ஜன் தன் கணக்கில் ரூ.100 கோடி: அதிர்ந்த பெண் கடிதம் மூலம் மோடிக்கு தகவல்
பாரத ஸ்டேட் வங்கியின் மீரட் கிளையில் உள்ள தன்னுடைய ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி இருப்பதைக் கண்ட ஷீத்தல் யாதவ் என்ற பெண், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
தன்னுடைய கணக்கில் ரூ.100 கோடி வரவு வைப்பு குறித்து ஷீத்தல் யாதவ், வங்கி அதிகாரிகளிடம் சென்று பலமுறை புகார் கொடுக்க முயற்சித்தும், அதிகாரிகள் பிறகு பார்க்கலாம் என்று தொடர்ந்து அலைக்கழித்த பிறகு அவர் பிரதமர் அலுவகத்தை நாடியுள்ளார்.
இந்தப் புகாரை ஷீத்தல் யாதவின் கணவர் சிலேதர் சிங் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்திய ஸ்டேட் வங்கியின் மீரட், ஷர்தா சாலை கிளையில் ஷீத்தல் யாதவ் பெயரில் ஜன் தன் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. அதில் தன்னுடைய வரவு செலவுக் கணக்குகளை கவனித்து வந்தார் ஷீத்தல்.
டிரான்ஸ்ஃபார்மர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஷீத்தலின் கணவர். அங்கேயே பேக்கேஜிங் பிரிவில் மாதம் 5,000 ரூபாய் சம்பளத்துக்கு பணிபுரிகிறார் ஷீத்தல்.
கடந்த டிசம்பர் 18-ம் தேதி, அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றவர் அதிர்ச்சியால் உறைந்துள்ளார். அவரின் கணக்கில் ரூ.99,99,99,394 வரவு வைக்கப்பட்டிருந்தது.
உடனே வங்கிக்குச் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஷீதல் இதைக் கூற, அவரோ கிளை மேலாளர் வந்த பிறகு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை வங்கிக்குச் சென்ற ஷீத்தல் குடும்பத்துக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
உள்ளூர் வங்கி அதிகாரியிடம் பதில் கிடைக்காததால் மன உளைச்சல் அடைந்த சிங், படித்த நபர் ஒருவரை அணுகி பிரதமர் அலுவலகத்துக்கு மெயில் அனுப்ப உதவும்படி கேட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய சிங், ''டிசம்பர் 26 அன்று பிரதமர் அலுவலகத்துக்கு ஈ-மெயில் அனுப்பினோம். ஜன் தன் கணக்கில் ரூ. 50,000 பணத்தை மட்டுமே வரவு வைக்கமுடியும் என்ற நிலையில், அதில் ரூ.100 கோடி எப்படி வந்தது என்ற பிரச்சினையை பிரதமர் அலுவலகமே தீர்த்துவைக்க முடியும்'' என்று கூறியவர், தன்னுடைய ஏடிஎம் ரசீதுகளையும், வங்கி பாஸ்புக்கையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க வங்கியை நாடியபோது, அதிகாரிகள் பேச மறுத்துவிட்டனர்.
No comments:
Post a Comment