Saturday, December 24, 2016


செல்லாக்காசு : 50 நாட்களை நெருங்குகிறோம்... நிலைமை சரியானதா? #Demonetisation

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை கொண்டு வரப்பட்டு இன்றோடு (23.12 2016) 45 நாட்கள் ஆகிறது. அப்பாவி மக்கள் வங்கிகள் மற்றும் ஏ. டி. எம்-களில் வரிசையில் நிற்கும் நிலை மாறவில்லை. முதலில் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்றார்கள். ஒரு வாரம் என்றார்கள், கடைசியாக 50 நாட்களில் சரியாகி விடும் என்று கூறினார்கள். தற்போது 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இன்னும் நிலைமை சரியான பாடில்லை. பணம் இருக்கும் ஏ.டி.எம்-களைத் தேடி மக்கள் அலைகின்றனர். அதே போன்று வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை கிரடிட் ஆகாமல் பவுன்ஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 500,1000 ரூபாய் மட்டும் செல்லாக்காசு ஆக மாறவில்லை. சாதாரண மனிதர்களின் வாழ்கையும் தான். இது குறித்து வங்கியிலும் ஏ.டி.எம் - களிலும் நின்றிருந்த மக்களிடம் பேசினோம்.

செக் பவுன்ஞ்ச் அவமானம் ...

எழும்பூரில் இந்தியன் வங்கி வாயிலில் காத்திருந்த ரேணுகாவிடம் பேசினோம். "கடந்த மாதம் 23-ம் தேதி காசோலை டெபாசிட் செய்தேன். இன்னும் என் கணக்கில் கிரெடிட் ஆகவில்லை. நான் மற்றவர்களுக்கு கொடுத்த செக்-கள் பவுன்ஞ்ச் ஆகிவிட்டன.கடன் கொடுக்க வேண்டியவர்கள் முன்பு கூனிக் குறுகி நிற்கின்றேன். மிக வேதனையாக உள்ளது. ஆன்லைன் ஆன்லைன் என்கிறார்கள் இதனால் பாதிக்கப்படப் போவது முதியவர்கள்தான். அவர்களைப் பற்றி யாரும் யோசிக்கவில்லையா?" என்றார்.



ஏ.டி.எம் வாசலில் நின்றிருந்த பாலகிருஷ்ணனிடம் பேசினோம்."பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி எடுத்துக் கொள்வார்கள். ஐந்தும், பத்துமாக குருவி சேர்ப்பது போன்று சேர்த்து வைத்த பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்துச் செலவு செய்யும் நாங்கள், எப்படிப் பணம் எடுக்க முடியும். கார்டில் தேய்த்து செலவு செய்யுங்கள் என்கிறார்கள். கார்டில் பணம் அதிகமாக இருந்தால்தானே தேய்க்க முடியும் பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும்" என்றார்.

என் பணத்திற்கு நானே பிச்சைக்காரன்

"என்னுடைய பணத்துக்கு என்னையே பிச்சைக்காரனாக மாற்றியுள்ளார்கள். அதுதான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. செய்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு நாள் கணக்கில் வங்கி வாசலில் காத்திருக்கிறேன். அவமானமாக உள்ளது" என்கிறார் அப்துல்காதர்.

சிங்கப்பூரில் இருந்து வந்து தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் காத்திருக்கும் விநோத்திடம் பேசினோம். "ஆயிரம் ரூபாய் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாகத் திண்டாடுகிறேன். இதுவரை பணம் எடுக்க முடியவில்லை. இந்த நிமிடம் வரை பணம் எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்"என்று கலங்கினார்.

பணம் எடுக்க வந்த செல்வியிடம் பேசினோம்."தெருத் தெருவாக காலையில் இருந்து அலைந்து கொண்டிருக்கிறேன். ஒரு ஏ.டி.எம் கூட திறக்கப்படவில்லை. திறந்துள்ள ஏ.டி .எம்-கள் வேலை செய்யவில்லை. எனது அன்றாடப் பணிகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது. வேலை பார்ப்பேனா, குடும்பத்தை பார்ப்பேனா, பணத்துக்காக அலைவேனா சொல்லுங்க" என்றார்.

அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் !

"பாரிமுனையில் உள்ள நகைக்கடைகளில் 500 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் வங்கிகளில் கிடைக்கவில்லை. மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். ஆன்லைன், ஆன்லைன் என்று சொல்கிறார்கள். அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் சொல்லுங்க. முதலில் நாட்டு மக்களை வளரச் செய்துவிட்டு வங்கி கார்டுகளை வழங்குங்கள்" என்றார் வெங்கட்.

ஆன் லைன் ஆன் லைன் என்று சொல்கிறார்கள் படித்தவர்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். படிக்காத விவசாயிகளும், வேலைக்கார்களும் எப்படிப் பயன்படுத்த முடியும். அவர்கள் எங்கே போவார்கள் அவர்களுக்கு ஏது ஆன்லைன் வசதி, பாஸ்வேர்டு" என்றார் மல்ஹோத்ரா.



20 சதவிகித ஏ.டி.எம்-களே திறந்துள்ளது !

இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர்.சி பி கிருஷ்ணாவிடம் பேசியபோது,"நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏ.டி. எம்-களில் பணம் இல்லை. ஒரு நாளைக்கு நாலாயிரம் கோடி அச்சாகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உள்ள ஏ.டி.எம்-களில் 80 சதவிகித ஏ.டி.எம் - கள் மூடப்பட்டுள்ளன. 20 சதவிகித ஏ.டி.எம்-கள்தான் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

வரும் 30 -தேதி முதல் நிலைமை சரியாகும் என்று ஆர்.பி.ஐ சொல்லியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களே பணம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டச்சார்யாவே பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

பணப்பற்றாக்குறை வரும் 30-ம் தேதி முதல் சீராக வாய்ப்பில்லை. இந்தியாவில் பணத்தை அச்சடிக்க 4 அச்சகங்கள் மட்டுமே உள்ளது. இந்த அச்சகங்கள் மூலம் தேவையான 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் ஆகிவிடும்.

மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் 2,000 ரூபாய் நோட்டை ஏன் தருகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லை. 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நடைமுறையை ஏன் செயல்படுத்தவில்லை என்று நீதிபதிகளும் கேட்கவில்லை. இப்படி இருக்கிற சூழலில் நிலைமை எங்கே சரியாவது? மத்திய அரசு தனது போக்கை எப்படி மாற்றிக் கொள்ளும்" என்றார்.

50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடிவில்லை. 500 மற்றும் 1000 ரூபாய்க்கான தடை அறிவிப்பை திடீரென்று அறிவித்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோடி, அதனை சரிபடுத்தும் நடவடிக்கையை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு !

- கே.புவனேஸ்வரி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024