Saturday, December 24, 2016

Posted Date : 15:04 (23/12/2016)
Last updated : 15:05 (23/12/2016)


அரிதினும் அரிதான அரசியல் தலைவர்... கக்கன் நினைவு தின பகிர்வு !





1980-ம் ஆண்டு. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த கால கட்டம் அது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை முத்துவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார் எம்.ஜி.ஆர். அப்போது காளிமுத்து சொன்ன தகவலால் பதறி போனார் எம்.ஜி.ஆர். உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சாதாரண வார்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரை கண்ட உடன் கலங்கினார். உடனடியாக அவரை சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார். அப்போது சிகிச்சை பெற்று வந்தவர் எம்.ஜி.ஆரிடம் வேண்டாம் என்றார். 'எல்லோருக்குமான சிகிச்சை பிரிவே எனக்கு போதும். நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி' என்றார் அவர்.

எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவ பொறுப்பாளர்களை அழைத்து, "இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவமும் அளியுங்கள்" என உத்தரவிட்டுச் சென்றார். எம்.ஜி.ஆரை கலங்க வைத்த... 'இவரில்லாவிட்டால் நாம் இல்லை' என பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நபர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் முக்கியமானவரான கக்கன். சென்னை சென்ற உடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றிற்கு உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். அத்தோடு கக்கனுக்கு ஓய்வூதியமும் கிடைக்க வழியேற்படுத்தினார்.

ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 டிசம்பர் 23-ம் நாள் இறந்தார். அவரின் நினைவு தினம் இன்று. உயிரே போகும் சூழலிலும் எளிமையாய் வாழ்ந்தவர் கக்கன். அவரது உடலை காமராசர் நினைவிடம் அருகே புதைக்கவேண்டும் என்பது அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் விருப்பமாக இருந்தது. அதை அரசின் காதுகளுக்கும் கொண்டு சென்றனர். ஆனால் கடைசி வரை அந்த குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவன் 1981ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார். எளிமைக்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன் நினைவு தினம் இன்று.



பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எளிய வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டுமென்று வாழ்ந்து காட்டி தமிழ்நாட்டு மக்களின் மனதில் நிலைத்துவிட்ட கக்கன் பிறந்த ஊர் மேலூரிலிருந்து கொட்டாம்பட்டி செல்லும் வழியிலுள்ள தும்பைப்பட்டி. சமகால அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களை பார்த்துப்பழகிப்போன நமக்கு கக்கன் போன்ற தலைவர்களின் வரலாறு கண்ணீர் சிந்த வைக்கிறது.

காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் இவரைப்போன்று இருந்தார்களா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், முதல்வராக இருந்த காமராஜரும், அமைச்சர் கக்கனும் சாகும் வரையில் எளிமையாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தார்கள் என்று அடித்து சொல்லலாம். இவர்களின் அரசியல் எதிரிகள் கூட இதை மறுக்கமாட்டார்கள்.

மேலூர்காரரான கக்கனுக்கு சென்னை திருவற்றியூர் தாங்கலில் மன்றம் வைத்து இன்றும் அவரைக் கொண்டாடுகிறார்களென்றால் அவருக்கு புகழ் எதனால் வந்தது என்பதை அறிய முடியும். இன்று மதுரை மாவட்டத்தில் நிலைத்து நிற்கும் பல நல்ல திட்டங்கள், பாசனக்கால்வாய்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமணைகள் என வருவதற்கு கக்கன் தான் காரணம். இருந்தாலும் அவர் விரும்பிய சாதீய சமநிலை மட்டும் மதுரை மாவட்டத்தில் இன்னும் வரவில்லை என்பதும் உண்மை.

இப்பவே அப்படியென்றால் அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இங்கு எவ்வளவு கீழ் நிலையில் இருந்திருப்பார்கள் என்பதை எண்ணி பார்க்கவே வேதனையாக உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.யில் ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தவுடன், எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் அப்போது அவர் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி, காமராஜர் வழியில் செல்ல முடிவு செய்தார் கக்கன். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை ஒன்றை மட்டும் எதிர்பார்த்து மற்றவர்கள் போராடியதற்கும் கக்கனின் போராட்டத்திற்கும் வேறுபாடு உண்டு. தான் பிறந்த சமூகத்தின் விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கும் இணைந்து போராட வேண்டிய நிலையில் இருந்தார்.



தீண்டாமை கொடுமையை களைவதற்குமுன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அவசியம் என்பதில் குறியாக இருந்தார். அதனால்தான் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அரிஜன சேவா சங்கத்தில் ஒரு வாலண்டியராக இணைந்து மேலூர் வட்டாரத்தில் தொடங்கப்பட்ட அரிஜனப்பள்ளியின் விடுதி பொறுப்பாளராக இருந்து சேவையாற்றினார்.

