சசிகலாவைச் சந்திக்காத ஓ.பி.எஸ்.! -பின்னணி என்ன?
தமிழக அமைச்சர்களின் முகங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. தலைமைச் செயலாளரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டில் சோதனை என வருமான வரித்துறையினர் உறக்கமே இல்லாமல் சோதனை நடத்துகின்றனர். 'ரெய்டின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருக்கலாம் என கார்டன் தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
வேலூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சோதனையில், அமைச்சர்களுக்கு இணையாக ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் ஆகியோரிடம் ஆவணங்களும் தங்கமும் பிடிபட்டிருக்கிறது. 'முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு பிறகே, வருமான வரித்துறை சோதனை வேகமெடுத்தது' என கார்டன் வட்டாரத்தில் உறுதியாக நம்புகிறார்கள். பிரதமரைச் சந்திக்க ஓ.பி.எஸ்ஸுடன் தம்பிதுரையும் உடன் சென்றார். ஆனால், தம்பிதுரை வருவதை பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை. ஓ.பி.எஸ் மட்டுமே பிரதமரை சந்தித்தார். தமிழகத்தின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தாலும், ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் இடையூறுகளைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, கார்டன் தரப்பில் இருந்து வரும் நெருக்குதல்களையும் விவரித்திருக்கிறார். அதன் விளைவாகவே, ராம மோகன ராவ் உள்பட கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களை வளைத்தது வருமான வரித்துறை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக, ஓ.பி.எஸ் உள்பட அ.தி.மு.கவின் ஐவரணியில் இருந்த சிலரது வீடுகளில் கார்டன் டீம் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய உறவினர்கள் ஆகியோரது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, தி.மு.க தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டும், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்தப் பதிலும் சொல்லவில்லை. இந்த ரெய்டின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் உள்பட சிலர் இருந்தார்கள். அவர்கள் மூலமாக ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்கிறார் ஓ.பி.எஸ். தேர்தல் நேரத்தில் தன்னை பழிவாங்கியவர்களை, இப்போது பழிவாங்கத் தொடங்கிவிட்டார்.
டெல்லிக்குச் சென்றிருந்தபோது, நடக்கப் போகும் விஷயங்களை ராம மோகன ராவ் அறிந்து வைத்திருந்தார். எப்படியாவது ரெய்டு நடவடிக்கையில் இருந்து தப்பிவிட வேண்டும் என சில காரியங்களில் இறங்கினார். எதுவும் பலிக்கவில்லை. தலைமைச் செயலகத்திற்குள் நுழைவதற்கும் ஓ.பி.எஸ் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. சசிகலாவுக்கு நெருக்கமான ராம மோகன ராவ் குறிவைக்கப்படுவதை எதிர்பார்த்தே அவர் காத்திருந்தார். தற்போது பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான இளங்கோவனின் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. '51 கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும்' தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பாளராக இருந்து, கார்டன் வட்டாரத்திற்கு பாலமாக இருந்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை வளைப்பதன் மூலம் நேரடியாக மன்னார்குடி உறவுகளின் பரிவர்த்தனைகளை வளைக்க முடியும். அதன் அடிப்படையிலேயே சோதனை தீவிரமாக நடந்து வருகிறது" என்றார் விரிவாக.
"டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு, தற்போது வரையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை. பொதுக்குழு கூட்டத்திற்கு முதலமைச்சர் என்ற முறையில் அவரும் பங்கேற்பார். 'அங்கு தனக்கு எதிராக சிலர் பேசலாம்' என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். இருப்பினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அரசுப் பணிகளை கவனித்து வருகிறார். மத்திய அரசின் நெருக்குதல்கள் அனைத்தும் கார்டனை மையமிட்டே நடக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், கார்டனின் அதிகார மையங்கள் டெல்லி வட்டாரத்தில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராம மோகன ராவ் கைது செய்யப்பட்டால், கார்டனின் கணக்கு வழக்குகளை முடக்கிவிடுவார்கள் என்பதால் மன்னார்குடி தரப்பில் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஜனாதிபதி மாளிகை வட்டாரம், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர்கள் என பல தரப்பிலும் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 'தங்கள் பக்கம் கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது' என தகவலைப் பரப்பி வருகின்றனர். ராம மோகன ராவ் கைது செய்யப்பட்டால், வருமான வரித்துறை அதிகாரிகள் கார்டனுக்குள் நுழைவது உறுதி. அதை எதிர்கொள்வது குறித்துதான் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது" என்கின்றனர் தலைமைக் கழக வட்டாரத்தில்.
வருமான வரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அச்சத்தோடு கவனித்து வருகிறார்கள் தமிழக அமைச்சர்கள்.
-ஆ.விஜயானந்த்
No comments:
Post a Comment