11,124 கி.மீ. புல்லட்டில் பயணித்தால் என்ன நடக்கும்? #RoadTrip
"இமாச்சலப் பிரதேசத்தில் உதய்பூர் என்ற ஒரு சின்ன டவுன். இரவு பதினோரு மணியளவில்... நல்ல குளிர். பெளர்ணமி. தனியாக என் தண்டர்பேர்ட் 500-ல் போய்க் கொண்டிருந்தேன். புல்லட் பீட் பின்னணியில் ஒரு கிடார் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிப் பார்த்தேன். ரோட்டின் ஓர் ஓரத்தில் ஒரு பையன் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம் போனேன். அவனிடமிருந்து கிடார் வாங்கி எனக்குத் தெரிந்த சில பாடல்களை பாடி, வாசித்தேன். அதன் பின், அவன்... அவனுடைய விரல்கள் கிடாரில் பெரிய மேஜிக் செய்தன. அந்த இரவை அங்கேயே அப்படியே பாட்டு பாடி கழித்தோம். என் பெயர் அவனுக்குத் தெரியாது, அவன் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால், இருவருக்குமே அது ஒரு அற்புதமான இரவு...இது தான் பயணத்தின் அழகு " என்று தன் பயணக் கதையை கிக் ஸ்டார்ட் செய்கிறார், கோவையைச் சேர்ந்த சாய்க் குமார்.
இவர் சமீபத்தில் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி டூ வட உச்சி ஜம்மு காஷ்மீர் வரை தனியாக ஒரு பைக் பயணம் போய்வந்திருக்கிறார். மொத்தம் 77 நாட்கள்... 11, 124 கிமீட்டர்கள் என அவர் கடந்து வந்த கதையை புல்லட் வேகத்திலேயே சொல்லத் தொடங்குகிறார்...
எதற்காக இந்தப் பயணம் ?
" பயணம் தொடங்கும் பலரும் சொல்லும் அதே காரணம் தான் என்னுடைய தொடக்கமும். வேலை... ஒரே மாதிரியான வாழ்க்கை முறை... அதை உடைக்க வேண்டும் என்ற ஆர்வம், பயணம் மீதான ஆசை. ஆனால், இதற்கு மேல் ஒரு பயணியாக எனக்கு ஒரு முக்கிய குறிக்கோள் இருந்தது. அது என்னை நான் புரிந்து கொள்வது... அதற்கேற்றார் போல இந்த பயணம் எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது".
தனியாக பயணம் செய்தது எப்படி இருந்தது?
"நான் அடிப்படையிலேயே கொஞ்சம் ரிசர்வ்டான ஆள் தான். எனக்குத் தனியாக இருப்பது பிடிக்கும். அதனால், தனியாக பயணித்தது பெரிய கஷ்டமாக இல்லை. மேலும், தனியாக பயணித்தாலும் இதில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். குஜராத்தின் ரேன் ஆஃப் கட்ச் பகுதியில் இருந்த ஒரு ராணுவ வீரர்... பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் ரொம்ப தனிமையில் இருந்தார். என்னைப் பார்த்ததும் பேச ஆரம்பித்தவர், தொடர்ந்து 4 மணி நேரம் விடாமல் பேசினார், அதே போல், டில்லியில் ஒரு கஷ்மீர் நண்பன் கிடைத்தான்... கஷ்மீரியாக அவன் படும் வேதனைகள், அவன் வாழ்வின் பிரச்சினைகள்... அதே போன்று சில இஸ்ரேலிய ஊர்சுற்றிகளோடு ஒரு வாரம் பயணம் செய்தேன். பயணத்தை தனியாக தொடங்கினாலும், பயணம் தனிமையானதாக இல்லை. பயணத்தில் பார்க்கும் இடங்கள் அழகு என்றால், பழகும் மனிதர்கள் பேரழகு..."
உங்கள் பயண நண்பன் தண்டர்பேர்ட் 500 குறித்து சொல்லுங்களேன் ?
"பொதுவாகவே இந்தியாவில் தொலை தூரப் பயணங்களின் அடையாளமாகப் பார்க்கப்படுவது புல்லட்கள் தான். அதன் அடிப்படையிலேயே தண்டர்பேர்ட் 500யைதேர்ந்தெடுத்தேன். ஆனால், பலரும் அதற்கான சர்வீஸில் பிரச்சினைகள் இருப்பதாக சொன்னார்கள். அதற்கேற்ற மாதிரியே வண்டி எடுத்ததில் இருந்தே பல பிரிச்சினைகள் இருந்தன. வண்டியில் இருந்த பிரச்சினைகளைவிடவும், சர்வீஸ் ஆட்களோடு போராடுவதே பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனால், எல்லாம் முடிந்து பயணம் தொடங்கிய பிறகு, வண்டியில் பெரிய தொந்தரவுகள் இல்லை. மைலேஜும் 28யில் இருந்து 30 வரை கிடைத்தது."
பயணத்தின் போது ஏதேனும் விபத்துகள்?