பகலில் விடுதலைபோராட்டம். இரவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விப்பணி. தும்பைபட்டியில் அமைந்திருந்த ஊருணியில் ஒடுக்கப்பட்ட மக்களை தவிர மற்ற சாதியினர் அனைவரும் நீரெடுக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களோ ஊருக்கு வெளியிலிருந்த குளத்தை மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த அசுத்தமான குளத்துக்கு ஊர்க்காரர்கள் வைத்த பெயர் பீக்குளம்.

மேலூர் தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கனுக்கு இந்த கொடுமையை பார்த்து மனம் சகிக்கவில்லை. அதற்காக உடனே களத்தில் இறங்கி போராடவும் அவர் நினைக்கவில்லை. இந்த கொடுமையை தன்னோடு கட்சிப் பணியாற்றும் மற்ற காங்கிரஸ் காரர்களிடம் சொல்லியும் பலனில்லை. காரணம் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சாதிக்கட்டமைப்பையும், தீண்டாமயையும் ஆதரிப்பவர்களே அதிகம் அங்கம் வகித்தனர்.

கக்கனின் வேதனையை புரிந்துகொண்ட தும்பைபட்டி அம்பலம் ஒருவரும் செட்டியார் ஒருவரும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களையும் ஊர் பொதுக்குளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று பேசினார்கள். பொங்கி எழுந்த ஆதிக்க சாதி கூட்டம், இந்த இரண்டு பேரையும் தாக்க முற்பட்டனர். வாக்கு வாதத்துக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், குளத்தின் இன்னொரு கரையை பயன்படுத்திக்கொள்ள ஒத்துக்கொண்டனர்.



இது ஒரு அரைகுறை தீர்வென்றாலும் அந்த காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிய சாதனைதான். காமாரஜருக்கு அடுத்து கக்கனுக்கு மிகவும் பிடித்தவர் யாரென்றால் அமைதி வழியில் போராடும் குணத்தை உருவாக்கிய வைத்தியநாதய்யர். அரிஜன மக்களின் முன்னேற்றத்தில் எந்தவொரு பாசாங்குமில்லாமல் உழைத்தவர் வைத்தியநாதய்யர்.

இதற்காக அவர் இழந்தது ஏராளம். மீனாட்சியம்மன் கோயில் ஆலய நுழைவுப்போராட்டத்தை கக்கனோடு சேர்ந்துதான நடத்தினார். அதற்கு பின்பும் கக்கனுக்கு பல வகையிலும் உதவியாக இருந்தார். அதனால்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது 1955 ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன்.

இறுதிச்சடங்கு செய்யும் நேரத்தில் வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோ, நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது என்றனர். இதைக் கேட்ட ஐயரின் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள். சிலர் கோவித்துக்கொண்டு இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் கிளம்பி சென்றார்கள்.

காங்கிரசை கடுமையாக எதிர்த்தாலும் அரியலூர், மேலூர் சட்டமன்றத்தொகுதியில் கக்கன் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை திமுக. கக்கன் மீது தனி மரியாதை வைத்திருந்தது. 1967ல் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்ட நிலையில்தான் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார்கள். காங்கிரசின் படுதோல்விக்கு பிறகு மிகவும் கஷ்டமான நிலைக்கு கக்கன் குடும்பம் சென்றுவிட்டது. நிறைய கடன் வேறு. அதை தெரிந்துகொண்ட பழ.நெடுமாறன் மதுரையில் கக்கனுக்கு மணிவிழா எடுத்து நிதி வசூல் செய்து 21 ஆயிரம் வழங்கினார். அதை வங்கியில் டெபாசிட் செய்ய மறுத்த கக்கன், நாவினிபட்டி பண்ணையார் போன்றவர்கள் தேர்தல் செலவுக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை கடனாக எழுதி வைத்திருந்தார். நெடுமாறன் வழங்கிய நிதியின் மூலம் இக்கடன்களை அவர்கள் கேட்காமலே அடைத்தார்.



அப்போது மதுரை மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் பின்னாளில் புதுவை பலகலைகழக வேந்தராக பதவி வகித்த வேங்கடசுப்ரமணியன். இவரிடம் மதுரை மாவட்ட தலித் மக்களின் நிலையை எடுத்து சொல்லி விடுதிகளுடன் கூடிய பள்ளிகளை அதிகம் திறக்க வைத்தார். அதில் பிற்பட்ட சாதி மாணவர்களுக்கும் அதிக விடுதிகள் கட்ட ஏற்பாடு செய்தார். ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டது.

காவல்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். லஞ்ச ஒழிப்பு துறையை உருவாக்கியதும் இவர்தான். சாதி கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ள பிரச்னைகளை கண்டறிய தனி பிரிவை காவல்துறையில் ஏற்படுத்தினார். என்னதான் காவல்துறையை அவர் கண்ட்ரோலில் வைத்திருந்தாலும், கலவரங்களில் உயர்சாதி வெறியோடு செயல்படும் காவலர்களை, அதிகாரிகளை தடுக்கவோ தண்டிக்கவோ அவரால் முடியவில்லை. வெளியே சொல்ல முடியாத இந்த வேதனை அவரிடம் இருந்துள்ளது.

