமகிருஷ்ணன் ஆகிய நாலு பேருக்கு அடி விழுந்துச்சு. அவர் கூட வந்த இன்னொருத்தரும் தன் பங்குக்கு ஒரு குச்சிய எடுத்து அடிச்சார். எல்லோருக்கும் பலமான அடி வலி தாங்கல..
உடனே மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் கொடுத்தோம்.. அவர் அமைச்சர் வரைக்கும் பேசியிருக்கிறார். ராத்திரி 7 மணிக்கு சரவணன்னு ஒருத்தர் வந்தார் வேளச்சேரி அ.தி.மு.க பகுதி செயலாளர்னு சொன்னாங்க. “நடந்தது மிகப்பெரிய தப்புதான் மன்னிச்சிடுங்க. விஷயத்தை பெருசு பண்ணாதிங்க நான் மேல பேசிடுறேன்.. நீங்க எல்லாரும் நாளைக்கு வேலைய முடிச்சிட்டு கிளம்பிடுங்க, மன்னிச்சுடுங்கனு கையெடுத்து கும்பிட்டார். வேலை இன்னும் இருந்துச்சு. நாங்க இருந்தா விஷயம் பெருசாகிடும்ங்குறதால எங்களை உடனே ரிலீவ் பண்ணி அனுப்பிட்டாங்க," என்றனர்.
அழுக்கு உடை அணிந்து 'சேவை' செய்தவர்களை, 'வெள்ளை' உடை அணிந்தவர்கள் அடித்து விரட்டியிருக்கிறார்கள்.
VIEW COMMENTSPOST COMMENT
No comments:
Post a Comment