Sunday, December 25, 2016

‘சாணி என்றவர் சரண்டர் ஆன கதை!

vikatan.com

இதே டிசம்பர் மாதத்தில்தான் ஒரு பிரளயம் அரங்கேறியது. 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சசிகலாவையும் அவரது உறவுகளையும் கட்சியைவிட்டு கட்டம் கட்டினார் ஜெயலலிதா. அடுத்து சில நாட்களிலேயே கட்சியின் பொதுக்குழு கூடியது. சசிகலாவை விமர்சித்துப் பேசலாமா, கூடாதா? என்று குழப்பத்தில் இருந்தார்கள் நிர்வாகிகள். ‘அம்மாவின் முடிவில் மாற்றம் இருக்காது. இனி சசிகலா அவ்வளவுதான்’ என நினைத்து பொதுக்குழுவில் படபடப்போடு பேச ஆரம்பித்தார் அப்போது அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி. ஜெயலலிதா முன்பு அவர் பேசிய பேச்சு அப்போது சூட்டைக் கிளப்பியது. அப்படி என்ன பேசினார்?



“சாணத்தைப் பிடித்து அதைப் பிள்ளையாராக மாற்றுபவர் அம்மா. அதற்காகச் சாணம் தன்னையே கடவுளாக நினைத்துக்கொண்டால் எப்படி? அது வெறும் சாணம்தான் என்று புரிய வைக்க, ஒரேயடியாக அதை அம்மா வழித்துப் போட்டுவிடுவார். அம்மா அருகில் இருப்பவர்கள், ‘நாங்களும் பிள்ளையார் பிடிக்கிறோம்’ என்று முயன்றால்... அதுவும் நடக்காது. அப்படி நினைக்கிறவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். ஒன்றுக்கும் பயன்படாத பொருளாகி விடுவார்கள்’’ என்று சசிகலாவை மறைமுகமாக விளாசித்தள்ளிவிட்டார் கே.பி.முனுசாமி. பிறகு மூன்றே மாதங்களில் சசிகலா மீண்டும் கார்டனுக்குள் வந்ததால் பதவியை இழந்தார் கே.பி.முனுசாமி.

அப்போது, கே.பி.முனுசாமி உள்ளாட்சித் துறை அமைச்சர், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் என ஜெயலலிதாவுக்கு அடுத்துள்ள தலைவர்களில் ஒருவராக ஜொலித்திருந்தார். ‘‘மன்னிப்பே கிடையாது’’ என பொதுக்குழுவில் சசிகலாவை மறைமுகமாக எச்சரித்த ஜெயலலிதா, மூன்றே மாதங்களில் சசிகலாவை மன்னித்து சேர்த்துக்கொண்டார். முனுசாமியோ ஆடிப்போய்விட்டார். அதற்குப் பிறகு என்ன நடந்தது?

முனுசாமியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “அன்று அம்மாவின் நிலைப்பாடு சசிகலாவுக்கு எதிராக இருந்ததால் அண்ணன் அப்படி பேசிவிட்டார். தலைமைக்கு விசுவாசமாக இருந்தது ஒரு தவறா? ஆனால், சசிகலா நேரம் பார்த்துப் பழிவாங்கிவிட்டார். அதற்கு அண்ணனால் வளர்த்துவிடப்பட்ட பழனியப்பனையே பயன்படுத்திக்கொண்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததற்கு தர்மபுரியைச் சேர்ந்த பழனியப்பனின் அமைச்சர் பதவிதான் நியாயப்படி பறிபோயிருக்க வேண்டும். ஆனால், முனுசாமியை காலி செய்வதுதான் சசிகலாவின் கணக்கு. ‘அன்புமணி வன்னியர் என்பதால், அவருக்கு ஆதரவாக வன்னியரான கே.பி. முனுசாமி செயல்பட்டார். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை’னு ஜெயலலிதா காலில் விழுந்தார் பழனியப்பன். இதை கச்சிதமாக ரூட் போட்டுக்கொடுத்தது சசிகலா தரப்பு.



பழனியப்பனுக்கு பதவி முக்கியமாச்சே... பக்காவாக அதை செய்து முடித்தார். அதற்குமேல் சொல்ல வேண்டியதை அண்ணனை எதிர்க்கும் தம்பிதுரை மூலம் சசிகலா சொல்லவைத்தார். அவ்வளவுதான்... ஒரே நாளில் அடுத்தடுத்து அண்ணனிடம் இருந்த அத்தனை பதவிகளையும் பறித்துவிட்டார்கள். செல்வாக்காக வலம் வந்தவர் டம்மியாக்கப்பட்டார். அடுத்தடுத்து அவர் மீது புகார்களை அடுக்கியபோது கடந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதிக்கு அம்மா சீட் கொடுத்தார்கள். கிருஷ்ணகிரியில் வென்று கே.பி.முனுசாமி மீண்டும் பவருக்கு வந்துவிடுவார் என நினைத்த சசிகலாவும், தம்பித்துரையும் கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனக்ஹள்ளிக்கு அண்ணனை மாற்றினார்கள். அங்கும் வெற்றிபெற்றுவிடுவார் என்று ரிப்போர்ட் போனது. ‘நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணியை ஜெயிக்க வெச்சாருல்ல... இப்போ சட்டமன்றத் தேர்தல்ல அன்புமணியை எதிர்த்து பென்னாகரத்தில் நிற்கச் சொல்லுவோம்’ என்று ஜெயலலிதாவிடம் சொன்னார் சசிகலா. அதன்படியே அண்ணனை பென்னாகரத்தில் நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிக்கச் செய்துவிட்டார்’’ என்றார்கள்.

அன்றைக்கு சாணமாக இருந்த சசிகலா இன்று சாமியாகிவிட்டார். ஆமாம், கே.பி.முனுசாமியும் இப்போது சசிகலாவிடம் சரண்டர் ஆகிவிட்டார். கே.பி.முனுசாமி அதிருப்தியில் இருக்கிறார் என்பதை அறிந்த சசிகலா, ‘இந்த சூழலில் இது நல்லதல்ல. கட்சியின் சீனியர்கள் யாரும் நமக்கு எதிராக பேசவிடக்கூடாது. அவரை வரச்சொல்லுங்கள்’ என்று கே.பி.முனுசாமிக்கு நெருக்கமான திவாகரன் மூலமாக தூது அனுப்பினார். உடனே கடந்த 20-ம் தேதி அவருக்கான அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டது. சசிகலாவைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘‘அன்றைக்கு அம்மா திடீர்னு என்னைப் பேசச் சொல்லுவாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா. என்ன பேசுறதுனு தெரியாம அப்படி பேசிட்டேன் மன்னிச்சிடுங்
கம்மா’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. உங்களுக்குத் தேவையானது உங்களைத் தேடிவரும் பழையபடி உற்சாகமாக கட்சிப்பணியைப் பாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பினாராம்.பார்ப்போம்!

- எம்.புண்ணியமூர்த்தி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024