கக்கனிடம் நீண்டகாலம் தனிச்செயலாளராகப் பணியாற்றிய கே.ஆர். நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லும்போது, "விடுதலை வேள்வியில் சவுக்கடிகளின் தழும்புகளைப் பரிசாகப்பெற்றவர். சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளானவர். அரசியல் உலகில் பிழைக்கத்தெரியாதவர் என்ற பட்டப்பெயருக்குச் சொந்தக்காரர். இன்றைக்கு அவரை யார் நினைக்கிறார்கள். அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்கிற வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். தமிழகத்தில் இதுவரை கக்கன்ஜியைவிட உயர்ந்தவர்கள் எவரும் இல்லை. இனியும் பிறக்கப்போவதும் இல்லை. இது சத்தியம்.." என்றிருந்தார்....அது உண்மையிலும் உண்மைதான்.

மூத்தவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகி கட்சிப்பணிகளை செய்ய வேண்டுமென்று அறிவித்து அதற்கு தானே முன்னுதராணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகிய காமராஜர், அடுத்த முதல்வராக கக்கனை முன்மொழிய நினைத்தார். இதை தெரிந்துகொண்ட கக்கனோ, தன்னைவிட சீனியரான பக்தவச்சலத்தை முன்மொழிந்தார். காமராஜரின் ஆசை நிறைவேறாமல் போனது.

கக்கன்ஜியின் அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கையை பற்றி நிறைய சம்பவங்களை கூறலாம். அது ஓரளவு நமக்கு தெரிந்த விஷயங்கள்தான். ஊழலிலும் குற்றங்களிலும் புழுத்துப்போன சமகால அரசியலை அவதானித்துவரும் இன்றைய செல்பி தலைமுறையினருக்கு மீண்டும் மீண்டும் இவைகளை நினைவு படுத்த வேண்டியது அவசியம்.....

வேளாண்மைத் துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது அவரை மலேஷிய நாட்டின் வேளாண்மைத் துறை அமைச்சர் சந்திக்க வந்திருந்தார். அவர் கக்கனுக்கு ஒரு பேனா பரிசளித்தார். கக்கன் அந்த பேனாவை ஆச்சரியமாக பார்த்தார். அதற்கு மலேஷிய அமைச்சர், இது தங்கப்பேனா என்றார். அப்படியானால் இதை வைத்துக்கொள்ளும் தகுதி எனக்கில்லை. நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.. என்றார் கக்கன்.

மலேஷிய அமைச்சரோ இது நட்பிற்கான அடையாளம். எனது பரிசு என்றார். உடனே கக்கன், தன் உதவியாளரை அழைத்து, பதிவு புத்தகத்தில் இந்த பேனா வந்தது குறித்து பதிவு செய்து எடுத்து வாருங்கள் என்றார். மலேஷிய அமைச்சர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை பதிவு செய்யாமல் வாங்கிக்கொள்ள கக்கன் உடன்படவில்லை. கடுப்பான மலேஷிய அமைச்சர் அந்த பேனாவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

கக்கனின் தம்பி விஸ்வநாதன், சிறந்த ஓட்டப்பந்தய வீரர். இவருக்கு போலீஸ் வேலையில் சேர ஆர்டர் வந்தது. இந்த விஷயத்தை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அண்ணன் கக்கனிடம் விஸ்வநாதன் சொல்ல, வேண்டாம், நீ போலீஸ் வேலையில் சேரக்கூடாது. அந்த துறை என் பொறுப்பில் உள்ளது. நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், என் சிபாரிசில் வந்ததாகச் சொல்வார்கள் என்று அவரை போலீசில் சேர கக்கன் அனுமதிக்கவில்லை.
உடனே அப்போது ஐ.ஜியாக இருந்த அருளைக் கூப்பிட்டு, விஸ்வநாதனின் விரல்கள் சரியாக செயல்படாது. துப்பாக்கியை கையாளுவதெல்லாம் சிரமம். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறவர்கள் முழுத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு அவருக்கு வழங்க இருந்த பணி ஆணையையும் நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

ஆனால் உண்மை என்னவென்றால், விஸ்வநாதன் இளவயதில் விளையாடும்போது தவறிவிழுந்ததால் அவரது வலது முழங்கையின் மேல்புறத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் சுண்டு விரலும் மோதிர விரலும் சற்று வளைந்திருந்தது இதை விஸ்வநாதன் அருளிடம் தெரிவிக்க.. இதற்காகவா அமைச்சர் அப்படி கூறினார், என போலிஸ் அதிகாரி அருள் ரொம்பவும் கவலைப்பட்டுள்ளார்.

இப்படி தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏகப்பட்ட சம்பவங்களை நாம் கற்றுக்கொள்ள பாடமாக வைத்துவிட்டு சென்றுள்ள கக்கனை இன்று மட்டுமல்ல எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் கக்கன் அரிதினும் அரிதான அரசியல் தலைவர் கக்கன்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...