"குஜராத்தின் புஜ் பகுதியில் வண்டியை நிறுத்தி வைத்திருந்த போது, ஒரு பையன் ரிக்ஷாவில் வந்து மோதிவிட்டான். அதில் சைலன்சர், ஹேண்டில் பார், க்ராஷ் பார் என அனைத்தும் வளைந்துவிட்டன. பின்னர், அதையெல்லாம் சீர் செய்தேன். ரொடாங் பாஸ் ரோடு வழியாக லேவிற்கு சென்று கொண்டிருக்கும் போது, உள்ளூரைச் சேர்ந்த ரெண்டு பேர் எனக்கு முன்னாடி போய்க் கொண்டிருந்தார்கள். சரியாக பிரேக் பிடிக்காமல், ஸ்லிப்பாகி என் கண் முன்னாடியே பல நூறு அடி பள்ளத்தில் விழுந்து இறந்தார்கள். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது."
பயணத்தின் ஏதாவது ஒரு சமயத்தில் " ஏண்டா... பயணம் கிளம்பினோம்..." என்று வருந்தியது உண்டா?
"நிச்சயமாக இல்லை. நான் ஆபிஸில் ஏசி ரூமில் உட்கார்ந்து பயணம் குறித்து யோசித்ததைவிட, நிஜப் பயணம் கடுமையாக இருந்தது உண்மை தான். ஆனால், அதற்காக நான் எந்த தருணத்திலும் வருத்தப்படவில்லை."
உங்களின் பயண வழி என்னவாக இருந்தது?
"கோவையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக மும்பை சென்றடைந்தேன். அங்கிருந்து குஜராத், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு கஷ்மீர்... பின்பு, திரும்பும்போது டெல்லி, ஹைதரபாத், பெங்களூரு, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்சூர் கடைசியாக, ஆரம்பித்த கோவையில் வந்து முடித்தேன்."
பயணத்தில் சவாலாக இருந்த பகுதிகள் என்ன?
"உறுதியாக லே டூ மணாலி தான். கடுமையான பாதை. குளிர். ஆங்காங்கே நிலச் சரிவு. கொஞ்சம் ஸ்லிப்பானாலும் கூட, மரணம் நிச்சயம். அதில் ஓட்டியது பெரிய சவால். அதுமட்டுமில்லாம, கிட்டத்தட்ட 18 ஆயிரம் அடி உயரம்... ஆக்சிஜன் அளவு மிக குறைவு. ஒரு கட்டத்தில் ஆல்டிட்யூட் மெடிக்கல் சிக்னஸ் ( ALTITUDE MEDICAL SICKNESS ) வந்துவிட்டது. மயக்க நிலையிலேயே கிடந்தேன். அங்கு நான் தங்கியிருந்த கூடாரத்தின் ஓனர்கள் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். என்னோடு பயணித்த சக பயணிகளும், எனக்காக அவங்களோட பயண திட்டத்துல மாற்றம் செய்துட்டு எனக்கு உடல் தேறும் வரை என்னோடு இருந்தாங்க. அந்த நாட்களையும், அந்த மனிதர்களையும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்."
மொத்த பயணத்துக்கான செலவு எவ்வளவு?
"பயணத்தோட மொத்த செலவு 1.3 லட்சம். இதில் பெரும்பாலான பணம் பெட்ரோலுக்குத் தான் செலவானது. வண்டியோட டேங்க் கெபாசிட்டி 20 லிட்டர். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் டேங்கை நிரப்பினேன். தோராயமாக ஒரு நாளைக்கு 300 கிமீட்டர் பயணித்தேன். "
பயணத்திற்குப் பின் உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்?
"மனிதர்களை பொதுவாக அவர்களின் உடைகள், நடவடிக்கைகள் வைத்து ஜட்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்தியுள்ளேன். இவர் நம்மை ஏமாற்றிவிடுவாரோ என்ற பயத்திலேயே பிறரிடம் பழகும் எண்ணம் மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்தப் பயணத்தில் நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் அவ்வளவு அழகானவர்கள். எல்லாவற்றிருக்கும் மேலாக, என்னுடைய தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கிறது."
இப்படி ஒரு பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குள் போவது சாத்தியமா?
"கஷ்டம் தான் . ஆனால், வேறு வழியில்லை. வாழ்க்கைக்குப் பணம் அவசியமாகிறதே... இந்த பயணங்களின் நினைவுகளோடு, அடுத்த பயணத்திற்குத் தயாராக பணம் சேர்க்க தொடங்கியுள்ளேன். வேலை போரடிக்கிறது... வாழ்க்கைப் பிடிக்கவில்லை என்ற காரணங்களைக் காட்டி பயணம் கிளம்புபவர்களுக்கு ஒரேயொரு விஷயம்... பயணம் ஒரு " எஸ்கேபிசம்" கிடையாது. இதிலிருந்த தப்ப, பயணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. பயணம் எவ்வளவு அழகானதோ, அதே அளவிற்கு கடினமானதும் கூட..." என்று சொல்லி முடிக்கிறார் சாய்க் குமார். அவர் இருக்கும் திசையில் தலைசாய்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த நீல நிற தண்டர் பேர்ட்...
- இரா. கலைச் செல்வன்.
No comments:
Post a Comment