Thursday, December 29, 2016

பயிரை மேயும் வேலிகள்

By வாதூலன்  |   Published on : 29th December 2016 02:01 AM 
|  
கடந்த சில தினங்களாகத் தின ஏடுகளில் வெளியாகும் செய்திகள் மிக்க அதிர்ச்சி தருபவையாக உள்ளன. தமிழகத்தில் சில பெரும்புள்ளிகளின் இல்லத்தில் பல கோடிக்கும் மேல் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு முன், பெங்களூருவிலும், தில்லியிலும் இத்தகைய சம்பவங்கள் நேர்ந்துள்ளன. ஆனால், அங்கெல்லாம் தொகை குறைவு.
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அமலாக்கத் துறை கண்டுபிடிப்பதும், அவை பற்றிச் செய்திகள் வருவதும் இயல்புதான். அதுவும், கணக்கில் காட்டப்படாத, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொகைக்கு உச்சபட்ச வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
ஆனால் வேதனையான உண்மை என்னவென்றால், பிடிபட்டவர்களின் இல்லத்திலிருந்து பல கோடிக்கும் மேல் புதிய நோட்டுகள் கைப்பற்றிருப்பதுதான். இது எப்படிச் சாத்தியமாயிற்று?
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகப் பணம் படுத்தும் பாட்டையும், பொதுமக்கள் அவதிப்படுகிற காட்சியையும் சகல ஊடகங்களும் வெளியிட்டுக் கொண்டே வந்தன.
வங்கிக் கிளையொன்றில் வரிசைக் கிரமப்படி தொகை கொடுத்து வந்த காசாளர், "இனிமேல் கிடையாது; இரண்டு மணிக்கு மேல் வரவும்' என்று சட்டென்று நிறுத்தி விட்டார். மாதா மாதம் பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து வந்த என் நண்பர், இப்போது வருகிற ஜனவரி மாதத்துக்கும் சேர்த்து கொடுத்து விட்டு, 2000 ரூபாய் நோட்டை மாற்றினார்.
இதேபோல் பக்கத்து தள இல்லத்தரசி, காய்கறிக் கடையில் தேவைக்கு அதிகமான காய்கறிகளை வாங்கி இரண்டாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் நோட்டுகளைப் பெற்றார்.
வங்கிகளைப் பற்றியே சொல்ல வேண்டியதே இல்லை. அதுவும், அரசும் நிதி அமைச்சகமும் மாறி மாறி விடுக்கிற அறிக்கைகளைப் படித்து, வாடிக்கையாளர்கள், அதிகாரிகளைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கிறார்கள்.
ஆனால், வங்கிக் கிளையில் போதுமான இருப்பு தொகை இல்லை; பல அரசு வங்கிகளின் ஏ.டி.எம்.கள் வேலை செய்வதில்லை. ஓரிரு தனியார் வங்கிகளிலும், பாரத் ஸ்டேட் வங்கியிலும் மட்டும்தான் ஏ.டி.எம். வேலை செய்கிறது; அதேசமயம் அங்கு காத்திருக்கிற வரிசை சொல்லி மாளாது.
நிலைமை இவ்வாறு இருக்க, கோடிக்கணக்கில் புத்தம் புது நோட்டுகளைச் சிலர் எவ்விதம் பதுக்குகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அச்சடிக்கப்பட்ட புது நோட்டுகள், ரிசர்வ் வங்கி மூலம் பாதுகாப்பான வாகனம் மூலம் ஏற்றப்பட்டு, வங்கிகளின் பணப் பெட்டகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அவர்கள் கிளைகளின் தன்மைக்கு ஏற்ப- குடியிருப்புக் கிளை, வியாபாரக் கிளை- தொகையை விநியோகம் செய்கின்றன. இதுதான் நடைமுறை. தனி நபர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய்க்குப் புது நோட்டுகள் வைத்துள்ளார் என்றால், எங்கே கோளாறு?
ஏற்கெனவே இந்த விஷயத்தில், மைசூர் ஸ்டேட் வங்கியும், ஆக்ஸிஸ் வங்கியும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கொல்கத்தாவில், வாடிக்கையாளர்களுடன் இணைந்து போலி ஆவணங்களுடன் நடப்புக் கணக்கு துவக்க தனியார் வங்கி உதவி செய்யப் போக, அவர் பிடிப்பட்டிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, பிரபல ஏட்டில் முன்னாள் பிரதமர் இந்த பண மதிப்பு நீக்கம் குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். வேறொரு ஆங்கில ஏட்டில், 1946 ஜனவரியில் இதே போல நிகழ்ந்ததை ஒப்பிட்டு கட்டுரை வந்துள்ளது. ஜனதா ஆட்சியில் 1978-ஆம் வருடம் பண மதிப்பு குறைந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
ஒரு சிலர், பிரதமர் எடுத்த அதிரடி முடிவை, இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய அவசர நிலைமையுடன் ஒப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. இரண்டும் இரவில் அறிவிக்கப்பட்ட முடிவு என்பதைத் தவிர வேறு ஒற்றுமையில்லை. அவசர நிலையின் போது, தேசத் தலைவர்கள் கைதானார்கள்; பத்திரிகை தணிக்கை இருந்தது. வட இந்தியாவில் சஞ்சய் காந்தியின் அத்துமீறல்கள் இருந்தன.
இப்போது மோடி எடுத்த முடிவில் ஓர் உயரிய நோக்கம் உள்ளதென்று அனைவரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால், நடைமுறைப்படுத்துவதில்தான் மைய அரசு தெளிவின்றி குழம்பிப் போயிருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லாவிடில் வாரம் ஒரு அறிக்கை வருமா?
முன்னாள் நிதி அமைச்சர் கூறியது ஞாபகம் வருகிறது. "ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்தவர்கள், 2000 ரூபாயை அச்சடிப்பானேன்? இதைப் பதுக்க மாட்டார்களா?' என்ற கேள்வி எழுப்பினார். உள்ளபடிக்கே, அச்சடித்த ஈரம் காயுமுன் புது நோட்டுகளைப் பண முதலைகள் பதுக்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் நிதி அமைச்சர், பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு - அதாவது அட்டை மூலம் செய்யப்படுகிற - சில சலுகைகள் அறிவித்துள்ளார். இவை நடுத்தர மக்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று தெரியவில்லை. மாறாக, கடன் அட்டை மூலம் செய்கிற பரிவர்த்தனைகள், இப்போது ஓரளவு அதிகரித்து இருப்பதால், கடன் அட்டையின் வரம்பை உயர்த்தலாம்; அதற்கான நடைமுறைகளைத் தளர்த்தலாம்.
வீட்டுக்குக் காவலிருக்கிற காவலாளியே, திருட்டில் ஈடுபட்டால், வேலி பயிரை மேய்கிறது என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். மோசடி நபர்களுடன் கூட்டு சேர்ந்து தவறான வழிகளில் செல்லுகிற வங்கி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...