Thursday, December 29, 2016

உண்மைக்குப் பின்னால்...

சமூக வலைதளங்கள் மிகப் பெரிய தகவல் புரட்சிக்கு வித்திட்டிருக்கின்றன என்பதில் ஐயப்பாடே இல்லை. இவ்வளவு அதிவிரைவாகத் தகவல் பரிமாற்றம் நடைபெறக்கூடும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்னால் யாரும் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பல மத்திய ஆசிய நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட இந்த சமூக வலைதளங்கள் காரணமாக இருந்திருக்கின்றன என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.
இந்தியாவிலேயே எடுத்துக் கொண்டால் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தால் அகில இந்திய அளவில் இளைஞர்களையும், நடுத்தர வர்க்கப் பொதுமக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டமாக மாற்ற முடிந்ததென்றால் அதற்கு சமூக வலைதளங்களின் பங்குதான் காரணம். காவல்துறையினரின் அத்துமீறல், அரசு அதிகாரிகளின் அதிகார மீறல், நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் போன்றவை சமூக வலைதளங்களால் வெளிச்சம் போடப்படுவதால், தவறு இழைப்பவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில், தவறான செய்திகளைப் பரப்புவதிலும், பொய்ப் பிரசாரங்களை முடுக்கி விடுவதிலும் சமூக வலைதளங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன எனும்போது, இந்த வளர்ச்சி மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்குமா இல்லையா என்று யோசிக்க வைக்கிறது. தனிநபர் குறித்த அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பி அவர்களது நற்பெயருக்கு நிரந்தரக் களங்கத்தை சமூக வலைதளங்களால் ஏற்படுத்த முடியும் என்பது பல நிகழ்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை தீர்மானித்ததில் முகநூல் முக்கியப் பங்கு வகித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முகநூலை பயன்படுத்தி, தவறான படங்களை, போலி ஆவணங்களை, பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பியதாகத் தெரியவந்துள்ளது. முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் சுக்கர்பெர்க், தங்களது நிறுவனத்தின் முகநூல் பதிவுகளில் பெரும்பான்மையானவை நம்பகத்தன்மை உடையவை என்று கூறினாலும், தவறான தகவல்கள் எதுவும் பரப்பப்படவில்லை என்று அறுதியிட்டுக் கூற முன்வரவில்லை.
தவறான சமூக வலைதளப் பரப்புரையில் சமீபத்தில் சிக்கிக் கொண்டவர் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக சிரியாவில் பாகிஸ்தான் செயல்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்திருக்கிறது என்று சமூக வலைதளங்
களில் பரபரப்பாக ஒரு தவறான தகவல் பரவியது. இதனை அதிகாரபூர்வமாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது என்றுகூட அந்த சமூக வலைதள செய்தி உறுதிப்படுத்தியது.
இந்தத் தவறான செய்தியை உண்மையென்று நம்பி, இஸ்ரேல் தூதரகத்திடம் விளக்கம்கூடக் கேட்காமல், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர், "எங்களிடமும் அணு ஆயுதம் இருக்கிறது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்' என்று பேட்டியே கொடுத்துவிட்டார். சமூக வலைதளச் செய்தி அடிப்படை இல்லாததது, தவறாகப் பரப்பப்படுகிறது என்பது தெரிந்ததும், அவ
மானத்தால் மெüனம் காக்கிறார் கவாஜா ஆசிப்.
மேலே குறிப்பிட்ட சம்பவத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டுவிட முடியாது. சில தவறான தகவல் பதிவுகள் சர்வதேசப் பிரச்னையாக மாறுவதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு. ராஜீய உறவுகளில் அனுமானங்களேகூட வெறுப்பை உருவாக்கிப் போரில் போய் முடிந்த சரித்திரம் ஏராளம் உண்டு.
அரசியலில் எதிரிகளை ஏளனப்படுத்த, தவறான பிம்பங்களை ஏற்படுத்த, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்ப முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்றவை பயன்படுத்தப்படுவது எண்ணிப் பார்க்க முடியாத அளவு அதிகரித்திருக்கிறது. இதற்காகக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் சமூக வலைதளங்
களின் மூலம் எதிரிகளை நையாண்டி செய்வது, நகைப்புக்குரியவர்களாக்குவது என்று செயல்படுகிறார்கள். புகைப்படங்கள் கணினியின் மூலம் மாற்றம் செய்யப்படுகின்றன. எப்போதோ எடுத்த புகைப்படங்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன. ஜுர
வேகத்தில் இவை பரப்பப்படுவதால் இவற்றைத் தடுப்பதும் அசாத்தியமாகி விடுகிறது.
அச்சு ஊடகம், காட்சி ஊடகம் போன்றவற்றில் எந்தவொரு செய்தி பெறப்பட்டாலும் அது நிருபர், தலைமை நிருபர், உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், ஆசிரியர் என்று பல தணிக்கைகளுக்கும், உறுதிப்படுத்தலுக்கும் பிறகுதான் வெளியிடப்படுகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் எந்தவித வரைமுறையும் இல்லாமல், பொய்யும், அவதூறும் பரப்பப்படுகின்றன. தவறைச் சுட்டிக்காட்டுவதற்குள் அவை லட்சக்கணக்கானவர்களுக்கு மறுபதிவு செய்யப்பட்டு விடுவதால், பொய் உண்மையாக உலவுவதைத் தடை செய்ய முடியவில்லை.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆங்கில அகராதி, "உண்மைக்குப் பின்னால்' (டர்ள்ற் பழ்ன்ற்ட்) என்கிற வார்த்தையை இந்த ஆண்டுக்கான சர்வதேச வார்த்தையாக அறிவித்திருக்கிறது. உண்மைக்கும் பொய்க்கும் இடையேயுள்ள நிலையைத்தான் இந்த வார்த்தை குறிக்கிறது. இது சமூக வலைதளச் செய்திகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் வார்த்தை.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூக வலைதளம் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. பொதுக் கருத்தை உருவாக்கு
வதில் பெரும் பங்கு வகிக்கிறது. முகநூல், கூகுள், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்றவை தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், பிடிக்காதவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பி அவ
மானப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதை எப்படி தடுப்பது என்பது குறித்த விவாதம்தான் இன்றைய உடனடித் தேவை!

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...