மோடி சொன்ன அந்த நாள் வந்துவிட்டது: இதுவரை நடந்தது என்ன?
புது தில்லி: நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த அன்றைய தினம், கையில் வெறும் 500 ரூபாய் வைத்திருந்தவர்கள் முதல், ரூ.500 கோடி வைத்திருந்தவர்கள் வரை அனைவருமே கலக்கம் அடைந்தனர்.
டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.
பிரதமர் மோடி கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிகிறது. ஆம், மோடி சொன்ன அந்த நாள் வந்து விட்டது. இதுவரை எந்த அரசும் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த மக்கள், மோடியின் நடவடிக்கைக்கு மனதளவில் நிச்சயம் ஆதரவு அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
வங்கியில் கால்கடுக்க நிற்கும்போது வேதனை தெரிவித்தாலும், நிச்சயம் இந்த நடவடிக்கையால் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்பினார்கள். அதனால்தான், பெரிய அளவில் இதுவரை எந்த அசம்பாவிதங்களும், வன்முறைகளும் அரங்கேறவில்லை.
அன்றைய தினம் முதல் இதுவரை மோடியின் நடவடிக்கையால் நடந்தது என்னவென்று பார்க்கலாம்.
•நவம்பர் 10ம் தேதி முதல் அம்மாத இறுதி வரை சுமார் 1.77 லட்சம் பேர், தாங்கள் வங்கிகளில் வாங்கிய ரூ.25 லட்சம் வரையிலான கடன் தொகைகளை பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அடைத்துள்ளனர். இதன் மூலம் பெறப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.50 ஆயிரம் கோடி.
• பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அதிகளவிலான வருமான வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
•வங்கிகளில் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்த சுமார் 5 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
• நவம்பர் 8ம் தேதி முதல் நாடு முழுவதும் 983 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
• நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையினரால் ரூ.4,172 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
•பல பெரும் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்கள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
• சரியாக சொல்ல வேண்டும் என்றால், தேன் கூடு போன்ற கருப்புப் பணப் பதுக்கல், மோடியின் இந்த நடவடிக்கையின் மூலம் கல்லெறியப்பட்டு கலைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
நிலைமை சரியாக இன்னும் 50 நாட்கள் ஆகும் என்ற காலக்கெடு வேண்டுமென்றால் சற்று நீட்டிக்கப்படலாம். ஆனால், உண்மையில் நடந்திருப்பவை அனைத்தும் நல்லவையே.. இனி நடக்கப்போவதும் நல்லவையாகவே இருக்கும் என்று நம்புவோம். சாமானியனின் இந்த நம்பிக்கைதான் இந்த நடவடிக்கையின் உண்மையான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment