சசிகலாவை ஏன் சந்தித்தார் ஓ.பி.எஸ்?! -7 நாள் மௌனத்தின் பின்னணி
டெல்லியில் கடந்த 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கச்சத்தீவு விவகாரம் உள்பட 29 முக்கியக் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் மனு அளித்தார். 'விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' பிரதமர் உறுதியளித்தார். ஆனால், பிரதமருடனான சந்திப்பை வேறுவிதமாக கவனித்தது கார்டன் வட்டாரம். 'தம்பிதுரையைப் புறக்கணித்தது; பிரதமருடன் தனிப்பட்ட முறையில் விவாதித்தது' என ஓ.பி.எஸ்ஸின் நடவடிக்கைகளை, மன்னார்குடி உறவுகள் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லவில்லை. அதற்கேற்ப, அடுத்தடுத்து நடந்த வருமான வரிச் சோதனைகள், கார்டன் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
சேகர் ரெட்டி மீது கை வைத்தபோது, 'ஓ.பி.எஸ் வசமாக சிக்குவார்' என்றுதான் மன்னார்குடி தரப்பில் நினைத்தார்கள். ஆனால், ராம மோகன ராவை வளைத்த பிறகு, ஆட்டத்தின் சீரியஸை உணர்ந்து கொண்டார்கள். தலைமைச் செயலகத்திற்குள் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உடனடியாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், தற்போது வரையில் ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. 'எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்' எனத் தெரிவித்தவர்களுக்கும், முதல்வர் எந்த சிக்னலையும் காட்டவில்லை. 'அப்படியானால், ஓ.பி.எஸ் சொல்லித்தான் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறதா' என மன்னார்குடி உறவுகள் கொந்தளித்தார்கள். 'இனியும் ஓ.பி.எஸ் பதவியில் நீடித்தால், நம்மை முழுவதுமாக துடைத்துவிடுவார்கள்' என அஞ்சித்தான், முதல்வர் பதவிக்கு சசிகலாவைக் கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளன என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.
"பொதுக்குழுவில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படும் வரையில், சசிகலா மனதிற்குள் சிறு கலக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பிரதமரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், மரியாதை நிமித்தமாகக்கூட சசிகலாவை சந்திக்க ஓ.பி.எஸ் செல்லவில்லை. 'இப்படியே நீங்கள் தனித்திருந்தால், தொண்டர்கள் மத்தியில் வேறு மாதிரியான தோற்றம் தென்படும். பொதுக்குழு பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையிலாவது வாருங்கள்' என தலைமைச் செயலகத்தில் இருந்த ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட, கார்டன் விரைந்தார்" என விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், " மன்னார்குடி உறவுகளிடம் சரண்டர் ஆகும் முடிவில் பன்னீர்செல்வம் இல்லை. பிரச்னை இல்லாமல் பொதுச் செயலாளரை தேர்வு செய்வது குறித்துத்தான் ஓ.பி.எஸ்ஸிடம் விவாதித்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசியவர், 'தேனி மாவட்டத்து நிர்வாகிகளிடம் இதுபற்றிச் சொல்லிவிட்டேன். நல்லபடியாகவே பொதுக்குழு நடக்கும்' எனத் தெரிவித்தார். முதலமைச்சர் பதவி பற்றியோ, ரெய்டு பற்றியோ விவாதம் நடக்கவில்லை. பொதுக்குழுவில் எதிர்ப்பு கிளம்புமா என முதலமைச்சர் என்ற முறையில் அவரிடம் பேசியிருக்கிறார்கள்.
கட்சியைப் பொறுத்தவரையில், சசிகலா முன்னிறுத்தப்படுவதில், அவருக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவதை, அவருடைய ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. 'பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஓ.பி.எஸ்ஸுக்கு உள்ளதாக என்பதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும்' என ஸ்டாலின் கருத்து தெரிவித்ததில், சசிகலாவுக்கு உடன்பாடில்லை. அப்படி ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாகத்தான் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் தோற்றுவிட்டால், ஆட்சி கலையும் என்பதையும் அமைச்சர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே,' முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் தானாக விலகி, சசிகலாவுக்கு இடம் கொடுக்க வேண்டும்' என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தார்கள். வருமான வரித்துறை சோதனை தொடங்கியதும், சசிகலாவை முன்னிறுத்திய அமைச்சர்களும் அடங்கிப் போனார்கள். கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள்தான் இது குறித்துப் பேசி வருகின்றனர். சட்டரீதியாக ஓ.பி.எஸ் பக்கம் அனைத்தும் தெளிவாக இருப்பதால், அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் முடிவில் அவர் இல்லை" என்றார் விரிவாகவே.
" டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கு முதல்நாள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார் ஓ.பி.எஸ். அவரிடம் பேசிய ஆளுநர், ' உங்களைத் தவிர, முதலமைச்சர் பதவிக்கு வேறு யார் முன்னிறுத்தப்பட்டாலும் அதை ஏற்க மாட்டேன். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு எதிரான சூழல் வந்தாலும், அ.தி.மு.கவுக்கு அடுத்து மெஜாரிட்டியாக இருக்கும் தி.மு.கவுக்கு வாய்ப்பை வழங்குவோம்' என உறுதியாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு உற்சாகத்தோடு டெல்லி கிளம்பினார். முதல்வர் மனதைக் கரைய வைக்கும் வகையில் சீனியர்கள் சிலர் கோட்டையிலேயே அவரை சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களிடம் பேசும் ஓ.பி.எஸ், 'நான் இப்போது அமர்ந்திருக்கும் பதவி என்பது அவர்கள் கொடுத்த வாய்ப்புதான். அவர்களுக்கு எதிராக ஒருநாளும் செயல்பட மாட்டேன்' எனத் தெரிவித்திருக்கிறார். சீனியர்களும் குழப்பத்தோடுதான் நடப்பவற்றைக் கவனித்து வருகிறனர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அளவிடுவதற்காக மத்திய அரசின் நிபுணர்கள் இன்று சென்னை வந்துள்ளனர். அதேநேரம், தமிழக அரசியலில் புயல் சின்னத்தை உருவாக்கும் வகையில் வருமான வரித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். புயல் கரையைக் கடக்கும் வரையில் கார்டன் வட்டாரத்தின் பதற்றம் நீடித்துக் கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment